Published:Updated:

`சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யச் சென்ற அதே மருத்துவமனை.. பறிபோன உயிர்!’ -கலங்கவைத்த கொரோனா மரணம்

சாட் கேப்யூல்
சாட் கேப்யூல் ( nbcnews )

கேப்யூலின் மரணத்திற்குத் தாமதமான பரிசோதனையே காரணம் எனச் சொல்லப்படுகிறது. தொடக்க நாள்களில் முதல் கட்ட அறிகுறிகள் அவருக்குக் குணமடையவே அவர் பூரண நலம் பெற்றுவிடுவார் என அனைவரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்யாகி அவர் மரணமடைந்திருக்கிறார்.

கொரோனாவினால் ஏற்படும் ஒவ்வொரு மரணமும் மனித சமுதாயத்தை உலுக்கிக்கொண்டிருக்கிற தருணம் இது. அமெரிக்காவின் விஸ்கோசின் நகரில் கொரோனாவிற்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் அங்கிருக்கும் கம்ப்யூட்டர்களில் சாப்ஃட்வேர் ஏற்றச் சென்றவர், நோய்த் தொற்றுக்கு ஆளாகி அதே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்நகரவாசிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாட் கேப்யூல்
சாட் கேப்யூல்
nbcnews

49 வயதான சாட் கேப்யூல் ஒரு ஐடி ஊழியர். உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேடிப் போய் உதவி செய்யும் மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதராக, விலங்கு நல ஆர்வலராக, எளிதில் பழகக்கூடியவராக அறியப்படுகிறவர். சிறிய இசைக்குழுவைச் சேர்ந்த அவருக்குப் பாடுவதென்றால் கொள்ளைப்பிரியம். ஓய்வு நேரத்தில் தன் சகோதரிகளுடன் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் கேப்யூல். `ஜியோபார்டி’ என்கிற பிரபல கேம்ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு ஓரளவு பரிச்சயப்பட்டவர் இவர்.

மார்ச் 4ம் தேதி விஸ்கோசினில் இருக்கும் செயிண்ட் ஏக்னஸ் மருத்துவமனைக்கு அங்கிருக்கும் கம்ப்யூட்டர்களில் மருத்துவ வசதிகளுக்காகத் தேவைப்பட்ட சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய கேப்யூல் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய கேப்யூலுக்கு மறுநாளே காய்ச்சல் ஏற்பட மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குக் காய்ச்சல் இருப்பதாகக் கூறி சில மருந்துகள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து பணிக்குத் திரும்பிய கேப்யூலுக்குக் காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் மார்ச் 8ம் தேதி செயிண்ட் ஏக்னஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்யப்படவில்லை. கேப்யூல் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதால் பரிசோதனைக்கான தேவையில்லை என்று கருதி வீட்டுக்கு மீண்டும் அனுப்பப்பட்டிருக்கிறார்.

கொரோனா
கொரோனா
nbcnews

மார்ச்-10ல் சுவாசப்பிரச்னை ஏற்படவே மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அடுத்த நாளே கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தனக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியான போதும், மனம்தளராமல் தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு பாசிட்டிவாக மெயில் அனுப்பியிருக்கிறார் கேப்யூல். அதில், "இது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்கு அவ்வளவு தீவிரமாக இந்த நோய் இல்லை. மரணம் ஏற்படுவதற்கான அபாயக்கட்டமெல்லாம் எனக்கில்லை. முதல்கட்டத்தின் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமாக குணமடைந்து இந்தவார இறுதியை உங்கள் அனைவரோடும் கழிக்க வந்துவிடுவேன்" என நம்பிக்கையோடு மெயில் அனுப்பியிருக்கிறார் கேப்யூல்.

ஆனால் விதி கொடியதாக இருந்திருக்கிறது. சிகிச்சை பலனின்றி மார்ச் 29ம் தேதி மரணமடைந்தார் கேப்யூல். உடைந்து போன அவரின் மனைவி ஸ்டார்க்வெதர் இறுதி ஊர்வலத்தை முடித்துவிட்டு தன் கணவரின் எரியூட்டப்பட்ட சாம்பலோடு 14 மணிநேரம் காரில் பயணித்து தன் வீட்டினை அடைந்திருக்கிறார். தன் வீட்டுக்குச் சாம்பலாகத் திரும்பினார் கேப்யூல்.

சகோதரிகளுடன் கேப்யூல்
சகோதரிகளுடன் கேப்யூல்
nbcnews

இருவரின் வாழ்க்கையைப் பற்றி நினைவுகூரும் கேப்யூலின் மனைவி ஸ்டார்க்வெதர், "அவர் என் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வந்த போது தான் அவரை முதன்முதலாகப் பார்த்தேன். அவரை எனக்குப் பிடித்திருந்தது. சேர்ந்து வாழ முடிவெடுத்து 2007ல் திருமணம் செய்து கொண்டோம். அவர் மிகச்சிறந்த மனிதர். அவருக்கான 50வது பிறந்தநாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதை நண்பர்களை அழைத்துக் கொண்டாட விரும்பினோம். கடைசியில் அது அவரது அஞ்சலிக் கூட்டமாக முடிந்திருக்கிறது" எனப் பத்திரிகையாளர்களிடம் கூறி நாதழுதழுத்துப் போகிறார் ஸ்டார்க்வெதர். தன் மொத்த உலகமுமாய் இருந்த கணவர் இனி தன்னோடு இருக்கப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை. "இப்போது பலரும் அவரைப்பற்றிய நல்ல விஷயங்களை நினைவு கூருகின்றனர். இதை அவர் கேட்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்கிறார்.

அவரது சகோதரிகள் கூறுகையில், கேப்யூல் "Doctor Who" என்கிற Sci-fi நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பவர் என்றும், Doctor who ஆக மாறி தங்கள் சகோதரரை மீட்டுக் கொண்டுவந்து விடமாட்டோமா என ஏங்குவதாகும் கூறியுள்ளனர். குடும்பத்தினர் மட்டுமல்ல கேப்யூலுக்கு சிகிச்சையளித்து வந்த செவிலியர்களும் அவருக்காக வருத்தப்படுகின்றனர். தங்களுக்குக் கணினியில் ஏற்றப்பட்ட புதிய சாஃப்ட்வேர்களை சொல்லிக் கொடுத்ததோடு எங்களைப் பாடி மகிழ்வித்தவர் கேப்யூல். அவரின் மறைவு துரதிர்ஷ்டவசமானது என்றனர்.

மனைவியுடன் கேப்யூல்
மனைவியுடன் கேப்யூல்
nbcnews

கேப்யூலின் மரணத்திற்குத் தாமதமான பரிசோதனையே காரணம் எனச் சொல்லப்படுகிறது. தொடக்க நாள்களில் முதல் கட்ட அறிகுறிகள் அவருக்கு குறையவே அவர் பூரண நலம் பெற்றுவிடுவார் என அனைவரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கைப் பொய்யாகி அவர் மரணமடைந்திருக்கிறார். மகிழ்ச்சியாக வாழ்ந்த அவரின் குடும்பம் இப்போது செய்வதறியாது தவித்து நிற்கிறது.

அடுத்த கட்டுரைக்கு