Published:Updated:

ஸ்பெஷல் மெடிக்கல் கிட்.. வைரஸ் இருந்தால் `நோ' அனுமதி!- இந்தியர்களை மீட்க சீனா பறக்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா
ஏர் இந்தியா ( Photo courtesy - José Luis Celada Euba )

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த வுஹான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளனர். அதேபோல் ஹூபே மாகாணத்தில் மொத்தமாக 600 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 200 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் 9000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய நால்வருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் ஒரு மாணவிக்கு வைரஸ் இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களுக்குத் தனி வார்டில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கிடையே, சீனாவில் வசிக்கும் பிற நாட்டைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரை உள்ளிட்ட ஹூபே மாகாணத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தகவல் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த வுஹான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளனர். அதேபோல் ஹூபே மாகாணத்தில் மொத்தமாக 600 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

`கொரோனா வைரஸ் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனை!'- சாதித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

அவர்களிடம் தொடர்ந்து பேசிவரும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், நாடு திரும்புவது குறித்து கேட்டு வருகிறார்கள். இதுதொடர்பாகப் பேசியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி ரவீஷ்குமார், ``சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகத் தங்களிடம் உறுதியான தகவல் இல்லை. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள 600 இந்தியர்களைத் தொடர்பு கொண்டு நாடு திரும்ப விரும்புகிறார்களா எனக் கேட்டு வருகிறோம்.

ஒவ்வொருவரின் விருப்பத்தை தனித்தனியாக அறிந்துகொள்கிறோம். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இரண்டு விமானங்களை இயக்க சீனாவிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான பூர்வாங்கப் பணிகளில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
AP

ஹூபேயில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக, இரண்டு 747- 400 போயிங் ரக விமானத்தை ஏர்- இந்தியா நிறுவனம் தயாராக வைத்துள்ளது. அநேகமாக இந்த விமானம் இன்று ஹூபேவுக்குச் செல்லும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு விமானத்தில் 423 பேர் பயணிக்க முடியும் என்ற நிலையில் தற்போது ஹூபேயில் 325 இந்தியர்கள் வரை நாடு திரும்புவதற்காகக் காத்துக்கொண்டுள்ளனர் என்று NDTV நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையிலிருந்து டெல்லி சென்று அங்கு மத்திய சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு இரண்டு விமானங்களும் வுஹான் செல்லும் எனக் கூறப்படுகிறது.

`2 மணிநேரம் மட்டுமே அனுமதி!'- கொரோனா வைரஸ் பயத்தில் சீனாவில் தவிக்கும் இந்திய மாணவர்கள்

600 பேர் வரை இந்தியர்கள் அங்கு இருந்தாலும் வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டாத பயணிகளுக்கு மட்டுமே ஏர் இந்தியா விமானத்தில் ஏற்றப்படுவார்கள். வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். ஏனெனில், விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தாலும் 400 பயணிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமென்பதால் அவர்களை அங்கேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அவசர கால வெளியேற்றும் பணிகளில் பலமுறை ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா ஒருமுறைகூட தோல்வியுற்றது கிடையாது என்பது அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தச் சிறப்புப் பணியில் ஈடுபடவுள்ள விமானிகள் குழு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கிருமிநாசினி ஸ்ப்ரேக்களுடன் பயணம் செய்ய இருக்கிறார்கள். அதேநேரம் வுஹான் சென்றடைந்ததும் இந்தக் குழுவைச் சேர்ந்த யாரும் விமானத்திலிருந்து இறங்க மாட்டார்கள். விமானம் புறப்பட்ட பிறகு பயணிகளுக்குள், பயணிகளுடன் விமானக் குழுவுக்கு குறைந்த தொடர்பு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு இருக்கையிலும் உணவுப் பொட்டலங்களும் தண்ணீரும் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் விமானக் குழுவினருடன் 2 மருத்துவர்கள், 2 பொறியாளர்கள், 4 சுமை தூக்கும் ஊழியர்கள் பயணம் செய்யவுள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தாலும், சீன அரசின் அனுமதிக்காகவும், சிறப்பு மருத்துவக் கருவிகள் கிடைத்த பின்பே இரண்டு விமானங்கள் வுஹான் செல்லும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தகவலின்படி ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 12.30க்கு வுஹானுக்கு புறப்படும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு கொள்ளை நோயல்ல... பீதியடைய வேண்டாம் - மருத்துவர் கருத்து
அடுத்த கட்டுரைக்கு