மலேசியாவில் வேகமெடுக்கும் `சிவகங்கா தொற்று!’ - தமிழகத்தில் தாக்கம் இருக்குமா..?
மலேசியாவில் கொரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், `கொரோனா வைரஸின் திரிபு’ எனக் கருதப்படும்` D614G’ வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொரோனாவைவிட பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடியது.
மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டுவரும் மலேசியா, சமீபத்தில்தான் `மலேசியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று அறிவித்திருந்தது. பொதுமக்கள் மெள்ள மெள்ளத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில்தான், அங்கு ஒரு புதிய பிரச்னை புகையத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் சிவகங்கையிலிருந்து மலேசியா திரும்பிய நபரிடம் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதோடு அவருக்கு உறுதிசெய்யப்பட்டது `கொரோனா வைரஸின் திரிபு’ எனக் கருதப்படும் `D614G’ வகை வைரஸ் தொற்று என்று மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
D614G வகை வைரஸ்:
SARS-CoV-2-ல் உள்ள ஸ்பைக் புரோட்டீன் அமினோ அமில மாற்றம் தான் D614G பிறழ்வு வகை. இந்தப் பிறழ்வு அமினோ அமிலத்தின் 614 நிலையில் D-யில் (அஸ்பார்டிக் அமிலம்) இருந்து G ஆக (கிளைசின்) மாற்றுகிறது. ஆரம்ப D 614 இப்போது G 614 என மாறுபடுகிறது. எனவே, `D614G’ என்றழைக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் கொரோனா வைரஸின் ஒருவகைத் திரிபான D614G வகை கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ் திரிபு `சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader) வகையைச் சேர்ந்தது. ஒரு தனிநபரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் தொற்று பரவுவதை `கிளஸ்டர்’ என்பார்கள். இதில் ஒரு சில கிளஸ்டர்கள் மட்டுமே 'சூப்பர் ஸ்பிரெட்டர்' வகையைச் சார்ந்தவையாக இருக்கும். முந்தைய கிளஸ்டர்களின் இயல்பைவிட D614G வகை சற்று வீரியமானது என்று கூறப்படுகிறது.
மலேசியச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, “மலேசியாவில் D614G பிறழ்வுகொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த வகை வைரஸ், ஒரு நபரிலிருந்து மற்ற நபருக்கு கொரோனாவைவிட பத்து மடங்கு எளிதாகவும், வேகமாகவும் பரவக்கூடியது. தற்போது இது குறித்த ஆரம்பகட்ட பரிசோதனை நடைபெற்றுவருகிறது. உறுதியான நிலவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “இவ்வகை பிறழ்வு ஜூலை மாதம்தான் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஆய்விலுள்ள தடுப்பூசிகள் இந்த வகைகளுக்குச் சேராது அல்லது பயனற்றதாக இருக்கும். எனவே, மக்கள் சுகாதாரத்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சரியான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; முகக்கவசங்களை அணிய வேண்டும்.
தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், பல முயற்சிகளை மலேசிய பொது சுகாதார அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டுவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்துவதைச் சாத்தியமாக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
`சிவகங்கா’ கிளஸ்டர்:
மலேசியாவின் குடியுரிமை பெற்ற 57 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா வந்தடைந்தார். விமானநிலையத்தில் அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர், தான் நடத்தும் உணவகத்தில் சென்று பணிபுரிந்ததன் மூலம் மலேசியாவின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறியுள்ளார். அதோடு அடுத்த சில நாள்களில் மீண்டும் அவருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது.
சிவகங்கையிலிருந்து வந்த நபர் மூலம் தொற்று பரவுவதால், தொற்று கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட குழுவுக்கு `சிவகங்கா தொற்று குழு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் அவரின் மகன் உட்பட அங்கு பணியாற்றிய பலருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த உணவகத்தை ஒட்டி பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மலேசியாவின் கெடா மாநிலத்தில், இந்த உணவகம் செயல்பட்டுவந்த பகுதியைச் சுற்றி மக்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதோடு, அங்குள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெடா பகுதியிலிருந்து அண்டை மாநிலங்களுக்கும் சிவகங்கா தொற்று பரவியுள்ளது. மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் குறுகியகாலத்தில் அதிகமானோர் இவ்வகைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தாக்கம் இருக்குமா..?
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்திலிருந்து மலேசியா சென்ற நபருக்கு D614G வகை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த வகைத் தொற்று அவருக்குத் தமிழகத்திலிருந்து பரவியதா... சிவகங்கையில் அவர் இருந்த பகுதியில் இந்த வகைத் தொற்று பரவுகிறதா என்பது குறித்த விசாரணையைச் சுகாதாரத்துறை எந்தக் காலதாமதமும் செய்யாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.