Published:Updated:

`தீவிரவாதத் தாக்குதலைவிட பயங்கரமானது; 1,000 பேரைத் தாண்டிய பலி!' - கொரோனாவால் பதறும் WHO

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ் ( AP )

தீவிரவாதத் தாக்குதலைவிட பெரிய பாதிப்புகளை நிகழ்த்தும் வல்லமை கொரோனா போன்ற வைரஸுக்கு இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) அச்சம் தெரிவித்திருக்கிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 1,017 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 42,708 பேர் பாதிக்கப்பட்டு, தனிமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்கவும் நோய்க்கான எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளையும் சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேநேரம், உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ்
Xue Yuge

இதுதொடர்பாக, இரண்டு நாள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உலக சுகாதார நிறுவனம் கூட்டியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலந்துகொண்டனர்.

`1,000 பேரைக் கடந்த கொரோனா பலி எண்ணிக்கை; எச்சரிக்கும் WHO!'- களத்தில் இறங்கிய சீன அதிபர்

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய உலக சுகாதர நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் (Tedros Adhanom Ghebreyesus), ``இந்த வைரஸுக்கு COVID-19 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட புவியியல் அமைப்பைக் கொண்ட நாடுகளை மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் இந்த வைரஸ் தாக்குதலால் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலைவிடவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான அதிக பாதிப்புகளை ஒரு வைரஸால் ஏற்படுத்த முடியும்
உலக சுகாதர நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம்

உலக நாடுகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்து, நோய்த் தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, சுகாதார நடிவடிக்கைகளில் பின் தங்கியிருக்கும் 30 நாடுகளைச் சேர்ந்தோர், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பு கொரோனாவால் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்றார்.

`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona

உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள்குறித்துப் பேசிய அவர், ``எந்தவொரு தீவிரவாதத் தாக்குதலைவிடவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான அதிக பாதிப்புகளை ஒரு வைரஸால் ஏற்படுத்த முடியும். எனவே, பொதுமக்களின் முதல் எதிரியாக இந்த வைரஸைப் பாவித்து, அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

டெட்ரோஸ்
டெட்ரோஸ்
AP

அதேபோல், கொரோனா தடுப்பு மருந்துகுறித்துப் பேசிய அவர், ``கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 18 மாதங்களில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது நம்மிடமுள்ள மருந்துகளைக் கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமும் தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா
பின் செல்ல