Published:Updated:

கோவிட் தடுப்பூசி: `12 - 17 வயது சிறார்களிடம் 100% எதிர்ப்பு சக்தி!' - மாடர்னா அறிவிப்பு

இப்போது தொடரும் இரண்டாம் அலையில் இளைஞர்களும் இணை நோயற்றவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தபடியாக கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா முதல் அலையில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இப்போது தொடரும் இரண்டாம் அலையில் இளைஞர்களும் இணை நோயற்றவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தபடியாக கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத்  தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.

Moderna COVID-19 vaccine
Moderna COVID-19 vaccine
Greg Lovett /The Palm Beach Post via AP

கொரோனா தடுப்பூசி கடந்தாண்டு கண்டறியப்பட்டதும், முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எனப் படிப்படியாக அதிகரித்து, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை குழந்தைகளுக்குக் கொரோனா தடுப்பூசி வழங்கப்படாததால் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் mRNA - 1273 என்ற தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராகக் கடந்தாண்டில் இருந்து அமெரிக்காவில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது பதின்ம வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது.

12 வயது முதல் 17 வயதினரிடையே, இரண்டு டோஸ் போடப்பட்டவர்களுக்கு, இத்தடுப்பூசி 100 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவதாக மாடர்னா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Moderna COVID-19 vaccine
Moderna COVID-19 vaccine
AP Photo/Steven Senne

மேலும், ``சோதனைகளுக்குப் பிறகு, அரசிடம் ஒப்புதல் பெற்று இதுவரை 3,732 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் டோஸ் போடப்பட்ட சோதனையின் முடிவில், தடுப்பூசி குழந்தைகளின் உடலில் 93 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்ட குழந்தைகளிடம் 100 சதவிகிதம் செயலாற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

அடுத்தகட்டமாக ஃபைஸர் நிறுவனமும் மாடர்னா நிறுவனமும் 6 மாதம் முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டறியும் பணியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு