கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா: உலகை அழிக்கும் உயிரியல் ஆயுதமா?

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

அந்த வளர்சிதை மாற்றம்தான் இவ்வளவு வேகமாக அது பரவுவதற்கான திறனை நல்கியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பஸ் ஃபோட்டோஸ் என்ற நிறுவனமும் லார்ரி க்ளேமேன் என்ற வழக்கறிஞரும் இணைந்து, ‘உயிரியல் ஆயுதத்தை வடிவமைத்து வெளியே விட்டதாக’க் குற்றம் சாட்டி டெக்சாஸ் நீதிமன்றத்தில் சீனாமீது 20 டிரில்லியன் டாலருக்கு நஷ்ட ஈடு வழக்கு தொடுத்துள்ளனர்.

`கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம். அதைப் பொதுவெளியில் விடும் நோக்கம் சீனாவுக்கு இருந்ததோ இல்லையோ, இப்போது அது வெளியேறி உலகளவில் பெருஞ்சேதங்களை விளைவித்துவிட்டது. அமெரிக்காவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அமெரிக்காவின் சர்வதேச சட்டங்களை, உடன்படிக்கைகளைச் சீனா இதன்மூலம் மீறிவிட்டது’ என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உடன்படிக்கையின்படி, சீனா இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ள தால், இந்தக் குற்றச் செயலுக் குப்பதில் சொல்ல வேண்டு மென்று வழக்கறிஞர் லார்ரி க்ளேமேன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் சீனா மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதால், அதன் பரவல் தீவிரமடைந்தது என்பதை மறுக்க இயலாது. உலகளவில் தற்போது பரவியுள்ள இந்தத் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஒருவகையில் சீனாவின் நிர்வாகக் குறைபாடும் காரணம் என்றாலும், கொரோனா வைரஸ் சீனப் பரிசோதனைக் கூடங்களில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதம் கிடையாது என்பதே உலக ஆய்வாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்து.

இந்த வைரஸின் உட்கூறுகளைப் பிரித்தாய்வு செய்தபின்னர், க்ரிஸ்டியன்.ஜி.ஆண்டர்சன் என்ற ஆய்வாளர் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முடிவை நேச்சர் மெடிசன் ஆய்விதழில் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸில் பல்வேறு வகைகள் உள்ளன. இப்போது பரவிக்கொண்டிருக்கும் வைரஸின் மரபணுவை, மனிதர்களை பாதிக்கக்கூடிய சார்ஸ், மெர்ஸ், சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 உள்ளிட்ட மற்ற ஏழு வகைக் கொரோனாக்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில்தான், இப்போது பரவுகின்ற கொரோனா வகை, நிச்சயமாக பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்டதோ அல்லது உள்நோக்கத்தோடு மாற்றியமைக்கப்பட்ட உட்கூறுகளைக் கொண்டதோ கிடையாது என்ற முடிவுக்கு க்ரிஸ்டியன் மற்றும் அவரது குழு வந்தனர்.

இந்த முடிவிற்கு வரும் முன்பாக, அவர்கள் அதன் மரபணு வார்ப்புருக்களையும் வைரஸின் மேற்பரப்பையும் கவனித்தனர். அங்கு முனை மழுங்கிய முட்களைப்போல் நீட்டிக்கொண்டிருப்பவை, வைரஸ் எந்த அணுவோடு ஒட்டிக்கொள்ள நினைக்கிறதோ அதைக் கெட்டியாகப் பிடித்து ஒட்டிக்கொள்ளப் பயன்படுவதாகப் பதிவு செய்துள்ளனர். வைரஸின் உடலைச் சுற்றியுள்ள முனையற்ற முட்களைப் பயன்படுத்தி, அணுவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து சிறிது சிறிதாக அணுவுக்குள் நுழைகின்றன. வைரஸ் தன்னை இயற்கையாகத் தகவமைத்துக்கொள்ளும்போது நடைபெறும் மாற்றங்களில் தான் இப்படி உருமாறும் என்பதை உறுதிப்படுத்திய ஆய்வுக்குழு, COVID-19 இயற்கையாக வளர்ந்ததுதான், செயற்கையாக வடிவமைக்கப்பட்டது இல்லையென்பதை இது தெளிவு படுத்துவதாகப் பதிவு செய்துள்ளனர்.

க்ரிஸ்டியனுடைய குழுவினர் கொரோனா வைரஸைச் செயற்கையாக மாற்றியமைக்க முயற்சி செய்தபோது, அது மனித அணுக்களில் இப்போதுபோல் வீரியத்துடன் செயல்படவில்லை.

