Published:Updated:

``நோ லாக் டவுன்; வீட்டுக்கு வெளியே வரக்கூடாது!" அமெரிக்க நிலவரம் சொல்லும் NRI சதீஷ்குமார் 

New York City
New York City ( Photo: AP )

அமெரிக்க கள நிலவரம் குறித்தும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்.

சீனாவில் தொடங்கி இத்தாலியைப் புரட்டிப்போட்டு, உலகையே பீதியில் ஆழ்த்தியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தற்போதைய கள நிலவரம் குறித்தும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்தும் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமாரிடம் பேசினோம்.

``சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தளவுக்கு உயர என்ன காரணம்?"

``அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே மிகப் பெரிய அளவிலான வர்த்தக உறவு உண்டு. இதனால் சீனாவிலிருந்து மக்கள் அமெரிக்கா வருவதும், அமெரிக்காவிலிருந்து மக்கள் சீனா செல்வதும் மிகச் சாதரணமான ஒன்று. சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா பற்றிய செய்திகள் சீனாவிலிருந்து வெளிவரத் தொடங்கியபோதும் அமெரிக்காவில் எப்போதும்போல சீனாவுடனான `Open border policy' நடைமுறையில்தான் இருந்தது. CDC (Centers for Disease Control and Prevention) எனப்படும் அமெரிக்க அரசின் சுகாதாரத்துறையின்கீழ் இயங்கும் ஆணையத்தின் அறிவுரைப்படிதான் இதுபோன்ற சமயங்களில் அரசு செயல்படும். ஆனால், அந்த அமைப்பு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கணித்தது. அதைக்கேட்ட அரசும் போதிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் விட்டதுதான் இன்று இந்தளவுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஒரு காரணம் என்று நினைக்கிறன். முதன்முதலில் வாஷிங்டன் மாநிலத்தில்தான் கொரோனா தொற்று இருப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால், வெகுவிரைவிலேயே கட்டுப்பாடின்றி நாடு முழுவதும் பரவியது வைரஸ். நியூயார்க், நியூஜெர்சி, கலிபோர்னியா பகுதிகள்தான் தற்போது கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.''

பேராசிரியர் சதீஷ்குமார்
பேராசிரியர் சதீஷ்குமார்

``ஆரம்ப கட்டத்தில் அமெரிக்க அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். தற்போது வைரஸின் பாதிப்பு மிக அதிக அளவில் அதிகரித்துள்ள நிலையில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது... இந்திய அரசு, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது அமெரிக்காவில் என்னென்ன கட்டுப்பாடுகளெல்லாம் விதிக்கப்பட்டுள்ளன?"

``தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது, சீனாவில் அரசு அதன் மக்களை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று உத்தரவிட்டால் அதை அங்கு கண்டிப்பாக மக்கள் மீறக்கூடாது. ஆனால், இங்கு அமெரிக்காவில் அரசு, மக்களை வீட்டை விட்டு வராதே! என்று நிபந்தனை செய்ய முடியாது. இன்றுவரை அதுபோன்ற எந்த விதிகளையும் அரசு விதிக்கவில்லை. அதற்கான சட்டமும் இங்கில்லை. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம், அதுதான் பாதுகாப்பு. வேலைக்குச் செல்வோரும் தற்போதைய சூழலில் வீட்டில் இருந்தே பணிபுரிந்துகொள்ளுங்கள் என்று அரசு மக்களுக்கு கோரிக்கைதான் விடுக்கமுடியும். அதன்படி மக்கள் அனைவரும் தாமாகவே வீட்டில் இருக்க வேண்டியதுதான்."

`Contact Tracking' கொரோனா பரவலைத் தடுக்க சிங்கப்பூரின் முறை இந்தியாவில் சாத்தியமா?

`` `வீட்டுக்கு வெளியே வராதே என்று கோரிக்கைதான் விடுக்க முடியும் அதைக் கண்டிப்பாக பின்பற்று' என்று அரசால் கூறமுடியாது என்று சொல்கிறீர்கள்? அப்படியென்றால் எந்த நம்பிக்கையில் அமெரிக்க அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?"

``பொதுவாக அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிக சமூகப்பொறுப்புடன் இருப்பர். அதனால், அரசின் கோரிக்கையின்படி தற்போது அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். தனிப்பட்ட நலனைத் தாண்டி, ஒரு சமூக அக்கறையுடனே மக்கள் இதை மேற்கொள்கிறார்கள். எனவே, அமெரிக்க அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள இயலும்."

Donald Trump
Donald Trump
AP / Alex Brandon

``அமெரிக்காவில் தற்போது இயல்பு வாழ்க்கை எவ்வாறு உள்ளது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது?"

``தற்போதைய நிலையில் அனைவரும் வீட்டில் இருந்தபடியேதான் அலுவலகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இங்கு பெரும்பாலான மக்கள் உணவகங்களில் மட்டுமே சாப்பிடுவதால் உணவகங்கள் (பார்சல் மட்டும்), மளிகைக் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து non-essential சர்வீஸ்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதுதவிர்த்து வெளிநாட்டு விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு இன்னும் உள்நாட்டு விமான சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், எனது காரை எடுத்துக்கொண்டு வெளியே சுற்ற முடியும். ஏன் அதிகம் கொரோனா பாதித்த நியூயார்க் நகரத்துக்கே சென்று வர முடியும்."

New York City
New York City
AP / Mark Lennihan

``தற்போது அமெரிக்காவில் வேலையிழக்கும் இந்தியர்களின் நிலையென்ன? அவர்களின் பொருளாதார சிக்கலைத் தீர்க்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?"

``இந்தியர்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலரும் தற்போது தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. விசா (visa) மூலம் பணிபுரிகிறவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை தங்கள் விசாவைப் புதுப்பிக்க வேண்டும். தற்போது கொரோனா பரவலால் அமெரிக்கா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் பலரும் தங்களின் விசாவைப் புதுப்பிக்கவில்லை. விசாவைப் புதுப்பிக்காதோர் 60 நாள்களுக்குள் புதிதாக ஒரு வேலையில் சேர வேண்டும் இல்லையென்றால், அந்த நபர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார். தற்போதுள்ள சூழ்நிலையில் புதிதாக வேலை தேடுவதும் சாத்தியமில்லை. எனவே, தற்போது அமெரிக்காவில் இருக்கும் வேலையிழந்த வெளிநாட்டவரின் நிலை கவலைக்குரியது. இதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுப்பதாகத் தெரியவில்லை."

``அமெரிக்காவில் பழையபடி பொருளாதாரம் சீராகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எவ்வளவு நாளாகும் என நினைக்கிறீர்கள்?"

``குறைந்தது ஒன்று முதல் இரண்டாண்டுகள் தேவைப்படும் என நினைக்கிறேன். அமெரிக்காவில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமே, இங்கு பெரும்பாலான பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதுதான். தற்போது இங்கேயே கார் தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகளிலும் மாஸ்க் தயாரிப்பு தொடங்கியுள்ளது. தற்போது மாஸ்கின் தட்டுப்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதுபோல் சிறிது சிறிதாக அனைத்துத் துறைகளும் பழைய நிலைமைக்குத் திரும்பி செயல்படத்தொடங்கும் என நம்புகிறோம்."

அடுத்த கட்டுரைக்கு