Published:Updated:

200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த கத்தார் ஏர்வேஸ் -வேலையிழப்பு அபாயத்தில் விமானப் பணியாளர்கள்

கத்தார் ஏர்வேஸ்
கத்தார் ஏர்வேஸ்

கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. இந்தச் சூழலை சமாளிக்கவே இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால், உலகப் பொருளாதாரம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப் பெரும் சரிவை கடந்த சில மாத காலங்களாகச் சந்தித்துவருகிறது. பெரும்பாலான நாடுகளில் விமான சேவை முற்றிலும் நிறுத்திவைக்க பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எல்லா நிறுவனங்களின் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தும், தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றன.

கொரோனாவால் சரியும் பொருளாதாரம்!

கடந்த வாரம் 'கத்தார் ஏர்வேஸ்' நிறுவனம், அதன் பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இன்னும் சில ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அளித்துள்ளது. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. இந்தச் சூழலை சமாளிக்கவே இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தொழிலாளர் செயலாளர் சில்வெஸ்ட்ரே பெல்லோ, பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

கத்தாரில் கொரோனா பாதிப்பு 400 நபர்களைத் தாண்டியுள்ளதால், அந்த நாட்டில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதித்து, அந்நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமான சேவைகளும் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்துடன் முடிவடையவுள்ள இந்த நிதியாண்டில், அந்த நிறுவனம் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள்
ஊழியர்கள்

எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 நாடுகளின் 177 சர்வதேச விமான நிலையங்களில், 200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வரும் உலகின் மிகப் பெரிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில், சுமார் 45,000-க்கும் மேற்பட்டோர் பணி புரிந்துவருகின்றனர். இந்நிலையில், 200 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு