Published:Updated:

நேற்று அமெரிக்கா; இன்று நோபல் அறிஞர்..! - வுகான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதா?

மோன்தக்னேர்- ட்ரம்ப்

மோன்தக்னேர், ``கொரோனா வைரஸின் மரபணுவில் எச்.ஐ.வி கூறுகள் இருப்பதும், மலேரியா கிருமியின் கூறுகள் இருப்பதும் ஆசியா டைம்ஸ் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இது நடந்திருக்கலாம்” என்றார்.

நேற்று அமெரிக்கா; இன்று நோபல் அறிஞர்..! - வுகான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதா?

மோன்தக்னேர், ``கொரோனா வைரஸின் மரபணுவில் எச்.ஐ.வி கூறுகள் இருப்பதும், மலேரியா கிருமியின் கூறுகள் இருப்பதும் ஆசியா டைம்ஸ் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இது நடந்திருக்கலாம்” என்றார்.

Published:Updated:
மோன்தக்னேர்- ட்ரம்ப்

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வேகமாகப் பரவிக்கொண்டு இருக்க, மறுபக்கம் கொரோனாவுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சீனாவின் வுகான் நகரில் இருக்கும் வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் முதல் முதலாக வெளியுலகத்துக்கு வந்ததாக ஃபாக்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஆதாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத சில முக்கிய நபர்கள் தெரிவித்த கருத்தாக அந்தத் தகவல் வெளியாகி இருந்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ``அமெரிக்காவுக்கு அந்தச் சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றார். மேலும், தங்களது சந்தேகம் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரிக்கையும் விடுத்தார். எனினும் சீனா இந்தக் குற்றச்சாட்டை ஆரம்பம் முதலே கடுமையாக மறுத்து வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், எய்ட்ஸ் நோயைப் பரப்பும் வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான லூக் மோன்தக்னேர், இந்த வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் பரவியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான இவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

லூக் மோன்தக்னேர்
லூக் மோன்தக்னேர்
Wiki

அதில் மோன்தக்னேர், ``கொரோனா வைரஸின் மரபணுவில் எச்.ஐ.வி கூறுகள் இருப்பதும், மலேரியா கிருமியின் கூறுகள் இருப்பதும் ஆசியா டைம்ஸ் ஊடக அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. இதுதான் சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்கும் என சந்தேகம் கொள்ள வைக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இது நடந்திருக்கலாம்” என்றார்.

தொடர்ந்து அவர், ``சீனாவின் வுகான் நகரில் இருக்கும் இந்த ஆய்வகம் 2000-ம் ஆண்டுகளிலேயே இதுபோன்ற வைரஸ்களைக் கையாண்டிருக்கிறது” என்றார். எனினும் இது பயோ வார் என அவர் குறிப்பிடவில்லை. ஃபாக்ஸ் ஊடகம் வெளியிட்ட அறிக்கையிலும், இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், தவறுதலாகப் பரவியிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் சீனாவின் இறைச்சி சந்தையில் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியதாக சீனா தெரிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாக மனிதர்களிடம் இருந்து விலங்குக்கும், பின்னர் அதன்மூலம் உலகம் முழுவதும் பரவியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆய்வகத்தில் பணியாற்றும் ஒருவர் மூலம் தவறுதலாக இந்த வைரஸ் வெளியுலகத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

வுகான் ஆய்வகம்
வுகான் ஆய்வகம்

ஆய்வாளர் மோன்தக்னேரின் கருத்துக்கு சக அறிவியல் அறிஞர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டு என்றும், விஞ்ஞானி ஒருவரே இப்படிச் சொல்வது வேதனை தருவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருபக்கம், சீனாவை அமெரிக்கா விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் துடிக்கிறது. மறுபக்கம், இது ஆய்வகங்களில் இருந்து பரவியதற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்கள். இந்த விவாதங்களுக்கு வித்திட்ட ஆசியாவின் மிகப்பெரிய வைரஸ் வங்கி குறித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

  • சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுகான் நகரத்தில் 1956-ம் ஆண்டு சீனா அறிவியல் அகாடமியால் வைரஸ் வங்கி தொடங்கப்பட்டது. ஆரம்பம் முதலே பல்வேறுவிதமான வைரஸ்களை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தியது இந்த ஆய்வகம்.

  • ஆசியாவின் மிகப்பெரிய வைரஸ் வங்கியாக அறியப்படும் இதில் ஆய்வுக்காக 1,500-க்கும் அதிகமான வைரஸ்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை அந்த ஆய்வகத்தின் இணையதளம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
  • மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கே பரவும் எபோலா போன்ற கொடிய வைரஸ்களும் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்த ஆய்வகத்தில் கையாளப்படுகிறது.

  • கொரோனா வைரஸ் இந்த ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான ஆதாரம் எதுவும் இல்லாத போதும், கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் இந்த ஆய்வகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு முடிவுகளும் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

  • சார்ஸ் வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பின்னர், இந்த ஆய்வகத்தில் கொரோனா குறித்து தொடர் ஆய்வுகள் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக வெளவால் மூலம் பரவுவது தொடர்பாக சீனா முழுவதிலும் உள்ள வெளவால்களைப் பரிசோதித்த ஆய்வாளர்கள், அதில் 300-க்கும் மேற்பட்ட ஒருவகை வெளவால்களில் கொரோனா வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியும் ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
மாதிரி புகைப்படம்
  • 2017 -ம் ஆண்டு, யுனான் குகையில் இருந்த வெளவாலில் சார்ஸ் கொரோனா வைரஸுக்கான மரபணு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது. 5 வருட ஆய்வுக்குப் பின்னர் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

  • சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதிய நிமோனியா போன்ற வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்ததும், இந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதில் புதிதாக மனிதர்கள் இடையே பரவும் வைரஸும் ஆய்வகத்தில் வெளவாலில் இருந்த கண்டுபிடிக்கப்பட்ட வைரஸும் 96% ஒத்துபோனதாக கூறப்படுகிறது.

ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் இதுவரை எதுவும் சிக்காத போதும், இது தொடர்பான விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கிறார்கள் சிலர். காரணம் இன்று இது சீனாவின் பிரச்னை மட்டும் கிடையாது. அனைத்துலகப் பிரச்னை.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் உருவானது எப்படி எனக் கண்டுபிடிப்பதும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். அப்போதுதான் அதைத் தடுப்பதற்கான வழி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள். கொரோனா வைரஸ் இன்று உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பரவிட்டது. இனி கொரோனாவின் கோரப் பசியில் இருந்து மக்களைக் காப்பதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.