பொதுவாக ஒருவருக்குக் கொரோனா பெருந்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதன் முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆகும். ஆனால் ஒருவரது மூச்சுக் காற்றை வைத்தே அவருக்குக் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டறிந்துவிடலாம் என்று சொல்கிற சிங்கப்பூர் அரசு, இந்தப் பரிசோதனை முறைக்கு தற்காலிகமாக அனுமதியையும் அளித்துள்ளது. சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘பிரத்தானிக்ஸ்' (Breathonix) என்கிற நிறுவனம் இந்தப் பரிசோதனைக்கான கருவியைக் கண்டறிந்துள்ளது.
இந்தக் கருவி மூலம் குறிப்பிட்ட அளவிலான மக்களிடம் நடத்தப்பட்ட கொரோனா சார்ந்த மூச்சுப் பரிசோதனையில் 90%க்கும் அதிகமான துல்லிய முடிவுகள் கிடைத்ததாக `பிரத்தானிக்ஸ்' நிறுவனம் சென்ற வருடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு அளித்துள்ள இந்தத் தற்காலிக அனுமதியை அந்நாட்டின் சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமும் உறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட தற்காலிக அனுமதியைப் பெற்றுள்ள முதல் நிறுவனம் என்கிற அடையாளமும் `பிரத்தானிக்ஸ்'க்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரி... ஒரே நிமிடத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கண்டறியும் கருவி குறித்து இப்போது பார்க்கலாம். இந்தக் கருவியில், ஒரு முறை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எரியும் வண்ணம் டிஸ்போஸபள் ஊதுகுழல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதன்மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்படும் என்கின்றனர் இந்தக் கருவியை வடிவமைத்த அறிவியலாளர்கள். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர் இக்கருவியில் உள்ள ஊதுகுழலில் தனது மூச்சுக்காற்றை ஊதவேண்டும். அவ்வாறு ஊதும்போது இக்கருவியில் செயல்படும் தொழில்நுட்பமானது மூச்சுக்காற்றில் உள்ள வேதிப்பொருள்களை கணக்கீடு செய்து குறிப்பிட்ட அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடும்.
இந்தப் பரிசோதனை வழியாக ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை முறையை சிங்கப்பூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் வணிக ரீதியிலான முயற்சிகளிலும் `பிரத்தானிக்ஸ்' இறங்கியுள்ளது. சிங்கப்பூரைப் போலவே நெதர்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் மூச்சுக் காற்றைக் கொண்டு கொரோனா பெருந்தொற்றைக் கண்டறியும் சோதனைகளை நடைமுறைப்படுத்தவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.