Published:Updated:

`மனிதர்கள் மீது தடுப்பு மருந்து சோதனை; ரூ.3 லட்சம்!' சர்ச்சையான ஆய்வாளர்களின் கொரோனா அறிவிப்பு

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தற்போது லண்டனில் 35 தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு 46 மில்லியன் யூரோக்கள் நிதி அளிப்பதாக இங்கிலாந்து அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா என்ற பெயர் எங்கு பார்த்தாலும் உலகளவில் ஒலித்துக்கொண்டு, மக்களை அச்சுறுத்திக்கொண்டு உள்ளது. தற்போதுவரை கிட்டத்தட்ட நான்காயிரம் உயிர்களைக் குடித்து ஒரு லட்சம் மக்களைப் பாதித்து, தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸைப் பார்த்து நாம் பயப்படக் காரணம் அதை எதிர்த்துப் போராட வீரியமிக்க மருந்தோ, தடுப்பூசியோ இல்லை என்பதே.

உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது, ``ஆராய்ச்சிக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு 3,500 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அந்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் வெளியிலிருந்து செயற்கையாக தொற்று ஏற்படுத்தப்படும். பின்பு அவர்கள் மூலம் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தொடங்கும்" என்று கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம்

லண்டன் குயின் மேரி பையோ என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் இந்த ஆராய்ச்சிக்காக 24 பேரை நியமனம் செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பங்குபெற விரும்பும் தன்னார்வலர்களுக்கு வலுகுறைந்த இரண்டு வகையான கொரோனா வைரஸ் ஸ்டெரைன்கள் உட்செலுத்தப்படும். இந்த இரண்டுமே ஒரே மாதிரியான மூச்சுப்பாதை பாதிப்பு அறிகுறிகளை ஏற்படுத்த வல்லன.

HVIVO நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஊசியை ஆராய்ச்சிக்கு உட்படும் மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு, அவர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். மருந்து வேலை செய்கிறதா என்று இவர்கள் கண்காணிக்கப்படுவர். HVIVO என்பது வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட மருந்து தயாரிக்கும் நிறுவனமாகும். தற்போது லண்டனில் 35 தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு 46 மில்லியன் யூரோக்கள் நிதி அளிப்பதாக இங்கிலாந்து அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை முயற்சிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எடுக்கப்பட்டாலும் இந்த மருந்துகளை உபயோகிக்க அனுமதி வழங்குவது உடனே இயலாத காரியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். உலக அளவில் 1,11,000 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இத்தாலியில் மட்டும் 7,375 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 366 பேர் இறந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் உணவகங்களிலும் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து போராட ஒரு மருந்து கண்டுபிடிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு