Published:Updated:

குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடுகின்றனவா நிறுவனங்கள்?

குரங்கு அம்மை

வழக்கமாக ஆப்பிரிக்க நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரங்கு அம்மை தொற்றும் ஏற்படும். இம்முறை உலகெங்கும் பரவுவது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, சதித்திட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் கிளம்பிவிட்டன.

குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடுகின்றனவா நிறுவனங்கள்?

வழக்கமாக ஆப்பிரிக்க நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரங்கு அம்மை தொற்றும் ஏற்படும். இம்முறை உலகெங்கும் பரவுவது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, சதித்திட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் கிளம்பிவிட்டன.

Published:Updated:
குரங்கு அம்மை
புதிதாக ஒரு நோய் பரவும்போது, மக்கள் அச்சத்தில் தூக்கம் தொலைக்கிறார்கள். ஆனால், நாடுகள் அதைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் பெயரைக் கெடுக்கப் பார்க்கின்றன. மருந்து நிறுவனங்கள் உற்சாகத்துடன் வியாபாரக் களத்தில் குதிக்கின்றன. தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் அபகரிக்கின்றன. கொரோனா தொற்று பல மருந்து நிறுவன அதிபர்களை உலகின் மகா கோடீஸ்வரர்களாக மாற்றிய செய்தியை சமீபத்தில்தான் படித்தோம். குரங்கு அம்மை அதை `ரிப்பீட்டு' செய்கிறது.
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் திடீரெனப் பரவி நூற்றுக்கணக்கானவர்களைத் தொற்றிய குரங்கு அம்மை இன்று உலகை அச்சுறுத்தும் புதிய நோய். கொரோனாவுக்குப் பிறகு பல நோய்கள் திடீர் கவனம் பெறுகின்றன. நிஃபா வைரஸ் நோய், தக்காளிக் காய்ச்சல், மேற்கு நைல் ஜுரம் ஆகியவற்றின் வரிசையில் இப்போது குரங்கு அம்மை.

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் இன்னும் ஒரு நோய்தான் குரங்கு அம்மை. ஆப்பிரிக்க நாடுகளில் பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடம் இது முதலில் அறியப்பட்டது. எலிகள், அணில்கள் மூலம் இது மனிதர்களுக்கும் பரவுகிறது. பல்வேறு நாடுகளின் பரிசோதனைக்கூடங்களுக்காக இந்த எலிகள், அணில்கள் போன்ற விலங்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவை உலகம் முழுக்க வைரஸைப் பரப்புகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யும் மனிதர்களும் வைரஸை சுமந்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா
AP

ஒரு நோய் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தினால், மருத்துவ உலகம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாது. ஆனால், ஏழை ஆப்பிரிக்க நாடுகளைத் தாண்டி ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் என்று வளம் கொழிக்கும் தேசங்களையும் முதல்முறையாக குரங்கு அம்மை அச்சுறுத்துவது, உலகைப் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

குரங்கு அம்மையைப் பரப்புவது காங்கோ, மேற்கு ஆப்பிரிக்கா என்று இரண்டு ரக வைரஸ்கள். கொரோனா போல வேகமாகவும் அதிகமாகவும் இது பரவாது என்பது ஆறுதல். "நோய் தொற்றிய ஒருவருடன் சருமத்தைத் தொடும் அளவுக்கு நெருக்கமாகப் பழகினால் மட்டுமே இது தொற்றும். கொரோனா போல புதிய நோய் இல்லை என்பதால், இதைச் சமாளிப்பதும் சுலபம்" என ஆறுதல் தருகிறார்கள் மருத்துவர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைரஸ் தொற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகே அறிகுறிகள் தெரியும். ஜுரம், தலைவலி, தசைவலி, முதுகுவலி, சோர்வு, அக்குள், தொடை போன்ற இணைப்புகளில் நெறிக்கட்டுவது ஆகியவற்றுடன் ஆரம்பித்து, அம்மை போன்ற சிவப்பு கொப்புளங்கள் உடலில் தோன்றும். அதிகமாக முகம், உள்ளங்கை, பாதங்களில் வரும். சின்னம்மை, தட்டம்மை போன்ற வழக்கமாக சீசனில் வரும் அம்மைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துவது நெறிக்கட்டிகளும் வீக்கமும்தான்! குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதிப்பு தீவிரமாகும். குரங்கு அம்மைக்கு நேரடி சிகிச்சை என எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கட்டுப்படுத்த சிகிச்சை தருவார்கள். வைரஸ் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கப்படும்.

கொரோனாவுக்குப் பிறகு என்ன நோய் வந்தாலும் லாக்டௌன், பொருளாதார முடக்கம் போன்ற கவலைகள் நோயைவிட வேகமாகப் பாவுகின்றன. கொரோனா அளவுக்கு இது தீவிரத் தொற்று இல்லை என்பதால், குரங்கு அம்மையால் பொது முடக்கம் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்திவிட்டது. என்றாலும் முகக்கவசம் அணிவது குரங்கு அம்மை தொற்றையும் குறைக்கும் என்பதால், பல நாடுகளில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் ஆகலாம்.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை
வழக்கமாக ஆப்பிரிக்க நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குரங்கு அம்மை தொற்றும் ஏற்படும். இம்முறை உலகெங்கும் பரவுவது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே, சதித்திட்டங்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் கிளம்பிவிட்டன.

