Published:Updated:

ஜின்னுக்குப் பதிலாக ஹேண்ட் சானிடைஸர்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் புதிய முயற்சி!

ஷேன் வார்ன்
ஷேன் வார்ன்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஷேன் வார்ன் ஆஸ்திரேலியாவில் 708 என்ற பெயரில் பிரத்யேக ஜின் வகையை உற்பத்திசெய்து விற்பனை செய்துவருகிறார்.

கிரிக்கெட் பந்துவீச்சில், 'சுழல் ஜாம்பவான்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் இவர், ஆஸ்திரேலியாவில் '708' என்ற பெயரில் பிரத்யேக ஜின் வகையை உற்பத்திசெய்யும் நிறுவனம் நடத்திவருகிறார். ஷேன் வார்னின் ஜின்னுக்கு ஆஸ்திரேலியாவில் தனி மவுசு என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவின் சிறந்த ஜின் வகையாக ஷேன் வார்னின் 708 ஜின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vikatan

கிரிக்கெட்டில் சாதனைகள் பல புரிந்து, தன்னை சாதனையாளராக முன்னிறுத்திய ஷேன் வார்ன், கிரிக்கெட்டிலும் தன் தொழில் வாழ்க்கையிலும் வெற்றியாளராகத் திகழ்ந்துவருகிறார். இந்த மாதம் உலகமே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனாதான். அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு உலகமெங்கும் பேசப்பட்ட ஒரே விஷயம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ. ஒட்டுமொத்த உலகையும் அதன் பக்கம் திரும்பச் செய்தது, அந்த நேரத்தில் உலகமெங்கிலும் இருந்து ஆஸ்திரேலிய காட்டுத்தீ-க்கு நிவாரண நிதிகள் கிடைத்தன.

அந்தச் சமயத்தில் ஷேன் வார்ன், நிவாரண நிதியாகப் பெரும் தொகையைத் தந்தார். மேலும், கிரிக்கெட் போட்டிக் காலங்களில் தான் பயன்படுத்திய பேகி கிரீன் என்ற தொப்பியை ஏலத்தில் விட்டு அதன்மூலம் இந்திய மதிப்பில் 3.70 கோடி ரூபாயை நிவாரண நிதியாகவும் வழங்கினார்.

ஷேன் வார்ன்
ஷேன் வார்ன்

தற்போது, ஒட்டுமொத்த உலகையே கலங்கடித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பை சமாளிக்க, தன்னுடைய 708 நிறுவனத்தில் ஜின் உற்பத்தி செய்வதை தேதி அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளார். மேலும், தனது நிறுவனத்தின் சார்பாக ஆஸ்திரேலியாவில் நிலவிவரும் ஹேண்ட் சானிடைஸர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ஜின்னுக்குப் பதிலாக ஹேண்ட் சானிடைஸர் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து 800-க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொடர்ந்து, அந்த நாட்டில் முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி போன்றவற்றின் தேவை மிகுதியாக உள்ளது.

உலக நாடுகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால்,வெளி நாடுகளில் இருந்தும் அவற்றை இறக்குமதி செய்யமுடியாத நிலை. இதனால், அந்நாட்டின் பிரதமர், மருந்து நிறுவனங்களை உற்பத்திசெய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, ஷேன் வார்ன் தனது நிறுவனத்தில் 70% ஆல்கஹால் கொண்டு முதல் தரத்தில் ஹேண்ட் சானிடைஸர்கள் தயாரித்து, அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க உள்ளார்.

`நோ ஹேண்ட் ஷேக்; பயணத் திட்டம்!' - கொரோனா எச்சரிக்கையால் தென்னாப்பிரிக்கா அலர்ட் #INDvSA

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷேன் வார்ன், "கொரோனா நோய் பாதிப்பின் காரணமாக உலகப் பொருளாதாரமும் உற்பத்தியும் முடங்கிக்கிடக்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலும் பரவலாகப் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதனால், மக்கள் நலன் கருதி 708 ஜின் உற்பத்தியை நிறுத்தி வைத்துவிட்டு, தற்காலிகமாக 70% ஆல்கஹால் கொண்டு தயாராகும் ஹேண்ட் சானிடைஸர்களை உற்பத்திசெய்யத் திட்டமிட்டுள்ளோம்.

என்னுடைய நிறுவனத்தின் இரண்டு பங்குதாரர்கள் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் ஆலோசனையின்படி நல்ல தரமான ஹேண்ட் சானிடைஸர் தயாரிப்பில் இறங்கியுள்ளோம். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட 708 ஜின் பாட்டில்கள் எங்களிடம் அதிக அளவு தேங்கி உள்ளன. எனவே, அதை ஆன்லைனில் விற்பனை செய்ய இருக்கிறோம். தேவை இருப்போர் ஆன்லைனில் ஆர்டர் செய்து 708 ஜின்னைப் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு