Published:Updated:

`அதனால் என்ன?!’ - கொரோனா விவகாரத்தில் அலட்சியம்; பிரேஸில் அதிபருக்குக் குவியும் கண்டனங்கள் #Corona

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

``நாட்டு மக்கள்மீது அதிபர் போல்சனாரோவுக்கு அக்கறை இல்லை. மக்கள்தான் ஒன்றிணைந்து தங்களுக்கான பாதுகாப்புச் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவருக்கு, தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும்.”

உலக அளவில் கொரோனா வைரஸானது தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை பெரிய விஷயமாகக் கருதாத பல நாடுகளும், இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையிலும், சில நாடுகள் வைரஸ்ஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டுவரும் பிரேஸிலில், வைரஸை எதிர்த்துப் போராடவும், பொது சுகாதார நெருக்கடியை சமாளிக்கவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது, அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோதான் என மருத்துவம் தொடர்பான இங்கிலாந்து இதழான, `தி லான்செட்’ விமர்சனம் செய்துள்ளது.

கொரோனா உலக நாடுகள்
கொரோனா உலக நாடுகள்

அதிபர் பொல்சனாரோ, ஆரம்பம் முதலே லாக்டௌன் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே பேசிவந்தார். இதனால், லாக் டவுன் தொடர்பாகப் பல்வேறு குழப்பங்கள் அங்கு நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரேஸிலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 750-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,000-ஐ கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,897 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழலிலும் வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் அவர் அலட்சியம் காட்டுவதாக `தி லான்செட்’ விமர்சித்திருக்கிறது.

வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த வாரம் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்விக்கு, ``அதனால் என்ன? மன்னிக்கவும். ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்..?” என்று பதிலளித்தார். அவரின் பதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக லான்செட், ``போல்சனாரோ, அரசியல் ரீதியாக கொரோனா தொடர்பான நடவடிக்கைகளைக் கையாள்கிறார். பிரேஸில் மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து, நாட்டின் அதிபர் கூறிய `அதனால் என்ன?’ என்ற கேள்விக்கு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்ற வேண்டும்” என்று விமர்சித்தது. இந்த விமர்சனத்துக்கும் போல்சனாரோவின் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

`நிதி'க்காகவே காட்டுத் தீ; டிகாப்ரியோ -பிரேசில் அதிபர் மோதல்! - பற்றியெரியும் `அமேசான்' அரசியல்

தொடர்ந்து லான்செட் பிரேசில் எதிர்கொள்ளும் சவால்களையும் குறிப்பிட்டது. அதில், ``13 மில்லியன் பிரேஸிலியர்கள், குடிசைப் பகுதிகள் உள்ள ஃபாவேலாஸில் வாழ்ந்துவருகின்றனர். அங்கு, சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளும் சமூக விலகலும் பின்பற்ற முடியாதவை. அமேசான் மழைக்காடுகளில் சட்டவிரோதமாக சுரங்கங்களுக்கு அனுமதி அளிப்பதால், வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பே அங்குள்ள மக்கள் பாதிப்படைந்தனர். தற்போது, இந்தத் தொழிலாளர்கள் மூலம் தூரத்தில் உள்ள மக்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்தது. இதேபோல, லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``பிரேஸிலில் தொற்று நோய் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து அதிகமாகும். அந்நாட்டில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” எனக் கூறியுள்ளது.

கொரோனா
கொரோனா

பிரேஸில் அதிபர் பொல்சனாரோவைவிட மாநில மற்றும் மாகாண அரசுகள் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஊரடங்கைவிட நாட்டின் பொருளாதாரமே முக்கியம் என்றும், மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் போல்சனாரோ கூறினார். மேலும், அரசின் நடவடிக்கைகளுக்கு மாற்றுக் கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சரையும் பதவி நீக்கம் செய்தார்.

கொரோனா பிரச்னைக்கு முன்பிலிருந்தே அவர்மீது பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துவந்தன. இந்நிலையில், ``நாட்டு மக்கள்மீது அதிபர் போல்சனாரோவுக்கு அக்கறை இல்லை. மக்கள்தான் ஒன்றிணைந்து தங்களுக்கான பாதுகாப்புச் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அவருக்கு தகுந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும்” என்றும் `தி லான்செட்’ குறிப்பிட்டுள்ளது.

`நிரம்பிய குளிரூட்டப்பட்ட அறைகள்; ஒரே குழியில் 5 உடல்கள்’ - புதைக்க இடமின்றித் தவிக்கும் அமேசான்
அடுத்த கட்டுரைக்கு