வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப்... அவரின் மருத்துவ விவரங்கள் சொல்வது என்ன?

கொரோனா வைரஸுக்கு அவர் அமெரிக்க நாட்டின் அதிபர் என்றோ சர்வ வல்லமை பொருந்திய தலைவர் என்றோ தெரியாது. அதைப் பொறுத்தவரை அவர் 74 வயது முதியவர். கூடவே இதயநோயும் உடல்பருமனும் கொண்டவர்.
கொரோனாவுக்கு இரண்டு லட்சம் உயிர்களைப் பலி கொடுத்த, உலகின் மாபெரும் வல்லரசு தேசம் என்று தன்னை மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டு பிரசித்திபெற்ற வால்ட்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அவருக்கும் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அவரின் மனைவி மெலனியா, வெள்ளை மாளிகை அதிகாரிகள், பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஐந்து நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டக்கூடிய பிரத்யேக ஆன்டிபாடிகள் வழங்கப்பட்டன.
மேலும் வைரஸ் பல்கிப்பெருகுவதைக் கட்டுப்படுத்தும் திறன் படைத்த ரெம்டெஸிவிர் எனும் மருந்து வழங்கப்பட்டிருக்கிறது. கூடவே அதிபரின் வயது மற்றும் உடல்பருமன், இதயநோய் போன்றவை இருப்பதால் டெக்ஸாமெத்தாஸோன் எனும் ஸ்டீராய்டு மருந்தும் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. மேற்சொன்னவற்றில் ஆன்டிபாடிகள் மற்றும் ஸ்டீராய்டு ஆகியவை தீவிர நோய்க்குறி கண்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளாகும். இருப்பினும், பாதுகாப்பு கருதி அவற்றையெல்லாம் முன்கூட்டியே வழங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது நெஞ்சுப்பகுதி சி.டி ஸ்கேன் குறித்தும் அதில் எவ்வளவு தீவிரமான தொற்று இருக்கிறது என்பது குறித்தும் செய்திகள் வெளியிடவில்லை. அந்த நாட்டு சட்டப்படி நோயாளியின் நோய் விபரங்களை அவரது அனுமதியின்றி மருத்துவர் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று இதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்கள்.
இருப்பினும் கடந்த வார இறுதியில் இரண்டு முறை ட்ரம்ப்பின் ரத்த ஆக்ஸிஜன் அளவுகள் குறைந்து சிகிச்சை அளித்த பிறகு, ஏற்றம் கண்டன என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.
நுரையீரலில் தொற்று இல்லாமல் ரத்த ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்பதே இதன் அர்த்தம். எனவே, ட்ரம்ப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிகிச்சையை வைத்து அவருக்கு கொரோனா நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஓரளவு கணிக்க முடியும்.
இத்தகைய சூழலில்தான் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து விடைபெற்று ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை வந்தடைந்தார் ட்ரம்ப். அந்நாட்டு சட்டப்படி கோவிட் தொற்று அடைந்த ஒருவர் குறைந்தபட்சம் 10 நாள்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். இருப்பினும் அதிபர் என்பதால் வெள்ளை மாளிகைக்குச் சென்று அங்கு தனிமைப்படுத்திக்கொள்ள அவருக்கு சலுகைகள் கொடுத்திருக்கலாம்.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வெள்ளை மாளிகையிலும் 24 மணிநேரமும் ட்ரம்ப் கண்கொத்திப்பாம்பாய் கவனிக்கப்படுவார் என்று உறுதி அளித்துள்ளனர்.
மேலும், அடுத்த திங்கள்கிழமை வரை கொரோனா தொற்று எத்தகைய நிலையை வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதால் அதீத ஜாக்கிரதையுடனே அவரை கண்காணிக்கிறோம் என்கிறார்கள். மருத்துவர்களின் இந்தக் கவலையைச் சிறிதும் பொருட்படுத்தாமல், ``கொரோனா நோய் நம்மை ஒன்றும் செய்யாது. அனைவரும் வெளியே வந்து உழையுங்கள். அஞ்சாதீர்கள். நான் நன்றாக இருக்கிறேன்.
எனக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று நம்புகிறேன். ஒரு தலைவனாக நான் செய்ய வேண்டிய முன்னுதாரண செயலைச் செய்கிறேன். இதற்குண்டான பின்விளைவுகள் வந்தால் அதையும் ஏற்பேன்." என அவர் வெள்ளை மாளிகையில் சூளுரைத்துள்ளார். முகக்கவசத்தையும் கழற்றி வீசியிருக்கிறார்.

அடுத்த மாதம் நிகழ உள்ள அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளிலும் அவர் ஈடுபட இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் கொரோனா வைரஸுக்கு அவர் அமெரிக்க நாட்டின் அதிபர் என்றோ சர்வ வல்லமை பொருந்திய தலைவர் என்றோ தெரியாது. அதைப் பொறுத்தவரை அவர் 74 வயது முதியவர். கூடவே இதயநோயும் உடல்பருமனும் கொண்டவர்.
எனவே, கட்டாயம் அவர் மருத்துவர்களின் அறிவுரையை மதித்து மருத்துவமனையில் மீண்டும் அனுமதி பெற்று முறையான சிகிச்சையையும் தனிமைப்படுத்துதலையும் முடித்து கொரோனாவில் இருந்து மீள்வதே அவருக்கு மிகச் சிறந்ததாக இருக்கும் என்பது நமது எண்ணம்.