Published:Updated:

`3 வாரங்கள் வீட்டைவிட்டு வெளியேறவே இல்லை!’ - #Corona பாசிடிவ் ரிசல்ட்டால் அதிர்ந்த அமெரிக்கப் பெண்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ( WCNC )

மூன்று வாரங்களாகத் தனது வீட்டை விட்டு வெளியே வராத அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள சார்லொட்டே நகரைச் சேர்ந்தவர், ரேச்சர் ப்ரமெர்ட். மருத்துவர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் எச்சரிக்கையால், கடந்த 3 வாரங்களாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஏற்கெனவே நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்னையால் தவித்து வரும் அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி 3 வாரங்களாக வீட்டைவிட்டே வெளியே வரவில்லை என்கிறார்கள். மூன்று வாரங்களுக்கு முன் மருந்தகம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்தது மட்டுமே என்று அவர் குறிப்பிடுகிறார்.

கொரோனா
கொரோனா

வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும் அவரது கணவரும், தற்போது தனியாக மற்றோர் அறையில் வசித்து வருகிறாராம். அவரது கணவர், மருந்தகத்தில் இருந்த பார்மசிஸ்ட் தவிர, அவரது வீட்டுக்கு மளிகைப் பொருள்களை டோர் டெலிவரி செய்யும் பெண் ஒருவர் என 3 பேரை மட்டுமே இந்த 3 வாரங்களில் சந்தித்ததாகச் சொல்கிறார் அந்தப் பெண். அதேநேரம், டோர் டெலிவரி செய்த அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது பின்னர் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணை ஒருமுறைகூட தொட்டதில்லை என்று சொல்லும் ரேச்சல், ஆனால் அவர் கொண்டுவரும் பொருள்களைக் கையில் கிளவுஸ் எதுவும் அணியாமல் வீட்டுக்குள் எடுத்துவைத்ததாகச் சொல்கிறார்.

கொரோனா வார்டில் 80 வயதுப் பாட்டி டைரியில் எழுதியது என்ன? - கொரோனா பாசிட்டிவ் கதைகள்

வாரத்தில் 3 நாள்கள் தனக்கான கடிதங்கள் வரும் என்றும் ஒவ்வொரு முறையும் அந்தக் கடிதங்களை எடுக்கச் செல்லும்போதும் கைகளில் கிளவுஸ் அணிந்து சென்றதாகவும் கூறுகிறார். திடீரென அவருக்கு காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து, கொரோனாவுக்கான பரிசோதனையைச் செய்தபோது, தொற்று உறுதி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்க வெள்ளை மாளிகை
AP

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், ``மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் அறிவுரைப்படி, நாம் சரியான விஷயத்தைத்தான் செய்கிறோம் என்று இந்த 3 வாரங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொற்று உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை இது. இதற்கு முன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இது அப்படியில்லை. இது, முழுக்க முழுக்க வேறொரு பெரிய பிரச்னை’’ என்று வேதனை தெரிவிக்கிறார் ரேச்சல். அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள். ஆனால், அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

வெறிச்சோடிய வாஷிங்டன் சாலை
வெறிச்சோடிய வாஷிங்டன் சாலை
Ted S. Warren\AP

உலக அளவில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு, அதைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கின்றன அரசுகள். ஆனால், மக்கள் ஊரடங்கை சரியாகக் கடைபிடிப்பதில்லை என்பதே வேதனையான உண்மை. 3 வாரங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த அமெரிக்கப் பெண்ணின் சோகம், கொரோனா தொற்று மிக எளிதாகப் பரவும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம். அதேபோல், எப்படி, யார் மூலம் இந்தத் தொற்று பரவும் என்பதைக் கணிப்பதும் கண்டுபிடிப்பதும் சவாலான விஷயமே.

அடுத்த கட்டுரைக்கு