Published:Updated:

`எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோம்!’ - நியூயார்க்கில் 10,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை #Corona

அமெரிக்கா
அமெரிக்கா ( AP )

நியூயார்க்கில் தற்போது மேலும் 4,000 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலகமே தனது இயல்பு நிலையை இழந்து திணறி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 25,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தில் சுமார் 6,500 பேர் இந்த வைரஸுக்குப் பலியாகியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், நேற்று நியூயார்க் நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் நான்காயிரம் பேர் இந்தக் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஆணையர் ஆக்சிரிஸ் பார்போட் பேசுகையில், ``கொரோனா வைரஸால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மிகவும் வேதனையான ஒன்று. நாங்கள் மேலும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செயல்பட இது முக்கியமான நேரம் என்பதை உணர்ந்திருக்கிறோம். இதுவரை இறந்த நான்காயிரம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றாலும், இத்தகைய திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனாவைத் தவிர வேறு காரணம் இருக்கவும் வாய்ப்பில்லை” என்றார்.

நியூயார்க்கின் மேயரான பில் டி பிலேசியோ, ``கொரோனா வைரஸால் நகரத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கைகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புடன் வீட்டில் இருந்த பலரும் இறந்துள்ளனர்” எனக் கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். மேலும், வீடுகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் சிகிச்சை எடுத்து வரும் பலருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதால் பரிசோதனை முறைகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன?
அடுத்த கட்டுரைக்கு