Published:Updated:

ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு... சிங்கப்பூரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

corona outbreak
corona outbreak

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சிங்கப்பூரில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு, அந்த வைரஸ் பரவாமல் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவுக்குச் சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டதும், முதலில் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்ததும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் `ஸ்வைன் ப்ளூ வைரஸ்' தாக்குதல் நடந்தபோது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

corona outbreak
corona outbreak

ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் சுகாதார அமைச்சகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குப் பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்படுவார்கள். குறிப்பாக, கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களுக்குச் சுகாதார அமைச்சகம் தகவல் அனுப்பும்.

சுகாதார அமைச்சகத்தின் தகவல் பெறப்பட்டவர்கள், உடனடியாக மாஸ்க் அணிய வேண்டும். சுகாதார அமைச்சகத்திலிருந்து தனக்கு வந்துள்ள தகவல் குறித்து, அலுவலகத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி, மனிதவள அலுவலரிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். பின்னர், தனது தொடர்பு முகவரி விவரங்களை அளித்துவிட்டு சம்பளத்துடன்கூடிய விடுப்பில் செல்ல வேண்டும். வீட்டில் தனிமையில் இருந்தபடி, மருத்துவப்பரிசோதனை எடுக்க வேண்டும். தினமும் இருமுறை உடலின் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும். வெப்பநிலை குறித்த விவரங்களை அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்தான, சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பரிசோதனைக்குப்பின் வைரஸ் தாக்குதல் இல்லையென்று தெரிந்தால் அதுகுறித்து சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் மொத்த முன்வரலாறும் சேகரிக்கப்படும். கடந்த சில நாள்களாக அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார், எந்தக் கடைகளில் பொருள்கள் வாங்கினார், அவரது அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதுவிஷயத்தில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புடனும், எச்சரிக்கையுணர்வுடனும் செயல்பட்டுவருகிறது.

அதேபோல, ஏதேனும் காரணத்துக்காக சீனா, ஹாங்காங் நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள், அலுவலகத்துக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து 14 நாள்களுக்கு வீட்டில் தனித்திருந்து வைரஸ் தாக்குதலுக்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளையும் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும். தீவிர கண்காணிப்புக்குப்பின் வைரஸ் தாக்குதல் இல்லையென்று உறுதியானபின்னர், அவர் அலுவலகம் வருவது குறித்து சுகாதார அமைச்சகம் முடிவெடுக்கும். சிங்கப்பூரிலுள்ள அலுவலகங்களில், பணியாளர்கள் காலையில் உள்நுழையும்போதும், மாலையில் வீடு திரும்பும்போதும் அவர்களது உடல் வெப்பநிலை அளவிடப்படுகிறது. காய்ச்சல் இருப்பதுபோல் தெரியவந்தாலோ, சளி, இருமல் இருந்தாலோ, உடனடியாகச் சுகாதார அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டு கொரோனா தாக்குதல் குறித்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

corona outbreak
corona outbreak

வீட்டிலிருந்தே பணியாற்ற விரும்பும் அலுவலர்களுக்கு, அலுவலகங்களில் முன்னுரிமை தரப்படுகிறது. அலுவலகங்களிலும் ஷாப்பிங் மால்களிலும் அமைந்துள்ள லிஃப்டுகள், படிக்கட்டுக் கைப்பிடிகள், ஏடிஎம் மெஷின்கள் போன்றவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பயம் காரணமாக, ஷாப்பிங் மால்களில், தியேட்டர்களில் மக்கள் கூடுவது தற்போது குறைந்துள்ளது.

பள்ளிகளில் காலையில் நடக்கும் ப்ரேயர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் இடைவேளைகளில் கழிவறைகளைக் கூட்டமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. யாருக்காவது சிறிது உடல்நலக்குறைவென்றாலும் பள்ளிக்கு வரவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் யாருக்கேனும் உடல்நலக்குறைபாடு கண்டறியப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

corona outbreak
corona outbreak

சிங்கப்பூர் மக்கள், சீனாவிலிருந்து இறக்குமதியாகக்கூடிய பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் முழுவீச்சில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

பின் செல்ல