வரும் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக நியூசிலாந்தை மாற்ற, 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடைவிதித்து புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து தடுக்கும் சட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் சிகரெட் வாங்க முடியாது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அயேஷா வெர்ரால் கூறுகையில், ``ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், ஆரோக்கியமாக வாழ்வார்கள். பல வகையான புற்றுநோய்கள், மாரடைப்புகள், பக்கவாதம் போன்ற புகைப்பிடிப்பதால் உண்டாகும் எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தத் தேவையான 5 பில்லியன் அமெரிக்க டாலர் சேமிக்கப்படும்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவை குறைப்பது, மூலைமுடுக்கு கடைகளில் எல்லாம் சிகரெட் கிடைக்காமல், குறிப்பிட்ட சில கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் மட்டும் கிடைக்க வழிவகை செய்வது அது மட்டுமல்லாமல் சட்டபூர்வமாக சிகரெட் விற்க அனுமதிக்கப்படும் கடைகளின் எண்ணிக்கையை பத்தில் ஒரு பங்காகக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நியூசிலாந்து முழுவதும் 6000 கடைகளில் இருந்து 600 கடைகளுக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்படும். 2023-ம் ஆண்டிலிருந்து இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடக நியூசிலாந்தை மாற்றும் இலக்கை அடைய முயற்சிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.