"அமெரிக்காவே இதை ஆய்வுக்கூடங்களிலிருந்து பரப்பியது" என்று குற்றம் சாட்டுகிறார் ரஷ்யாவின் ரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படையின் தலைவரான இகோர் கிரிலோவ். "நைஜீரியா நாட்டின் லாகோஸ், அபுஜா, ஜாரியா நகரங்களில் அமெரிக்காவின் உயிரி ஆயுத ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. ஆபத்தான பல வைரஸ்களைக் கையாளும் இந்த இடங்களிலிருந்தே குரங்கு அம்மை பரவியது" என்கிறார் அவர். அமெரிக்கா இதை மறுத்துள்ளது. என்றாலும், சீன மற்றும் ரஷ்ய ஊடகங்கள் இந்தத் தகவலை தொடர்ந்து பரப்புகின்றன. 'கொரோனா வைரஸை சீனா ஆய்வுக்கூடத்தில் உருவாக்கிப் பரப்பியது' என்று அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக குரங்கு அம்மையைப் பயன்படுத்திக்கொள்கிறது சீனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு புது நோய் வந்ததுமே, அதைக் கண்டறிந்து உறுதி செய்யும் பரிசோதனைக் கருவிகள் விற்பனையே முதலில் சூடு பிடிக்கும். ஐரோப்பாவில் முதல் குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டதும், இதில் இருக்கும் பிசினஸ் வாய்ப்பை உணர்ந்துகொண்டது சுவிட்சர்லாந்து மருந்து நிறுவனமான ரோஷ். கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனையை சற்றே மாற்றி குரங்கு அம்மையை உறுதி செய்யும் மூன்று விதமான டெஸ்ட் கருவிகளை உருவாக்கிவிட்டது அந்த நிறுவனம். இன்னும் சில மாதங்களுக்கு உலகமே இந்த நிறுவனத்தை நம்பியிருக்கும்.

டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் என்ற மருந்து நிறுவனம்தான் உலகின் ஒரே குரங்கு அம்மை தடுப்பூசிக் கண்டுபிடிப்புக்கு உரிமையாளர். ஆண்டுக்கு மூன்று கோடி தடுப்பூசி தயாரிக்கும் வசதி கொண்ட அந்த நிறுவனம், Jynneos என்ற பெயர் கொண்ட அந்தத் தடுப்பூசியை வேகவேகமாகத் தயாரித்து வருகிறது. "எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசி தயாரித்துக் கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் மூலப்பொருள்கள் உள்ளன. இன்னமும் குரங்கு அம்மை பரவாத நாடுகள்கூட அதற்குள் எங்களிடம் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்துள்ளன" என்கிறார் பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ரால்ஃப் சோரன்ஸன். அமெரிக்கா முதல் நாடாக 14 லட்சம் தடுப்பூசிகளுக்கு இப்போதே ஒப்பந்தம் செய்துவிட்டது.

குரங்கு அம்மை கிட்டத்தட்ட பெரியம்மை போன்றது. பெரியம்மை நோயை இந்த உலகம் ஒழித்துவிட்டாலும், அதற்காகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இன்னமும் இருக்கிறது. அமெரிக்காவின் எமர்ஜென்ட் பயோசொல்யூஷன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் இந்த ACAM2000 தடுப்பூசியைக் குரங்கு அம்மைக்கும் போடலாம் என்பதால், இதுவும் வேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசிடம் ஏற்கெனவே இதில் 10 கோடி தடுப்பூசிகள் இருக்கின்றன. "ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் போடுவதற்கு எங்களிடம் தடுப்பூசி வந்துவிடும்" என்கிறது அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம்.

கொரோனா தடுப்பூசியில் உலக அளவில் அதிக லாபம் பார்த்த அமெரிக்க நிறுவனமான மாடெர்னா, குரங்கு அம்மைக்கும் சக்திவாய்ந்த தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வில் இறங்கிவிட்டது. டோனிக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம், TNX-801 என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, அதற்குள் காப்புரிமையும் வாங்கிவிட்டது.

கொரோனா காலத்தில் ரெம்டெசிவிர் மருந்து வைரஸ் பெருகுவதைத் தடுக்கிறது என்று தகவல் பரவி, அந்த மருந்தை வாங்க பெரும் போட்டி நடந்தது. கள்ளச்சந்தை, போலிகள் என்று எல்லாம் உருவாகின. இப்போது, 'குரங்கு அம்மை நோயை உருவாக்கும் வைரஸ், Tecovirimat என்ற ஆன்ட்டி வைரல் மருந்துக்குக் கட்டுப்படுகிறது' என்ற செய்தி பரவியதும் அந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் இதைக் குரங்கு அம்மை சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தயாரிப்பது அமெரிக்க நிறுவனமான சிகா டெக்னாலஜிஸ். ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இந்த மருந்தை வாங்கிக் குவிக்கின்றன.

Tecovirimat
Tecovirimat
ஆனால், சோகம் என்னவென்றால், குரங்கு அம்மை எங்கிருந்து பரவியதோ, அந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த மருந்துகளோ, தடுப்பூசிகளோ போய்ச் சேரவில்லை. உச்சிக்கிளையில் உட்கார்ந்துகொண்டு மரத்தை வெட்டும் முட்டாள்தனத்தையே வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு முறையும் செய்யும். குரங்கு அம்மையும் இதில் விதிவிலக்கு இல்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism