Published:Updated:

ஒமைக்ரான் ஆபத்து இல்லை... தென் ஆப்பிரிக்கா தரும் புது நம்பிக்கை!

ஒமைக்ரான் - தென் ஆப்பிரிக்கா
News
ஒமைக்ரான் - தென் ஆப்பிரிக்கா

இந்தியாவில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. 'இது மூன்றாவது அலைக்கான முன்னோட்டமா' என்று மருத்துவர்கள் கவலையுடன் கேட்கிறார்கள்.

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் உருமாற்றம், நவம்பர் இரண்டாம் வாரத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் போட்ஸ்வானா நாட்டில் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்க நிபுணர்கள் இதைக் கண்டுபிடித்து அறிவித்த அந்த நாளிலிருந்து கவலை தரும் செய்திகளே வந்துகொண்டிருந்தன.

இப்போது முதல் நம்பிக்கையை அந்த தென் ஆப்பிரிக்காவே தந்திருக்கிறது. 'ஒமைக்ரான் தொற்றின் அலை சீக்கிரமே அதிகமாகி, அதே வேகத்தில் குறைந்துவிடுகிறது' என்ற தகவல்தான் அது.

ஒமைக்ரான் தொற்று முதலில் தன் ஆட்டத்தை ஆரம்பித்தது தென் ஆப்பிரிக்காவில்தான். நவம்பர் முதல் வாரத்தில் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இதற்குக் காரணம் ஒமைக்ரான் என்பதை அந்த நாடு தாமதமாகவே உணர்ந்தது. கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக, நவம்பர் இறுதிக்குள் நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமானது. டிசம்பர் மத்தியில் இது உச்சம் தொட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒமைக்ரான்
ஒமைக்ரான்

ஆனால், டிசம்பர் 21 முதல் 27 வரையிலான கடந்த வாரத்தில், புது நோயாளிகளின் எண்ணிக்கை 35 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஒமைக்ரான் அலை குறைய ஆரம்பித்துவிட்டது. அதேசமயத்தில் தொற்றின் வீரியம் குறைவு என்பதால், மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் குறைவாகவே இருந்தது; மரணங்களும் குறைவாகவே இருந்தன.

"ஒமைக்ரான் வேகமாகப் பரவும் என்றாலும், அது அதிக ஆபத்து இல்லாத கொரோனா உருமாற்றம் என்பதை தென் ஆப்பிரிக்க புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன!"
என்கிறார், பிரிட்டிஷ் சுகாதார நிபுணர் ஜேமி ஜென்கின்ஸ்.

என்றாலும், "தென் ஆப்பிரிக்காவில் நடந்தது போல உலகம் முழுக்க நடக்கும் என்பதை இவ்வளவு சீக்கிரமே முடிவுசெய்யக்கூடாது" என்று வேறு சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். "பீட்டா மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்றுக்கள் தென் ஆப்பிரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அதனால் அந்த நாட்டு மக்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தது. பல நாடுகள் இப்படி இல்லை" என்பது அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஒமைக்ரான் மரணங்கள்!
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்றில் மரணமடைந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களே!

பிரிட்டன்கூட தென் ஆப்பிரிக்கா போலவே இருக்கிறது. "ஒமைக்ரான் பாதிப்பைத் தடுப்பதில் பூஸ்டர் தடுப்பூசியின் திறனை இப்போது உணர்ந்துள்ளோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் 90 சதவிகிதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களே" என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

அமெரிக்காவில் ஒரே நாளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத உச்சம் இது. பிரான்ஸில் ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை எந்த நாடும் இவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டதில்லை.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி
தென் ஆப்பிரிக்காவில் நடந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி

"டிசம்பர் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் உலகெங்கும் சராசரியாக தினமும் ஒன்பது லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் 37 சதவிகிதம் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. உலகையே ஒமைக்ரான் சுனாமி போல தாக்குகிறது" என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கும் நேரத்தில்தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்த நம்பிக்கைத் தகவல் வந்துள்ளது.

அமெரிக்காவும் இன்னொரு நிம்மதித் தகவலை வெளியிட்டுள்ளது. 'ஒமைக்ரான் தொற்று குழந்தைகளையே அதிகம் பாதிக்கும்' என்று கூறப்பட்ட நிலையில், குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்வதும் அங்கு அதிகரித்துள்ளது. என்றாலும், பெரிதாக யாருக்கும் மோசமான பாதிப்பு இல்லை. 'குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால்தான் அவர்களுக்கு ஏற்படும் தொற்று அதிக அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. வெறும் ஒமைக்ரான் தொற்று என்றால் தீவிர பாதிப்பு இல்லை. ஒமைக்ரானும் டெல்டாவும் இணைந்து தொற்றிய குழந்தைகளுக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது' என்று அமெரிக்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. 'இது மூன்றாவது அலைக்கான முன்னோட்டமா' என்று மருத்துவர்கள் கவலையுடன் கேட்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா மரபணு மாற்றங்களை ஆராயும் அமைப்பான Indian SARS-COV-2 Genomics Consortia ஓர் ஆறுதல் கணிப்பைக் கூறியுள்ளது. "ஏற்கெனவே கொரோனா தொற்றியதோ, அல்லது தடுப்பூசி போட்டிருப்பதோ, ஒமைக்ரான் தொற்றை எந்த வகையிலும் தடுப்பதில்லை. என்றாலும், முந்தைய கொரோனா வகைகளைவிட இது மிகக் குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது" என்று புள்ளிவிவரங்களுடன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஒமைக்ரான் தொற்று
ஒமைக்ரான் தொற்று
குழந்தைகளுக்கு தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயது தாண்டியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் அறிமுகமாக உள்ளது. தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, ஒமைக்ரானைக் கடப்போம்.