கோவிட் -19 நோய்த்தொற்றுப் பரவல் முதலாம் அலையின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், பாதிக்கப்பட்ட பல தனிநபர்கள் தனிமைப்படுத்தலுக்கு ஆளானார்கள். இரண்டாம் அலையின்போது, குடும்பங்கள் குடும்பங்களாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள் மக்கள். இந்நிலையில், ஏழு வயதாகும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் முதல் அலையில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட குடும்பம், இரண்டு வருடங்களுக்குப் பின் இப்போதுதான் வெளி உலகுடன் இணைந்துள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்காட்லாந்தை சேர்ந்த இரட்டை குழந்தைகளான ஓரின் மற்றும் ஒலிவியா ஆர்தர், பாம்ப்பே நோயால் (Pompe disease) பாதிக்கப்பட்டுள்ளனர். உடலால் புரொட்டீனை உற்பத்திய செய்யவியலாத ஒரு நிலையால் ஏற்படும் இந்நோய், இதயம் மற்றும் நுரையீரலை பலவீனமாக்கும். எனவே கொரோனா முதல் அலையின்போது, நோய்த்தொற்றில் இருந்து ஓரின் மற்றும் ஒலிவியா ஆர்தரை காக்க, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஈஸ்டர் ராஸில் டெய்னில் உள்ள தங்கள் வீட்டில் அவர்களுடன் தங்களையும் தனிமைப்படுத்திக் கொண்டனர் அவர்களின் பெற்றோர். குழந்தைகளுக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை அளிக்க, மருத்துவமனை பணியாளர் சன்னல் வழியாகவும், தோட்டத்தில் வைத்தும் அவர்களை சந்தித்து வந்தார்.
இப்போது, தங்கள் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திய பின்னர், இந்த இரட்டையர் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி, பாட்டி, உறவினர்கள் எனச் சந்திக்க அயர்லாந்துக்குச் சென்றுள்ளனர்.
இரண்டு வருட தனிமைப்படுத்துதல் கால அனுபவம் பற்றி இரட்டை குழந்தைகளின் அம்மா லிண்ட்சே கூறுகையில், 'குழந்தைகளில் யாருக்கு, எப்போது உடல்நிலை சரியில்லாமல் போகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. சாதாரண ஜலதோஷம் கூட அவர்களை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்குமளவுக்குச் சென்று விடும். எனவே, கோவிட் - 19 பிடியில் இருந்து எங்கள் குழந்தைகளை பாதுகாக்க, இரண்டு ஆண்டு சமூக வாழ்க்கை இன்றி, வீட்டில் அடைபட்டுக் கிடந்தோம். இப்போது, ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் உலகத்துடன் கலக்கப்போகிறோம்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

'12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசியை, ஸ்காட்லாந்தில் எங்கள் குழந்தைகள்தான் முதன்முதலில் எடுத்துக்கொண்டவர்கள் என்று நினைக்கிறோம். இப்போது எங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வளையம் கிடைத்துவிட்டது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நேரம், கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பிறகு எங்களுக்கு வந்துவிட்டது' என்று பரவசத்துடன் தெரிவித்துள்ளனர் இரட்டையர்களின் பெற்றோர்.