Published:Updated:

`சொர்க்கத்திலிருந்து வந்த பரிசு' -கொரோனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்கும் அமெரிக்கா!

Trump and Modi
Trump and Modi ( AP / Alex Brandon )

இம்மருந்தால் நோய் குணமடைந்தால், இம்மருந்து `சொர்க்கத்திலிருந்து வந்த பரிசாக அமையும்' என்றும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு, 8,000-த்துக்கும் மேல் இறந்துள்ளனர். கொரோனாவை எதிர்க்க உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பு ஊசியோ, மருந்தோ கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்ட ஆராய்ச்சி முடிவில் மலேரியாவை எதிர்த்து போராடும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளதால், இம் மருந்துக்கான தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது.

covid-19
covid-19

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு, தங்கள் நாட்டுக்குத் தேவையான ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் மருந்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் யூஎஸ் பெடரல் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்( USFederal drug Administration) இன் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த வாரம் முதல் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் உடன் மற்ற மருந்தையும் சேர்த்து நியூயார்க்கில் உள்ள 1,500 COVID 19 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வரும் வாரங்களில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் உயிரிழப்புகள் சமூகப் பரவலால் (human to human) ஏற்படும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், ட்ரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோக்வைன் மீது மிக்க நம்பிக்கை கொண்டுள்ளார். இம்மருந்தால் நோய் குணமடைந்தால், இம்மருந்து `சொர்க்கத்திலிருந்து வந்த பரிசாக அமையும்' என்றும் கூறியுள்ளார். நோயை எதிர்கொள்ள 29 மில்லியன் டோஸ் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் மருந்தை US பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளது. மேலும், சில மில்லியன் மருந்தை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

Modi - Trump
Modi - Trump

இந்தியாவில் உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டு வர்த்தகத் துறை மார்ச் 25 முதல் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் மருந்தின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் தேவைப்பட்டால் நோயாளியின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிற நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், நேற்று மோடியிடம் தங்கள் நாட்டுக்குத் தேவையான மருந்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் மேலும் கூறியதாவது, ``நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடினேன். இந்தியாவில் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றது. இந்தியா, நாங்கள் கேட்டுள்ள அளவு மருந்தை அளித்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

Modi - Trump
Modi - Trump
AP

மேலும் மலேரியா பாதிக்கும் நாடுகளில் மக்கள் இம் மருந்தை எடுத்துக்கொள்கின்றனர். அதனால் பலர் கொரோனா வைரஸால் தாக்கப்படுவது இல்லை என்றும் கூறியுள்ளார். ``மருத்துவர்கள் எனக்கு இம் மருந்தைப் பரிந்துரைத்தால் நான் எடுத்துக்கொள்ள தயாராக உள்ளேன்" என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இந்தியாவிலும் நாளுக்கு நாள். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவுக்கும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்வைன் மருந்தின் தேவை அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு