Published:Updated:

உண்மையிலேயே கொரோனா பாதிப்பு குறைவா... என்ன நடக்கிறது ஜப்பானில்?! #Corona

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக ஜப்பான் அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா காரணமாகத் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே சீனாவுக்கு அடுத்தபடியாக மக்களிடம் கொரோனா அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டது ஜப்பானில் (Japan) தான். ஆனால், இன்றைக்கு வரை மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு இருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி ஜப்பானில் கொரோனா பாதிப்பு பதிவாகியிருப்பது 1007 பேருக்கு மட்டுமே.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது நல்ல செய்திதான். ஆனால், கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக ஜப்பான் அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. வருகிற ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான்தான் நடத்தவிருக்கிறது. அதனால், கொரோனா அதிகமாகப் பரவுகிறது என்ற செய்தியால் அது தடைபடுமோ என்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை ஜப்பான் அரசு மறைக்கிறதோ என்ற சந்தேகமும் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஜப்பான்
ஜப்பான்
5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... ஆஸ்விச் வதைக்கூடம்!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கும் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவும், கொரோனாவுக்கான சோதனையை எவ்வாறு மேற்கொள்கின்றன என நிருபர் ஒருவர் எழுதியிருக்கிறார். அதன்படி, ஹாங்காங் ஏற்கெனவே 2003-ல் சார்ஸ் நோய்க்கு 300 பேரைப் பலிகொடுத்திருக்கிறது. விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணியும் பல கட்டப் பரிசோதனைக்குப் பின்பே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட பயணி இதுவரை கொரோனா பாதித்த பகுதிகள் எதற்கும் செல்லவில்லை என்று உறுதியளிக்கப்பட்ட பின்னரும், தினமும் இருமுறை வெப்பநிலையைச் சோதனை செய்ய வேண்டும். கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை விளக்கிய பின்னரே அனுமதிக்கின்றனர்.

Corona Check
Corona Check

இதன் பின்னரும் வெளிநாட்டுப் பயணிகள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், பயணிகள் வழிமுறைகள்படி நடக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்காணிக்கவும் எலக்ட்ரானிக் ப்ரேஸ்லெட்களைப் பொருத்துகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சீனாவுக்கு மிக அருகில் இருந்தும் தற்போது வரை 256 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது.

ஆனால், இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது ஜப்பான். அங்கு விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உடல் வெப்பநிலையை மட்டும் ஒரு கருவி சோதனை செய்கிறது. அதிகாரிகள் என்னவெல்லாம் செய்யக் கூடாது என விளக்குகிறார்கள். 14 நாள்களுக்கு வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள், அவ்வளவுதான். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் பயணிகளைக் கண்காணிக்க யாரும் இல்லை. இவ்வாறே ஜப்பானில் நடைமுறை இருக்கிறது.

ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவில் தினமும் 15,000 நபர்கள் சோதனையிடப்படும் நிலையில், ஜப்பானில் மார்ச் 17-ம் தேதி வரை மொத்தமே 14,525 நபர்கள் மட்டுமே சோதனையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் தினமும் 8,000 நபர்கள் சோதனையிடும் வகையில் பணிகளை விரைவுபடுத்துவோம் எனத் தெரிவித்துள்ளது ஜப்பான் அரசு.

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona
japan
japan

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அனைத்து நாடுகளும் தடை விதித்திருந்த நிலையில் ஜப்பான் மட்டும் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மேலும், 700 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு இருக்கும் எனக் கணிக்கப்பட்ட `டைமண்ட் க்ரூஸ்' (Diamond Cruise) கப்பலில் இருந்த பயணிகளையும் பெரிதாக எந்தத் தடையும் இன்றி நாட்டுக்குள் அனுமதித்தது உள்ளிட்ட, ஜப்பானின் நடவடிக்கைகளில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

ஆனால், மற்ற நாடுகளில் இருப்பதைப்போல ஜப்பானில் தொடுதல் மூலம் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது என்பது கிடையாது. அங்கு பொதுவான நடைமுறையே தொடாமல் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளுதல் முறையே. மக்களும் அங்கு விழிப்போடு இருக்கக்கூடியவர்களே. எனினும், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமா எனத் தெரியவில்லை.

கெஞ்சி ஷிபூயா (Kenji Shibuya)
கெஞ்சி ஷிபூயா (Kenji Shibuya)

ஜப்பானின் இந்த நடவடிக்கைகள் பற்றி லண்டனின் பிரபல கல்லூரிப் பேராசிரியரும் உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதாரக் கொள்கைகளின் முன்னாள் தலைவருமான கெஞ்சி ஷிபூயா (Kenji Shibuya) கூறுகையில், ``இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, ஜப்பான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் இனிதான் கொரோனா பரவத் தொடங்கும். இரண்டுக்குமே சாத்தியக்கூறுகள் இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுடன் ஒப்பிடும்போது வெறும் 5 சதவிகிதம் மக்களையே ஜப்பான் அரசு சோதனை செய்துள்ளது. ஆனால், எந்த இடத்தில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதோ, அந்த இடங்களில் மட்டுமே கவனம் செலுத்திக் கண்காணித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஜப்பானில் முதல் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்தே,

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் முன் மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையாக இருக்கத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு முகமூடிகள் அணிவது, சானிடைசர்கள் பயன்படுத்துவது மற்றும் தொடுதல் ஏற்படுத்தாமல் இருப்பது என் மக்களும் விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர் என்ற கூற்றும் முன் வைக்கப்படுகிறது. ஜப்பான் மக்களின் சுய ஒழுக்கம் உலகம் அறிந்ததே.

கடந்த செவ்வாயன்று ஜப்பான் சுகாதாரத்துறையில் இருந்த அதிகாரி ஒருவர் பேசியபோது, ``சோதனை உபகரணங்கள் நிறைய இருக்கிறது என்று அவற்றை உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் அச்சப்படுகிறார்கள் என்றும் அனைவரையும் சோதனை செய்யத் தேவையில்லை. எங்கள் சோதனைக் குழுவின் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், புதிய கொரொனா பாதிப்புகள் பதிவாகாத இடங்களிலும் பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் அரசு எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!

"கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருக்கின்றன" என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) தெரிவித்துள்ளார். தற்போது அமைதியான சூழலில் இருப்பதாக ஜப்பான் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த அமைதிதான் இப்படியே நீடித்தால் நலம்.

அடுத்த கட்டுரைக்கு