Published:Updated:

கொரோனா நோய்த்தொற்று ஐரோப்பிய நாடுகளின் மூலமாகத்தான் பரவியதா?

ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன்

இந்தக் கொடிய நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டது, தொடங்கியது சீனாவில் என்றாலும், அது உலகம் முழுக்கப் பரவியதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஐரோப்பிய நாடுகளே.

கொரோனா என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர, பேசுவதற்குப் பெரிதாய் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. உலகம் முழுவதும் ராட்சசத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று, நாம் அறிந்த அனைத்தையும் மாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், வழக்கம்போல இதிலும் அமெரிக்கா ‘நான்தான் முதலிடத்தில் இருப்பேன்’ என்பது போல அதிக பாதிப்புகளோடு இருக்க, பல ஐரோப்பிய நாடுகள் நெருக்கமாக அமெரிக்காவைப் பின்தொடருகின்றன.

இந்தக் கொடிய நோய்த்தொற்று முதலில் கண்டறியப்பட்டது, தொடங்கியது சீனாவில் என்றாலும், அது உலகம் முழுக்கப் பரவியதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஐரோப்பிய நாடுகளே.

corona pandemic
corona pandemic

சீனாவில் தொற்று ஏற்பட்டதும், சீனாவிற்கு அருகில், சீனாவோடு 2,877-மைல் எல்லை பகிரும் மங்கோலியாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட தொற்று அபாயம் உள்ள நாடுகளிலிருந்து மக்கள் பயணிக்க முழுத் தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் மங்கோலியாவின் எல்லைக்குள் நுழைந்தது கொரோனா. அங்கு பதியப்பட்ட முதல் கொரோனா நோயாளி மாஸ்கோ வழியாக மங்கோலியாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு நாட்டுக்காரர். உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள 93 நாடுகளில் கொரோனா தொற்று பரவிய கதை இதுதான்! ஒரே மாற்றம் பிரெஞ்சு மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பயணிகள் அல்லது அரேபிய நாடுகளுக்குப் பயணம் சென்று திரும்பிய உள்நாட்டவர்கள். இதுமட்டுமல்ல கொரோனா ஆசியாவை விட அதிகம் பாதித்திருப்பது ஐரோப்பாவைத்தான். இதற்கு முக்கியக் காரணம் நிலைமையின் தீவிரத்தை ஐரோப்பிய நாடுகள் மிக தாமதமாக உணர்ந்ததுதான். அதனால்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வான்வழிப் பயணங்கள், மார்ச் மாதத்தில்தான் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

ஏப்ரல் 23 ஆம் நாளின் நிலவரப்படி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள 44 நாடுகளிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. வாடிகன் நகரை தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் ஒரு மரணமாவது ஏற்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு இந்தக் கொரோனா நோய்த்தொற்று தாக்குதலின் மையப்புள்ளியாக இருக்கின்றது ஐரோப்பா. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் சுமார் 250 மில்லியன் மக்கள், கடந்த ஒரு மாதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தனர்.

இத்தாலி
இத்தாலி
Luca Bruno

கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான முதல் பத்து நாடுகளில் ஐந்து, ஐரோப்பிய நாடுகளாக இருக்கின்றன. ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளின் ஐரோப்பிய பகுதிகளைத் தவிர்த்துவிட்டால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் முறையே இரண்டிலிருந்து ஆறு வரையிலான இடங்களில் இருக்கின்றன. இதில் குறிப்பாக ஜெர்மனியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஐயாயிரம் உயிரிழப்புகளோடு ஜெர்மனி வெற்றிகரமாக நோய்த்தொற்றைச் சமாளித்து வருகின்றது. மற்ற நான்கு நாடுகளில் தற்போதுதான் மெல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது.

மேற்கண்ட ஐந்து நாடுகளிலும் கடந்த 19 ஆம் தேதி முதல் தினசரி இறப்பு எண்ணிக்கை மெதுவாகக் குறைந்துவருகிறது. ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தற்போது சற்று நம்பிக்கை திரும்பியிருக்கிறது என்று ஆசுவாசமடைந்திருக்கிறார்கள். நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததை உறுதிசெய்யும் விதமாக அவசரத்தேவைக்கு ஆங்காங்கு பயன்படுத்தப்பட்ட அதிரடி மருத்துவமனைகள், சவக்கிடங்குகள் ஆகியவை ஒன்றொன்றாக மூடப்படுகின்றன.

ஸ்பெயின்
ஸ்பெயின்

பல ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு மெல்ல தளர்த்தப்படுகின்றன. சுவிட்சர்லாந்து, பின்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கை தளர்த்தாவிடில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மீண்டும் நோய் தாக்கினால் வரும் பாதிப்பை விட அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர் டென்மார்க் அதிகாரிகள்.

