Published:Updated:

`என்ன செய்வதென்று தெரியவில்லை!' - இத்தாலியில் இறந்த சகோதரியின் உடலுடன் தவித்த தம்பி #Corona

லூகா
லூகா

``நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம். இத்தாலி அரசு எங்களை கைவிட்டு விட்டது” என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 1,35,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5,100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் தொடர்ந்து பதற்றநிலை நிலவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாக குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இத்தாலியில், இதுவரை 15,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் இருந்த ஒருவர் பாதிப்பு உறுதி செய்யப்படுவத்ற்கு முன்பு வீட்டிலேயே இறந்துள்ள செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலி
இத்தாலி
Luca Bruno

இத்தாலியுள்ள நேபிள்ஸ் எனும் நகரைச் சேர்ந்தவர், 47 வயதான தெரசா பிரான்சிஸ். இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இவரிடமும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பரிசோதனை மாதிரிகளையும் மருத்துவமனையில் கொடுத்துள்ளார். ஆனால், முடிவு அறிக்கை வருவதற்கு உன்பே உடல்நிலை மோசமடைந்து தெரசா இறந்துள்ளதாக கூறப்படுகிறது. வைரஸின் பயத்தால் அக்கம்பக்கத்தினரும் உள்ளூர் மருத்துவமனைகளும் அவரது உடலை எடுத்துசெல்ல உதவ மறுத்துள்ளனர்.

இந்நிலையில், தெரசாவின் சகோதரர் லூகா ஃபிரான்சிஸ் தன்னுடைய முகநூலில் உதவி தேவைப்படுவதை குறித்து வீடியோ ஒன்றை பேசி பகிர்ந்துள்ளார். அதில், ``என்னுடைய சகோதரி படுக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருக்குத் தேவையான இறுதி சடங்கைக்கூட என்னால் செய்ய முடியவில்லை. ஏனெனில், இங்குள்ள அனைவரும் என்னை கை விட்டுவிட்டனர் " என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

`கடைசியா அப்பா முகத்தைக்கூட பார்க்க முடியலையே..! - கொரோனா வார்டில் அட்மிட்டான கேரள இளைஞர் கண்ணீர்

வீடியோவில் தன்னுடைய சோதரியின் இறந்த உடலை காட்டியபடி தொடர்ந்து பேசும் லூகா, ``நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம். இத்தாலி அரசு எங்களை கைவிட்டு விட்டது. ஒற்றுமையுடன் நாம் வலிமையாக இருப்போம். இந்த வீடியோவை எல்லாரும் பகிருங்கள்” என்று உணர்ச்சிவசத்துடன் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர். இதனையடுத்து 36 மணி நேத்திற்கு பின்னர் பாதுகாப்பு உடைகளுடன் வந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு இறுதி சடங்கிற்கு எடுத்துசென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா
கொரோனா

பரிசோதனை முடிவுகள் தெரசாவுக்கு கொரோனா இருப்பதை உறுதிபடுத்தியுள்ளன. அவரது சகோதரர் லூகாவுக்கு வைரஸ் குறித்த அறிகுறிகள் இல்லை என்றாலும் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா குறித்த அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேபிள்ஸ் நகரத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தெரசா வலிப்பு நோயால் இறந்ததாக கூறியுள்ளனர். ஆனால், லூகா தன்னுடைய முகநூலில், ``பிரேத பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் கொரோனா குறித்த தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். லூகாவின் இந்த இழப்பிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

#CoronaUpdates `ஒற்றை இலக்க சீனா.. கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்..!' -கொரோனா ஸ்டேட்டஸ்
அடுத்த கட்டுரைக்கு