Published:Updated:

ட்ரம்ப் மிரட்டலும், ஒரு மணி நேரத்தில் மருந்துக்கான தடை நீக்கமும்!

Donald Trump
Donald Trump ( AP / Alex Brandon )

ட்ரம்ப் பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில் ஏற்றுமதி தடையை நீக்கி, அமெரிக்காவுக்கு இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்திருப்பது, சர்வதேச அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது கடினமான காரியம் என்று அரசியல் நிபுணர்கள் சொல்வார்கள். தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டுமென்ற ஆதிக்க மனப்பான்மை அவரிடத்தில் உண்டு என்கிற கருத்தும் உண்டு. உலகமே இன்று கொரோனா வைரஸால் பாதித்து, உயிர்களைப் பலி கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், குறிப்பாக அமெரிக்கா பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், தன் ஆதிக்க மனப்பான்மையை ட்ரம்ப் விட்டுவிடவில்லை.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

கொரோனா பாதிப்பு குறித்து இரண்டு நாள்களுக்கு முன், பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் தொலைபேசியில் விவாதித்ததாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``மோடியிடம் போனில் நான் பேசியபோது, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளைத் தரும்படி கேட்டேன். அமெரிக்காவிடம் நல்ல உறவைப் பேணி வரும் புதுடெல்லியிலிருந்து மீண்டும் எனக்கு எந்தத் தகவலும் வராதது ஆச்சர்யமாக உள்ளது. Hydroxychloroquine மற்றும் அதன் உப மருந்தான பாரசிட்டமால் மாத்திரைகள், மருந்துகளை இந்தியா தரவில்லையென்றால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்!’’ என்று எச்சரிக்கும் வகையில் பேசினார்.

தற்போது, கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருவதால், உள்நாட்டு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, ஹைட்ராக்சிக்ளோரோகுயின், பாரசிட்டமால் உள்ளிட்ட 26 மருந்து வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், ட்ரம்ப்பின் மிரட்டலையடுத்து 24 மருந்து வகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஒரே மணி நேரத்தில் மத்திய அரசு நீக்கியது. எனினும், உள்நாட்டுத் தேவை போகவே அமெரிக்காவுக்கு இந்த மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும்.

ட்ரம்ப் பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில் ஏற்றுமதி தடையை நீக்கி, அமெரிக்காவுக்கு இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்திருப்பது, சர்வதேச அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையா அல்லது ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு மோடி பயந்துவிட்டாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்தக் கேள்விக்கு மனிதாபிமான அடிப்படையில்தான் அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்புவதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொல்லப்படுகிறது. இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கான தேவை, இருப்பை கணக்கில் கொண்டு எஞ்சியவற்றையே வெளிநாடுகளுக்கு அனுப்பும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

எந்த பொறுப்புள்ள அரசும் முதலில் தன் நாட்டு குடிமக்களின் நலனில்தான் அக்கறைகொள்ளும்
இந்திய வெளியுறவுத்துறை

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்த்தவா கூறுகையில், ``ஹைட்ராக்சிக்ளோரோகுயின், பாரசிட்டமால் மருந்துகளுக்கு இந்தியாவிடம்தான் லைசென்ஸ் உள்ளது. நம்மை நம்பித்தான் நம் அண்டை நாடுகளும் உள்ளன. அமெரிக்கா மட்டுமல்ல உலகில் பெருந்தொற்றால் பாதிக்கப்படும் மற்ற நாடுகளுக்கும் இந்த மருந்துகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம். எந்த ஒரு பொறுப்புள்ள அரசும் முதலில் தன் சொந்த நாட்டு மக்களின் நலனில்தான் அக்கறைகொள்ளும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அரசு தரப்பிலான இந்த விளக்கம், ட்ரம்ப் மிரட்டல் குறித்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. அதற்குக் காரணங்களும் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்த சமயத்தில், கடந்த மார்ச் 3-ம் தேதி, இந்திய அரசு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உள்ளிட்ட 26 மருந்துகளின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. அதோடு, டெஸ்டிங் கிட்ஸ், வென்டிலேட்டர், என் 95 மாஸ்க் போன்றவற்றை ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில், மலேரியாவைக் கட்டுப்படுத்த ஹைட்ராக்சிக்ளோரோகுயின்தான் பெரிதும் உதவியது. இந்த மாத்திரை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருப்பதாக அடிக்கடி ட்ரம்ப் கூறிவந்தார். அமெரிக்காவில், கொரோனா மக்களைக் கொன்று குவிப்பதை பார்த்த ட்ரம்ப், மிரண்டுபோய்தான் இந்தியாவிடம் உதவி கேட்டார்.

``கமிஷன் ஒருபுறம்… பழைய பகை மறுபுறம்!” - விஜயபாஸ்கருக்கு வில்லங்கமான விவகாரங்கள்!

இந்தியாவிலும் கொரோனா மிரட்டிவருவதால், முடிவெடுக்க மத்திய அரசு தாமதித்தது. அதற்குள் ட்ரம்ப்பிடமிருந்து மிரட்டல் வந்துவிட்டது. அமெரிக்கா போன்று இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை
ட்ரம்ப் `கேம்-சேஞ்சர்' என்று குறிப்பிட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உண்மையில் எந்த நோய்க்கான மருந்து? - ஓர் அலசல்

அமெரிக்காவில் 3,00,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான செயலர் அலீஸ் ஜி. வெல்ஸ் கூறுகையில், ``இந்தியா, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி. முக்கியமாக மருந்து உற்பத்தித்துறை உட்பட. இந்தத் தருணத்தில், அமெரிக்காவின் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிறநாடுகளோடு நட்பு என்பது பதிலடி கொடுப்பதல்ல. மருந்துகள் விஷயங்களில் பிற நாடுகளும் நாம் உதவ வேண்டும்தான். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் விஷயத்தில் இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை மும்பையைத் தலைமையகமாகக் கொண்ட இப்கா நிறுவனம், 82 சதவிகிதம் தயாரிக்கிறது. அகமதபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம், 8 சதவிகிதம் உற்பத்தி செய்கிறது. வேல்லாஸ் பாராமெடிக்கல்ஸ், டார்ரென்ட் மற்றும் ஓவர்சீஸ் ஹெல்த்கேர் நிறுவனங்களும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளைக் குறைந்த அளவு தயாரிக்கின்றன. மாதம் ஒன்றுக்கு 10 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் ரூ. 152.80 கோடி மதிப்புக்கு இந்த மாத்திரைகள் விற்பனையாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு