Published:Updated:

`கொரோனா வைரஸ் பீதி..!' - ஈரானில் தற்காலிகமாக விடுதலை செய்யப்படும் 70,000 கைதிகள்

சிறைக் கூடம்
சிறைக் கூடம் ( Representational image )

கொரோனா பாதிப்பு விலகிய பிறகு, விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் சிறை திரும்ப வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக , ஈரானில் 70,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை ஈரான் நாட்டு நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரெய்ஸி தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரபூர்வ இணையதளமான மிசான் கூறியுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சீனா, இத்தாலி நாடுகளையடுத்து, மேற்கு ஆசிய நாடான ஈரானில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் பாதிப்பு
கொரோனா நோய் பாதிப்பு

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 237 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 7,161 பேருக்கு இந்த நோய் தொற்று உள்ளது. வளைகுடா நாடுகளில் மட்டும் 7,640 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் சிறைக் கைதிகளிடையே கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க அந்த நாட்டு நீதித்துறை முடிவெடுத்துள்ளது. அதே வேளையில், இவர்களால் சமூகத்துக்கு தீங்கு விளையாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன்; பெண்ணாக இப்பணி எனக்குப் பெருமை!'-  ‘ஒளவையார் விருது’ பெற்ற கண்ணகி

கொரோனா பாதிப்பு விலகிய பிறகு, விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் சிறை திரும்ப வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அரசியல் கைதிகளுக்கு இந்த விடுதலை பொருந்தாது.

மூர் கில்பர்ட்
மூர் கில்பர்ட்

ஈரானில் உளவு பார்த்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியை மூர் கில்பர்ட் விடுதலை செய்யப்பட மாட்டார் எனத் தெரிகிறது. 2018- ம் ஆண்டு டெகரானில் நடந்த கல்வி மாநாட்டில் பங்கேற்க வந்த மூர் கில்பர்ட்டை ஈரான் அரசை உளவு பார்த்ததாக அந்த நாட்டுப் புரட்சிப்படைக் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூர் கில்பர்ட் உளவு பார்த்தற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் இதுவரை ஈரான் அரசு வெளியிடவில்லை.

அடுத்த கட்டுரைக்கு