மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்தகங்களில் நேரடியாக வாங்கக்கூடிய மருந்துகளுக்கு `ஓவர் தி கவுன்ட்டர்' (Over The Counter) மருந்துகள் என்று பெயர். கருத்தடை மாத்திரைகள் சில நாடுகளில் ஓவர் தி கவுன்ட்டர் மருந்துகளாக வழங்கப் படுவதில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் அதை ஓவர் தி கவுன்டர் மருந்தாக வழங்க அனுமதிக்க, பிரெஞ்சு மருந்து நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளது.

உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ பரிந்துரை இன்றி, மருந்து சீட்டு இன்றி கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க அனுமதி உள்ளது. ஆனால், அமெரிக்காவில் இதுநாள்வரை மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையிலேயே இம்மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே, அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் மருத்துவ பரிந்துரையின்றி அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரெஞ்சு மருந்தக நிறுவனமான ஹெச்.ஆர்.ஏ, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அமெரிக்க மக்கள் மருந்துசீட்டு இன்றி கருத்தடை மாத்திரைகளை பெற முடியும்.

1973-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் உபயோகப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கருத்தடை மாத்திரை, ஓபில் (Opill). ஆனால், இந்த மாத்திரை மருந்துசீட்டு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். இந்த மாத்திரைகளை ஓவர் தி கவுன்ட்டர் மருந்துகளாக வழங்குவதற்குப் பல மருத்துவக் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
ஓபில் மாத்திரைகளை ஓவர் தி கவுன்ட்டர் மருந்துகளாக வழங்குவது குறித்த முடிவை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 10 மாதங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.