Published:Updated:

`பிரியாணியா... தடுப்பூசி போட்டா நாங்க கஞ்சாவே கொடுப்போம்!' - இது வாஷிங்டன் அதிரடி

சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூட்டம் சேர்க்கும் வகையில் ஆச்சர்யமூட்டும் சலுகைகளை அறிவித்துள்ளார்கள். அவற்றில் பல 'அடடே' ரகம்... சில 'அதிர்ச்சி' ரகம்!

உலகையே வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கொரோனாவுக்கு எதிராக இன்று நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். இருப்பினும், தடுப்பூசி பற்றிய வதந்திகளும் ஏராளம்... தயக்கங்களும் தாராளம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்களிடையே தடுப்பூசிக்கான ஆர்வம் குறைவாகவே உள்ளது.

தடுப்பூசியை எப்படித்தான் மக்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது? ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமாக யோசிக்கிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூட்டம் சேர்க்கும் வகையில் ஆச்சரியமூட்டும் சலுகைகளை அறிவித்துள்ளார்கள். அவற்றில் பல `அடடே' ரகம்... சில `அதிர்ச்சி' ரகம்!

Corona test -Represenational Image
Corona test -Represenational Image

சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியில் `கோவிட் இல்லாத கோவளம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு தன்னார்வ இளைஞர் குழுவினர் மேற்கொண்டுள்ள வித்தியாசமான முயற்சி நல்ல பலன் அளித்துள்ளது. அங்கு கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்களுக்கு பிரியாணி இலவசம். அது மட்டுமல்ல; குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், வாஷிங் மெஷின், தங்க நாணயம் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, மக்களின் எதிர்மறை எண்ணங்களைப் போக்கினர்.

நம் ஊரில் பிரியாணி என்றால் வெளிநாடுகள் எந்த அளவுக்கு இறங்கியிருக்கின்றன என்றால் ஆச்சர்யத்தைத் தாண்டி அதிர்ச்சியும் கிடைக்கும்! அதற்கு வெளிநாட்டுப் பத்திரிகைகளின் செய்திகளே சாட்சி!

தாய்லாந்து நாட்டின் அதிரடி தடுப்பூசி திட்டங்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகளை வெளியிட்டியிருக்கிறது `சிராங்கூன் டைம்ஸ்' இதழ்.

வடக்கு தாய்லாந்திலுள்ள சியாங் மாய் மாகாணத்திலுள்ளது மே சேம் மாவட்டம். இங்கு வாழும் கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள். எனவே, மக்களின் தேவையை அறிந்த மாவட்ட நிர்வாகம் இலவச பசு மாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

`தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்களில் வாரம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு ரூ.24,000 மதிப்புள்ள இளம் பசு மாடு ஒன்று வழங்கப்படும். 24 வாரங்கள் வரை இந்தச் சலுகை நீடிக்கும்’ என்று அறிவித்துள்ளது. இதேபோல தாய்லாந்தின் பிற மாகாணங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. அதில் தங்க நெக்லஸ், இலவச கூப்பன், ஊக்கத்தொகை போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொள்கிறவர்களுக்கு காபி, சினிமா டிக்கெட், தீம் பார்க் டிக்கெட் எனப் பல நாடுகளில் இலவசங்களை அள்ளி வழங்குகின்றனர். சில இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம் எனத் தாராளமயமாக இருக்கின்றனர். ஹாங்காங்கில் அதிரடிப் பரிசாக குலுக்கல் முறையில் வீடு பரிசாக வழங்கப்படுகிறது.

அடுத்து வருவது ஆடு, கோழி, பசு, எருமை, வீடு எல்லாம் அல்ல! அதாவது நாம் அமெரிக்கா நோக்கிச் செல்வோம். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் துப்பாக்கி பரிசு. இது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. என்ன கொடுமை சார் இது!

`இவையெல்லாம் ஜுஜுபி' என்பது போன்ற ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ் இதழ். அது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்கிறவர்களுக்கு வாஷிங்டன் மாகாணம் இலவச மரிஜுவானா ஜாயின்டுகளை அளிக்கிறது. ஒரே கண்டிஷன்: 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்!

தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வாஷிங்டன் மாகாணம் `Joints For Jabs' எனும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் இப்போது தடுப்பூசி செலுத்திக்கொண்ட உடன் இலவச மரிஜுவானாவைக் (கஞ்சா வகை போதைப்பொருள்) கேட்டுப் பெறலாம். ஜூலை 12 வரை இது நடைமுறையில் இருக்கும் என்று மாகாண மதுபானம் மற்றும் மரிஜுவானா வாரியம் அறிவித்துள்ளது.

மரிஜுவானா பிடிக்கவில்லையென்றால் இலவச பீர், ஒயின் அல்லது காக்டெய்ல் பானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். வாஷிங்டன் போலவே அரிசோனாவிலும் கோவிட் -19 தடுப்பூசி பெறும் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு இலவச மரிஜுவானா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பூசி
கொரோனாவிற்கு தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவதால், கோவிட் 19-க்கு எதிராக முன்னெடுக்கப்படும் புதுமையான முயற்சி இது!

2012-ம் ஆண்டில் மரிஜுவானா விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்ட வடமேற்கு மாகாணத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படும் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இந்த நடவடிக்கை கடந்த மாதம் பார்கள் மற்றும் பிற மதுபான நிலையங்களில் தடுப்பூசிக்குப் பின் இலவச மதுபானம் ஒன்றை வழங்க அனுமதிக்கும் முடிவு தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களின்படி, வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வயது வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (54 சதவிகிதம்) இதுவரை ஒரு கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வேகம் சமீபத்திய வாரங்களில் நாடு முழுவதும் குறைந்துவிட்டது. அதைத் தொடர்ந்தே மதுபானங்கள், மரிஜுவானா என அதிரடி ஆஃபர்கள் அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கலிஃபோர்னியா மற்றும் ஓஹியோ உள்ளிட்ட பல மாகாணங்கள் ரொக்கப் பரிசுகள் அல்லது கல்லூரி உதவித்தொகைகளை வழங்கும் தடுப்பூசி லாட்டரிகளை நடத்தி வருகின்றன. சில மாகாணங்களில் இலவச விளையாட்டு டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

Joe biden
Joe biden
Carolyn Kaster

அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் 70 சதவிகித அமெரிக்க பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை குடியரசுத் தலைவர் ஜோ பைடன் நிர்ணயித்துள்ளார். கஞ்சா, மது பரிசு போன்ற அட்டகாச அறிவிப்புகளுக்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், `ஒரே ஒரு சுருட்டு எப்படி போதும்' என்பதுதான் போதைப் ப்ரியர்களின் ஆதங்கம்!

நம் ஊரிலோ தடுப்பூசிக்கு முன்னாடி பின்னாடி மது அருந்தலாமா என்கிற ஆராய்ச்சியை இன்னும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் `முதலில் தடுப்பூசியைக் கண்ணுல காட்டுங்கப்பா... அப்புறம் பரிசு பத்திப் பேசலாம்' என்கிற குரல் கேட்கிறது.

வேறெங்கே? நம்ம இந்தியாவில்தான். ஆமாம்... இங்கே தண்ணீர்ப் பற்றாக்குறை போல தடுப்பூசி பற்றாக்குறை அல்லவா நிலவுகிறது!

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு