Published:Updated:

`5 வார கடும் ஊரடங்கு... கிடைத்தது பலன்!’ - கொரோனா போரில் நியூசிலாந்துக்கு கிடைத்த வெற்றி

 பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா ( AP )

கொரோனா வைரஸ் பரவுதைத் தடுக்க கடந்த 5 வாரங்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நியூசிலாந்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் குறைந்து, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக இன்று ஒட்டுமொத்த உலகமும் களத்தில் இறங்கி இருக்கிறது. சீனாவில் பரவத் தொடங்கி நான்கே மாதங்களில் உலக நாடுகளுக்கும் பரவி உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வரும் இந்தக் கொரோனாவால் உலகம் கண்டுள்ள பாதிப்புகள் கொஞ்சமல்ல, 2008-ல் உலகப் பொருளாதாரம் கண்ட நெருக்கடியைவிட இந்தக் கொரோனாவின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக உலுக்கி இருக்கிறது.

`5 வார கடும் ஊரடங்கு... கிடைத்தது பலன்!’ - கொரோனா போரில் நியூசிலாந்துக்கு கிடைத்த வெற்றி
AP

இந்தப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வர வருடக்கணக்கில்கூட ஆகலாம் என்றும் பொருளியல் நிபுணர்களால் கூறப்பட்டு வரும் நிலையில், கொரோனா பெரும்பாலான நாடுகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. அதில் குறிப்பாக, அமெரிக்கா தன் வரலாற்றில் இதுவரை சந்திக்காத நெருக்கடி சூழலைச் சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளே கொரோனாவால் நிலைதடுமாறி தவிக்கும் இந்த நிலையில், வளரும் நாடான இந்தியாவும் இந்தக் கொரோனா நோயால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. நாட்டில் நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் பல இடங்களிலும் ஊரடங்கை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்காமல் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக, நாளுக்குநாள் நோய் பாதிப்புகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. பலி எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

 பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா
AP

ஆனால், இதே ஊரடங்கை வைத்தே கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நோய்க்கு எதிரான போராட்டத்தில் நியூசிலாந்து வெற்றி கண்டிருக்கிறது. உலகில் கொரோனா நோய்த் தாக்கம் குறைவாகப் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்தும் ஒன்று. நியூசிலாந்து நாட்டு அரசு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த 5 வாரங்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்குநாள் குறைந்து, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அனுமதிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அறிவித்துளார். இதுவரை அமலில் நான்காம் கட்டத்தில் இருந்த ஊரடங்கு உத்தரவையும் மூன்றாம் கட்டத்துக்கு மாற்றியுள்ளார்.

இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜெசிந்தா, "பரவலான சமூகத் தொற்று நியூசிலாந்தின் எந்தப் பகுதியிலும் ஏற்படவில்லை. நாங்கள் இந்தப் போராட்டத்தில் வென்றிருக்கிறோம்" என்று பெருமிதம் தெரிவித்தார். ``ஆனால், இது கொண்டாடுவதற்கான நேரம் கிடையாது. அனைத்துக் கட்டுப்பாடுகளும் எப்போது முழுமையாக விலக்கப்படும் என்பது பற்றி இப்போது கூற முடியாது" என்றும் கூறியவர், ``எந்தக் காரணத்தைக் கொண்டும் நியூசிலாந்து மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முடிவு எடுக்கப்படாது. அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு இதே நிலையில் தொடர வேண்டியிருக்கலாம்" என்றார்.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனிமனித விலகல் மற்றும் ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்ததன் காரணமாக நியூசிலாந்தில் நோய் பாதிப்பு குறைந்துள்ளது என்பது அந்நாட்டு பிரதமரின் அறிக்கையின் வாயிலாகத் தெரிகிறது.

நியூசிலாந்தில் இதுவரை 1,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நியூசிலாந்தில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாகப் பள்ளிகள், சிறு குறு நிறுவனங்கள் மற்றும் அத்தியாவிசிய தேவைக்கான கடைகள் தொடர்ந்து இயங்க அந்நாட்டு பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு