Published:Updated:

அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு... சீனாவை விஞ்சிய அமெரிக்கா! -அச்சத்தில் மக்கள் #Corona

கொரோனா
கொரோனா

உலகிலே கொரோனாவினால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தப் பெயர் உலக நாடுகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான நகரத்திலிருந்து பரவத் தொடங்கிய இந்த வைரஸ். உலக நாடுகளை தற்போது தன் பிடியில் வைத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமுள்ள நாடுகளாக சீனாவும் இத்தாலியும் பார்க்கப்பட்டது. சீனாவில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், இத்தாலியின் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில், இதுவரை 82,078 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 80,539 பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 13,700 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,836 ஆக உயர்ந்தது. இதையடுத்து உலகிலே கொரோனாவினால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் சீனாவில் கொரோனாவினால் 80,000 பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இந்த அளவுக்கு மோசமான நிலை இல்லை. பிப்ரவரி 20-ம் தேதி வரை அமெரிக்காவில் 15 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சுகாதார துறையினர் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 1-ம் தேதி அங்கு 75 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மார்ச் 7-ம் தேதி 435-ஆக உயர்ந்தது. மார்ச் 14-ம் தேதி 2,770 ஆக அதிகரித்தது. மார்ச் 21-ம் தேதி 24,192 உயர்ந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 83,836-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனாவை குறித்து அச்சப்படத்தேவையில்லை எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் பேசியிருந்தார். கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்கள் அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியில் 80,539 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 10,361பேர் குணமாகியுள்ளனர். அதேவேளையில் 8,165 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் 83,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 35 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ளனர். அங்கு 1,209 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியை ஒப்பிடுகையில் அதிகளவில் மரணங்கள் இல்லையென்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு