Published:Updated:

`மூத்த குடிமக்களை மறந்துவிடாதீர்கள்!’ - #Corona அச்சத்திலும் மனிதம் விதைக்கும் 7 வயதுச் சிறுவன்

பெல்
பெல்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன், தனது சேமிப்புப் பணமான 600 டாலர்களைக் கொண்டு கொரோனா அச்சத்தால் முடங்கிக்கிடக்கும் மூத்த குடிமக்களுக்கு உதவி வருகிறார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றன. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, இரான், ஜப்பான் என உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் கடந்த வியாழக்கிழமை பேசிய பிரதமர் மோடி, ``வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசியத் தேவைகளின்றி மற்றவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வராமல் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அழைப்புக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. தமிழகத்திலும் பேருந்துகள் இயக்கக் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகள் அடைப்பு, மெட்ரோ ரயில்கள் இயக்கம் கிடையாது எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

`வரும் 22-ம் தேதி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!’ - பிரதமர் மோடி #LiveUpdates
கொரோனா
கொரோனா

வைரஸ் பரவல் தொடங்கிய சீனாவின் வுகானில், கடந்த 3 நாள்களாகப் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சீரிய முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தன்னலம் பாராமல் உழைக்கும் மருத்துவப் பணியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாகி வருகின்றன.

அந்தவகையில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள கெய்தர்ஸ்பர்க் (Gaithersburg) நகரில் நடந்திருக்கிறது. அந்நகரைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் காவானாக் பெல், தனது இரண்டு வருட சேமிப்புப் பணமான 600 டாலர்கள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கியிருக்கிறான். தனது இரண்டு பிறந்தநாள்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிடைத்த பணத்தை சேமித்து வைத்திருந்த பெல், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவர்களுக்கு உதவும் நோக்கில் அந்தப் பணத்தை செலவு செய்திருக்கிறான்.

காவானாக் பெல்
காவானாக் பெல்

அந்தப் பணத்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் அடங்கிய கிட் மற்றும் உணவுப் பொட்டலங்களை வாங்கி, முதியவர்களுக்கு உதவியிருக்கிறான். அந்த வகையில் தனது சேமிப்புப் பணத்தில் 65 கிட்கள் மற்றும் 31 பேருக்கு உணவு வழங்கி அசத்தியிருக்கிறான் அந்தச் சுட்டி. அதேபோல், மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் தன் தாய் தொடங்கிய யூடியூப் சேனல் மூலமும் நிதியுதவியைப் பெற்று உதவி தேவைப்படுவோருக்குக் கொண்டு சேர்க்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். சானிடைசர்கள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருள்களை அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தாயுடன் சென்று வாங்கும் அவர், அதுகுறித்த அப்டேட்டுகளைத் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியிருக்கிறார். ``மூத்த குடிமக்களை மறந்துவிடாதீர்கள்’’ என்று கூறும் பெல், இந்த உதவியில் தன்னுடன் கைகோத்த அனைவருக்கும் தனது சுட்டிக் குரலில் நன்றியும் தெரிவிக்கிறார்.

ஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம்?! -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது முதியவர்களே என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், முதியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அந்நாடு அவர்களைக் கைவிட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வரும் மேரிலேண்ட் சிறுவன் பெல்லின் செயல்பாடு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு