Published:Updated:

`மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவர்கள்!’ - கலங்கும் பெற்றோர்கள் #Corona

மலேசியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர்கள்
மலேசியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக் கல்வி கற்பதற்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் சென்றுள்ளனர். அவர்களைப் பத்திரமாக நாட்டுக்கு அழைத்துவரக் கோரிக்கை எழுந்துள்ளது!

இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான சீட் கிடைக்காதவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கிறார்கள். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களைவிடவும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்று படிப்பவர்களே அதிகம். 

`எல்லாரையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள்!' - கேரள முதல்வரின் கொரோனா அட்வைஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து சென்று ஏராளமானோர் படித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். அவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 300 பேருக்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள்.

தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகப் பிலிப்பைன்ஸ் அரசு, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை 18-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லலாம் எனவும் அதன் பின்னர் விமான நிலையங்கள் மூடப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. அதனால் அங்குள்ள மாணவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வெளியேறி வருகிறார்கள். 

மீட்டுச் செல்லக் கோரிக்கை விடுக்கும் மாணவர்கள்
மீட்டுச் செல்லக் கோரிக்கை விடுக்கும் மாணவர்கள்

ஏற்கெனவே பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 120 மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வருவதற்காக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திடீரென மத்திய அரசு வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனால் அந்த மாணவர்கள் சொந்த ஊருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மலேசியாவில் உள்ள மானவர்களில் நெல்லையைச் சேர்ந்த 40 பேர் உள்ளனர். அந்த மாணவர்கள் சொந்த ஊருக்கும் வர முடியாமல், பிலிப்பைன்ஸ் திரும்பவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள். அதனால் விமான நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பதால் தங்களுக்குக் கொரோனா தாக்குதல் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள்
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்கள்

தங்கள் குழந்தைகள் சொந்த ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிப்பதை அறிந்து பெற்றோரும் கவலை அடைந்திருக்கிறார்கள். அதனால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவர்களை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனப் பெற்றோர் கோருகிறார்கள்.

இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த லலிதா என்ற மாணவியின் தந்தை சிவசுப்பிரமணியன், தன் மகளை மீட்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதனிடையே மலேசியாவில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்!

அடுத்த கட்டுரைக்கு