Published:Updated:

`ஃபேஸ் ஷீல்டு; ஆஸ்பிரேஷன் பாக்ஸ்!’- அமெரிக்காவுக்கு உதவும் மஹிந்திரா நிறுவனம்

முகக்கவசம்
முகக்கவசம்

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் ஆஸ்பிரேஷன் பெட்டிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு முழுமூச்சாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது. இதை அங்கு பணி புரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அளித்து வருகிறது.

மைக் ப்
மைக் ப்

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``இக்கட்டான சூழ்நிலையில் தங்களது உற்பத்தி வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ள மஹிந்திரா குழுமத்திற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மஹிந்திரா குழுமம் ஆபர்ன் மலைகளில் (auburn hills) உள்ள தனது ஆட்டோமொபைல் ஆலையைத் தற்காலிகமாகப் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்றியமைத்துள்ளது. இதில் ஆட்டோமொபைல் விண்ட்ஷீல்ட் தயாரிக்கப் பயன்படும் பாலிகார்பனேட் பொருட்களைக்கொண்டு ஆஸ்பிரேஷன் பெட்டிகள் மற்றும் கண்ணாடி முகக் கவசங்களைத் தயாரித்து வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் கொரோனா பாதிப்பிற்குள்ளாகிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் எச்சில் மற்றும் சளித் துளிகள் அவர்கள் மேல் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதை ஆஸ்பிரேஷன் பெட்டிகள் மற்றும் முகக் கவசங்களைக் கொண்டு தவிர்க்க முடியும். இதனால் மஹிந்திரா உயிர் காக்கும் உபகரணங்களை அளித்து வருகிறது என்றே சொல்லலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும் ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளை மாளிகையிலிருந்து வந்த அழுத்தத்திற்குப் பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதோடு அமெரிக்காவில் ஆட்டோமொபைல் உற்பத்திகளுக்குப் பெயர் போன இடமான டெட்ராய்ட் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் ஆஸ்பிரேஷன் பெட்டிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் இதை அதிக அளவில் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வட அமெரிக்காவில் உள்ள மஹிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் ஹாஸ் கூறுகையில், ``மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான தேவையான விண்ட்ஷீல்ட் பொருள்கள் எங்களிடம் தயாராக இருந்தது. முகக் கவசங்களையும் நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆனால் இப்போது விநியோகம் செய்ய வேண்டிய உபகரணங்களைத் தயாரிக்க , தேவையான பொருள்களை வாங்குவதுதான் சவாலாக உள்ளது" என்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த மாதத்தில்தான் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்குப் பின் HCQ மாத்திரைகளின் ஏற்றுமதிக்கான தனது தடையை இந்தியா நீக்கியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தியா மருத்துவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனமான மஹிந்திராவும் தனது பங்கிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி அமெரிக்காவிற்கு உதவி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு