மனிதர்கள் பலவிதமான பயன்பாடுகளுக்கும் பிளாஸ்டிக்கை அதிகப்படியாய் சார்ந்திருப்பதன் எதிரொலியாக அதன் பாதகமான விளைவுகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த ஆய்வில் மனித ரத்தத்தில் மைக்ரோஸ்பிளாஸ்டிக்ஸ் (Microplastics - சின்னஞ்சிறிய பிளாஸ்டிக் துகள்கள்) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியாகியுள்ள இந்தப் புதிய ஆய்வு நெதர்லாந்திலுள்ள Vrije UniverSiteit Amsterdam என்ற ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆராய்ச்சியாளர்கள் 22 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தனர். அதில் பாலிப்ரோப்பிலின், பாலிமெத்தில் மெதக்ரிலேட், பாலிஎதிலின் டெரேப்தாலேட், பாலிஸ்டடிரீன் உள்ளிட்டப் பல்வேறு வகையான பிளாஸ்டிக்குகள் உள்ளனவா என்று சோதிக்கப்பட்டன. பரிசோதிக்கப்பட்ட 22 பேரில், 17 பேரின் ரத்த மாதிரியில் அளவிடக்கூடிய அளவில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியல், நீரின் தரம் மற்றும் ஆரோக்கியத்துறை பேராசியர் டிக் வேதாக் குறிப்பிடுகையில், ``இது நிச்சயமாக அச்சம் ஏற்படுத்துகிற விஷயம். இந்த ஆய்வின் மூலம், ரத்த ஓட்டத்தில் காணப்படும் அளவுக்கு மக்கள் உடலினுள் பிளாஸ்டிக் செல்கிறது என்பதை அறிய முடிகிறது. அதிக பிளாஸ்டிக் பயன்பாட்டின் காரணமாக அதை உள்ளிழுக்கவோ உட்கொள்ளவோ செய்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வின்படி, சோதனை செய்யப்பட்ட ரத்த மாதிரிகளில் பாலிஎதிலின் டெரேப்தாலேட் (PET) பிளாஸ்டிக் பரவலாகக் காணப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்ட 50% பேரின் ரத்தத்தில் இது காணப்பட்டது. PET பிளாஸ்டிக் பொதுவாகக் குடிநீர் பாட்டில்கள், துணிகள், உணவு பேக்கேஜிங் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பாலிஸ்டிரீன் மற்றும் பாலிஎத்திலீன் ரத்தத்தில் குறிப்பிட்ட அளவு இருப்பதும் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. பாலிஸ்டிரீன் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ரத்தத்தில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்தாலும், ஒரு தனி நபரின் உடலில் எந்த அளவுக்கு மேல் பிளாஸ்டிக் இருந்தால் அது ஆபத்தை விளைவிக்கும் என்பது பற்றி இந்த ஆய்வில் கண்டறியப் படவில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில், இதுபோன்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தையும் பேராசிரியர் வேதாக் வலியுறுத்தியுள்ளார்.