இன்று உலகத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கும் வார்த்தை, `ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் (Antimicrobial Resistance)'. அதாவது, Super Bugs-ன் தாக்கம். உலகம் முழுவதும், பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்றுகளுக்கு எந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தாலும் குணமாகாத தன்மை அதிகமாகி வருகிறது. இதைத்தான் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்' என்று அழைக்கிறது மருத்துவ உலகம்.
உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அந்தக் கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, அதன் அடுத்த தலைமுறைக் கிருமிகளுக்கும் மருந்தை எப்படி எதிர்த்துப் பிழைக்க வேண்டும் என்ற செயல்திறனைக் கடத்திவிடும். இதன் விளைவாக, ஆன்டிபயாடிக் ரெசின்டன்ஸ் மிகப்பெரும் பிரச்னையாக உருமாறி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாத அளவில், ‘சூப்பர்பக்’ (Superbug) எனும் அதிதீவிர, கட்டுக்கடங்காத பாக்டீரியாக்கள் உருவாகி வருகின்றன. இத்தகைய சூப்பர்பக் பாக்டீரியாவால் தொற்று அடைந்த ஒருவரை எந்த மருந்தாலும் காப்பாற்றிட இயலாது. சூப்பர்பக்ஸை நிவர்த்தி செய்ய பயனுள்ள மருந்துகள் இல்லாவிட்டால், வழக்கமான அறுவை சிகிச்சைகள்கூட மிகவும் ஆபத்தானதாகிவிடும்.
இந்நிலையில் ஆன்டிபயாடிக் ரெசின்டன்ஸ் சூப்பர்பக்கை எதிர்த்துப் போராடும் இரண்டு புதிய மருந்துகள் இங்கிலாந்தில் உள்ள NHS (The National Health Service)-ல் விரைவில் கிடைக்கும் என்று ஆராய்ச்சியளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிபாக்டாமுடன் (Avibactam) கூடிய செஃபிடெரோகால் (Cefiderocol) மற்றும் செஃப்டாசிடைம் (Ceftazidime) மருந்துகள் மனித உயிர்களைக் காப்பாற்றும் என மருந்துக் கண்காணிப்பு அமைப்பு NICE தெரிவித்துள்ளது.