Published:Updated:

`சீனாவை விஞ்சிய இத்தாலி; இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு!' - அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் உயிரிழந்ததைவிட இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்தாலியில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41,000-த்தைக் கடந்து போய் நிலைகுலைந்து நிற்கிறது இத்தாலி. கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பல்வேறு அரசுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான நிலை தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

`போர்க்களத்தின் நடுவே நடந்து செல்வதைப் போல உள்ளது!’ - கொரோனாவால் கதறும் இத்தாலி மருத்துவர்கள்

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க பலியானோரின் எண்ணிக்கை 10,000-த்தைக் கடந்திருக்கிறது. கொரோனாவால் சீனாவிலேயே அதிகமானோர் உயிரிழந்து வந்தனர். தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவை விஞ்சியிருக்கிறது.

கொரோனா,
கொரோனா,
AP

அந்த வகையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா முதன்முதலாகப் பரவிய சீனாவில் 3,245 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியில் அதைவிடக் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில், 3 நாள்களுக்கு முன்பு சுமார் 35,700 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் அதன் எண்ணிக்கை சுமார் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இத்தாலியில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 41,000-த்தைக் கடந்துள்ளது. இத்தாலி அரசும் மக்களும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாலேயே மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு