கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து அரசு, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த பாரபட்சமான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தாவிடில், பரஸ்பர நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என இந்திய அரசு அறிவித்தது. இதற்குப் பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பயணிகளின் பிரச்னை தீரவில்லை. பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதற்குக் காரணம், இந்திய அரசு வழங்கும் தடுப்பூசி சான்றிதழ்தான் என இங்கிலாந்து அரசின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கிலாந்து வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் அஸ்ட்ராஸெனிகா கோவிஷீல்டு, அஸ்ட்ராஸெனிகா வாக்ஸெவ்ரியா மற்றும் மாடர்ன் டகேடா ஆகிய தடுப்பூசிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.
பிரிட்டிஷ் உயர் ஆணையம், சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது. இதன்மூலம், தடுப்பூசி மீது அல்ல; இந்தியர்களின் தடுப்பூசி சான்றிதழ் மீதுதான் இங்கிலாந்து அரசு சந்தேகப்படுவதாகத் தெரிகிறது. பிரிட்டிஷ் உயர் ஆணையம், `சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்' எனக் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்திய சுகாதாரத்துறை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். ஷர்மா, `தடுப்பூசி சான்றிதழில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்றிருக்கிறார். மேலும், ``இந்த மொத்த அமைப்பும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வையில் செயல்படுகிறது. சர்வதேச வான்வழி போக்குவரத்து நிறுவனங்களுடன் விவாதித்து வருகிறோம். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இங்கிலாந்து உயர் ஆணையரைச் சந்தித்த போது அவர் கோவின் செயலி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்'' எனக் கூறினார்.

சீரம் நிறுவனத்தின் அதார் பூனவல்லா, ``இங்கிலாந்து அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அஸ்ட்ராஸெனிக்காவுக்கு இணையான தடுப்பூசியாக கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பயணிகளின் பிரச்னை இன்னும் தீரவில்லை. பயணிகள் தனிமைப்படுத்தப்படும் பிரச்னை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்'' எனக் கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து செல்லும் பயணிகள், பயணத்துக்கு 14 நாள்களுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சான்றிதழ் பிரச்னை காரணமாக இந்தியப் பயணிகள் இங்கிலாந்து சென்ற பின்னரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.