Published:Updated:

`கருவை 6 வாரங்களுக்குப் பின் கலைக்கக்கூடாது!' - அமெரிக்காவின் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

தாயின் உயிரை பாதிக்கும் என்றாலோ, கருவில் இருக்கும் குழந்தைக்குப் பெரிய அளவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ மட்டுமே 20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தாயின் வயிற்றில் வளரும் கருவுக்கு ஆறு வாரங்கள் ஆகிவிட்டால், அதற்கு இதயத் துடிப்பு உண்டாகியிருந்தால் அக்கருவைக் கலைக்கக்கூடாது என்கிற புதிய சட்டம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அமலுக்கு வந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை மற்றும் சகோதர முறை உள்ளவர்களிடம் கொள்ளும் உறவு உள்ளிட்ட, சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத வகையில் கரு உண்டாகி, அதற்கு ஆறு வாரங்கள் ஆகிவிட்டால் அக்கருவையும் கலைக்கக்கூடாது என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அங்குள்ள பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருக்கலைப்பு
கருக்கலைப்பு
Pixabay
மகளை சிறார் வதை செய்தவருக்கு ஜாமீன் கொடுக்க அனுமதித்த தாய்; அபராதம் விதித்த நீதிமன்றம்!

செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன்புவரை, 20 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் அனுமதி இருந்தது. தாயின் உயிரை பாதிக்கும் என்றாலோ, கருவில் இருக்கும் குழந்தைக்குப் பெரிய அளவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ மட்டுமே 20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆறு வாரங்கள் ஆகிவிட்டாலே அக்கருவைக் கலைக்கக்கூடாது என்கிற புதிய சட்டம் போடப்பட்டுள்ளது.

ஆறு வாரக் கருவைச் சுமந்திருக்கும் பெண்களுக்கு தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே சில சமயங்களில் தெரியாது. 45 நாட்களுக்குப் பிறகே தீர்மானமான ஒரு முடிவுக்கு அவர்களால் வரமுடியும். ஒரு பெண்ணின் கடைசி மாதவிடாய் நாளை வைத்தே அவரது கர்ப்ப காலம் கணக்கிடப்படுகிறது என்றாலும், உடற்பருமன், தைராய்டு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்களில் பலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் உண்டாகும்.

இந்தக் காரணங்கள் தவிர, இயல்பாகவே 30-35 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும் பெண்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கருவுறும்போது தாங்கள் கருவுற்றிருப்பதையே இவர்களால் சற்று தாமதமாகத்தான் அறிந்துகொள்ளமுடியும். இத்தனை சிக்கல்கள் ஒரு பெண்ணைச் சூழ்ந்திருக்கையில் கருவுக்கு ஆறு வாரங்கள் ஆகிவிட்டாலே அதனைக் கலைக்கக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று பெண்நலச் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேபோல, `பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் கருவுற்றாலும் அவர்களுக்கும் இதே சட்டம்தான் என்று சொல்வது ஏற்புடையதே அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆறு வாரங்கள் தாண்டிய ஒரு கருவை தாய் சுமக்கும்போது எதிர்பாராத விதமாக தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு கருக்கலைப்பை செய்தே ஆகவேண்டும் என்கிற ஒரு சூழ்நிலை வந்தால் அப்போதும் கருக்கலைப்பு செய்யாமல் இந்தச் சட்டத்தைக் காரணம் காட்டி தாயின் உயிருடன் விளையாடுவீர்களா?' என்று அங்குள்ள பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜோ பைடன் | Joe Biden
ஜோ பைடன் | Joe Biden
Andrew Harnik
கணவரின் சந்தேகம், கையில் பட்டன் போன்; 23 வயதிலேயே தண்டனையாக மாறிய வாழ்க்கை! #PennDiary - 29

டெக்ஸாஸ் மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தோடு, உயிரோடு இச்சட்டம் விளையாடுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பாலானோர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு