உலகிலேயே முதன்முறையாக மனிதர்களை ஈடுபடுத்தி கோவிட்-19 ஆய்வுகளைச் செய்வதற்கு பிரிட்டன் அனுமதியளித்தது. பிரிட்டன் அனுமதியளித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மனிதர்களை ஈடுபடுத்தி ஆய்வு மேற்கொள்வதற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கோவிட் தொற்றுக்கு முதலில் தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஒன்று. அந்தப் பல்கலைக்கழகம் தயாரித்த அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிதான், இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்டால் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொடர்பான ஆராய்ச்சிக்காக மனிதர்களை வைத்து இரண்டு கட்ட ஆய்வுகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட ஆய்வில் பங்கேற்பதற்காக தன்னார்வலர்களைத் தேடி வருகிறது பல்கலைக்கழகம். இதற்கு முன்பாக விஞ்ஞானிகள் பல்வேறு தொற்று நோய்களுக்கு மனிதர்களை ஈடுபடுத்தி ஆராய்ச்சி செய்துள்ளது. ஆனால் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாக்கி ஆராய்ச்சி செய்வது இதுதான் முதன்முறை.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட ஆராய்ச்சியில் ஒருவருக்கு தொற்றை ஏற்படுத்துவதற்கு எத்தனை வைரஸ் தேவைப்படும் என்றும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கம் எப்படி இருக்கிறது எனவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட ஆய்வின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே தொற்று பாதித்து மீண்டவர்கள் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றவர்களை ஆய்வுக்கு ஈடுபடுத்த உள்ளனர். அவ்வாறு ஈடுபடுத்துபவர்களை நேரடியாக வைரஸுக்கு வெளிப்பட வைத்து, அதிலிருந்து அவர்கள் உடலில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப்புத்திறனைக் கணக்கிட்டு, ஒரு தொற்றைத் தடுப்பதற்கு எவ்வளவு ஆன்டிபாடி தேவை என்று கணக்கிடவுள்ளனர். ``அந்த அளவு நோய் எதிர்ப்புத் திறனை ஒருவரின் உடலில் உருவாக்கும் வகையில் தடுப்பூசியை அப்டேட் செய்யவிருக்கிறோம்" என்று பல்கலைக்கழகப் பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியின் தலைவருமான ஜெலன் மெக் ஷேன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது. அதாவது, 18 முதல் 30 வயதுடைய ஆரோக்கியமானவர்களை ஈடுபடுத்தவுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் குறைந்தது 17 நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தகுந்த சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.