ஒருவேளை விஞ்ஞானிகள் இதைப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கியிருந்தால், மேலும் செயற்கையாக மாற்றியமைக்க முடியாதபடி அவர்கள் அதைத் தயாரிக்க மாட்டார்கள். அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் அவர்களால் இதே வைரஸை வைத்து மேலும் பல ஆய்வுகளையோ மாற்றங்களையோ செய்ய முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், இயற்கை அவர்களைவிடப் பெரிய அறிவாளி. கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் மாற்றியமைக்க முடியாத, தாமாக மட்டுமே வளர்சிதை மாற்றங்களை எய்தக்கூடிய முற்றிலும் வித்தியாசமான வைரஸாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

COVID-19

ஒருவேளை இது உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்டது இல்லையென்றால், வேறு எப்படிப் பரவியது என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்கு முன் பரவிய இதன் உறவுமுறை வைரஸ்களான சார்ஸ், மர நாய்களிடமிருந்தும்; மெர்ஸ், ஒட்டகங்களிடமிருந்தும் பரவின. அதேபோலத் தான், இதுவும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. இது, வௌவால் மற்றும் எறும்புத்தின்னிக ளிடமி ருந்து பரவியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போது பரவிக்கொண்டிருக்கும் வைரஸ், வௌவால் மற்றும் எறும்புத்தின்னியிடமிருந்து சேகரித்த கொரோனா வைரஸ் வகையின் மாதிரிகளோடு பெரிதும் ஒத்துப்போவதால் இந்த முடிவுக்கு வைராலஜி நிபுணர்கள் வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வௌவால்களிடம் உருவான COVID-19, எறும்புத்தின்னிகளுக்கு வந்து அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மனித அணுக் களுக்குள் நுழைந்ததிலிருந்து மீண்டும் அது தன்னைத்தானே மேலும் பல வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டது. அந்த வளர்சிதை மாற்றம்தான் இவ்வளவு வேகமாக அது பரவுவதற்கான திறனை நல்கியுள்ளது.

இப்போது கிடைத்துள்ள இந்த ஆய்வு முடிவுகள், அடுத்து வரும் நாள்களில் இதைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் பேருதவி புரியும் என்று நம்பப்படுகிறது.

மனிதர்களுக்குள் வளர்சிதை மாற்றமடைந்து இதனால் வேகமாகப் பரவ முடிகிறது என்றால், எதிர்காலத்தில் இது இன்னும் வேகமாகப் பரவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர மனித உடலிலுள்ள அணுக்களில் அவை அடைகின்ற வளர்சிதை மாற்றங்களைக் கண்டறிய வேண்டும். அதற்கான வேலையில்தான் தற்போது வைராலஜி நிபுணர்கள் இறங்கியுள்ளனர்.

சீனா மேல் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட வழக்குக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு இருக்கிறது. இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியடையக்கூடிய, செயற்கையாக மாற்றியமைக்க முடியாத வகையில் ஒரு வைரஸ் உருவாக்கப்பட்டால் அதை மீண்டும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி மேம்படுத்தவோ, அதை அடிப்படையாக வைத்துப் புதிய வைரஸை உருவாக்கவோ முடியாது. க்றிஸ்டியன் குழு மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியும்கூட, கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி மையத்தில்தான் நடத்தப்பட்டது.

இதற்குமுன் ஏற்பட்ட சர்வதேச நெருக்கடிகளான 2008 பொருளாதார நெருக்கடி, 2014 எபோலா வைரஸ் போன்றவற்றின்போது போலவே, அமெரிக்கா தன்னைத்தானே உலகத் தலைவராகக் கருதிச் செயலாற்றியது. அதேபோல் இப்போதும் செயல்பட முயல்கிறது. ஆனால் இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகளோடு இணைந்து பணியாற்றுவதுதான் இப்போது அவசியம். அதை விடுத்து, தன்னுடைய சுயநலத்தின் மீது மட்டுமே அதன் கவனம் முழுவதும் இருப்பதாக உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டுகின்றன.

சாதாரணக் கண்களுக்குப் புலப்படாத ஆபத்தை மனித இனம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்து உலக நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதால் எந்த நன்மையும் விளைந்துவிடாது. அனைத்து நாடுகளும் தத்தம் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டு மொத்த மனித இனத்திற்குமான நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு உழைக்க வேண்டிய நேரம் இது.

மனித இனம் எத்தனையோ ஆபத்துகளைக் கடந்து வந்துவிட்டது. இதையும் கடந்து நிற்போம். அதற்கு நாம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும். இருப்போம்.