ஸ்பெயின் நாட்டில் கூட, விரைவில் குழந்தைகள் சிறிது நேரம் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இத்தாலியும் மிகக் கடுமையான ஊரடங்கை சற்று தளர்த்தியிருக்கிறது.

இன்னும் முழுவதுமாக நோய்த் தொற்று பிரச்னையிலிருந்து வெளிவராவிட்டாலும், நிலைமையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர்.

பிரிட்டன் நாடு பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை தேறி வரும் நிலையில், இந்தப் பிரச்னைக்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தவறியதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

2008 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியை விட மிக மோசமான பொருளாதார விளைவுகளை ஐரோப்பா, இந்த covid-19 நோய்தொற்றின் காரணமாகச் சந்திக்கும் என்று அனுமானித்திருக்கிறது ஐரோப்பிய ஆணையம். முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சுற்றலாத்துறை ஆண்டுதோறும் சுமார் 550 பில்லியன் யூரோ வருமானம் ஈட்டக்கூடிய துறை. அதிலும் சுற்றலாத்துறையின் மூலமாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுமார் 26 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். கொரோனா தாக்கத்தால் முற்றிலும் முடங்கியிருக்கிறது சுற்றுலாத்துறை. இது அந்நாடுகளுக்கான மிக முக்கியப் பாதிப்பு.

மற்ற துறைகளைப் போலவே, ஊடகத் துறையும் அங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் ஆணையத்திற்கு ஊடகத் துறையைக் காப்பாற்ற உதவுமாறு ஊடகங்கள் ஒரு திறந்த கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா யுத்தத்தில் வெற்றி... உலகையே அசர வைத்த 7 பெண் ஆட்சியாளர்கள்!

டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, அயர்லாந்து பிரச்னையைக் குறிப்பிடத்தக்க வகையில் கையாண்டிருக்கின்றன. நோய்த் தொற்றைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கின்றன இந்த நாடுகள். இவை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து, ஊரடங்கைத் தளர்த்தி மெல்ல மீண்டுகொண்டிருக்கின்றன.

ஒரு போரைக் காட்டிலும், அதிக அளவிலான இயக்கத்தை தடுத்திருக்கும் இந்த நோய், உலகின் முடிவு அல்ல என்பதே நிதர்சனம். உலகம் மீண்டும் புதிய இயல்பில் இயங்கத் தொடங்கும், நிறைய மாற்றங்களைக் காணும், ஐரோப்பாவிலும் அதேதான் நிலை. குறிப்பாக 27 நாடுகள் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியம் எல்லாத் திசைகளில் இருந்தும் அதைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஐரோப்பா புதிதாக தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு முன்னேற்றத்தோடு, மீண்டும் அதன் பொருளாதாரத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல, அதன் வெளியுறவுத் தொடர்பிலும் அயல்நாட்டு உறவிலும் பெரும் மாற்றங்களைக் காணும்.

ஐரோப்பிய ஒன்றியம், உண்மையில் ஒன்றிணைந்து இயங்குவதில் தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தனிப்பட்டு அவர்களுக்கு இருக்கும் பலவீனத்தையும் உணரத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அதன் உறுப்பு நாடுகளின் சுகாதாரத் துறையை மேம்படுத்தாமல் இருந்தது என்னும் உண்மை தற்போது உறைக்கத் தொடங்கியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் என சுகாதாரத் துறையில் பெரிதும் தாங்கள் பின்னடைந்து இருப்பதும், இப்படியான ஒரு நோய்த் தொற்றை தங்களால் சமாளிக்க முடியாமல் இருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம்பொருந்திய பிம்பத்தை உடைத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியிருக்கும் சமயத்தில், மற்ற நாடுகள் தங்களுக்கான ஒரு வலுவான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, அதன் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் ஒரு நோய்த்தொற்று பரவி, இப்படியான மருத்துவ இடர்பாடு இருக்கும் சூழலில் கூட ஒற்றுமையை கடைபிடிக்க முடியாத நாடுகள் எப்படி ராணுவ பலத்தை ஒற்றுமையோடு அதிகரிக்க முடியும் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. ஆனால் ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமைகளைவிட, சிறப்பாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை செயல்பட்டிருக்கிறது என்பதே உண்மை. சுயநலமாக செயல்படும் மற்ற நாடுகளின் தலைமைகளிடம் இருந்து வரும் வெளிப் பிரச்சனையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் தன்னை பாதுகாத்துக் கொள்ள உள்ளிருந்து அதன் ஒற்றுமை வலுப்பெற வேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு