Published:Updated:

`கொரோனா ஒரு வதந்தி; நோயாளியுடன் பார்ட்டி!' - அமெரிக்க இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்


கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( மாதிரிப்படம் )

``கொரோனா வைரஸ் யாரிடமும் பாகுபாடு காட்டாது. நம்மில் யாராலும் இந்த வைரஸை எதிர்த்து வெல்ல முடியாது. இந்த வைரஸ் மிகவும் தீவிரமானது. எளிதில் பரவக்கூடியது.”

உலகளவில் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. அங்குள்ள பல மாகாணங்களிலும் வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மிகவும் மோசமான சூழல் அந்நாட்டில் நிலவுவதால் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து அரசுக்கும் மக்களுக்கும் வைரஸ் தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால், மக்களும் சரி, அரசும் சரி அதை பொருள்படுத்தாமல் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

கொரோனா
கொரோனா

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாக் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய அலட்சிய உணர்வு உயிருக்கு எவ்வளவு ஆபத்தாக முடியும் என்பதற்கும் வயதானவர்களை மட்டுமே அதிகம் பாதிப்படையச் செய்வதாகக் கருதப்படும் இந்த வைரஸ், இளைஞரது வாழ்வில் எவ்வளவு கொடூரமாக இருந்துள்ளது என்பதற்கும் அந்த இளைஞரது வாழ்வில் நடந்த சம்பவங்களையே உதாரணமாகக் கூறலாம். இந்த இளைஞர் சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிப்படைந்து சான் ஆன்டனியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

கொரோனா:`தனி அறை; வீடியோ கால்; ரகசியக் குழு!’ - பிரேசில் அதிபரின் முதல் வாரம்

இளைஞர் பாதிப்படைந்தது தொடர்பாக அம்மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜேன் ஆப்பிள்பை (Jane Appleby) பேசுகையில், ``கொரோனா வைரஸை இந்த இளைஞர் வதந்தி என நம்பியுள்ளார். இதனால், அதன் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்துள்ளார். எனவே, கொரோனா வைரஸால் பாதிப்படைந்த ஒருவருடன் `கோவிட் 19 பார்ட்டி’ ஒன்றை நடத்தியுள்ளார். அதன் வழியாக இந்த வைரஸ் உண்மையானதா என்றும் இதனால் யாரேனும் பாதுப்படைகிறார்களா என்பதைக் கண்டறியவும் முயன்றுள்ளார். இதில் அந்த இளைஞருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்தார்” என்றார்.

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இளைஞர் செவிலியர்களிடம் இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் பேசும்போது, நோயாளி இறப்பதற்கு முன்பு அங்கிருந்த செவிலியரைப் பார்த்து `நான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறேன். இந்த வைரஸை ஒரு வதந்தி என நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை’ என்று கூறியதாகத் தெரிவித்தார். அப்பகுதியில் வைரஸ் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர் ஜேன் இந்த சம்பவத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். மக்கள் அலட்சியமாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா
கொரோனா

மருத்துவர் ஜேன் பேசுகையில், ``கொரோனா வைரஸ் யாரிடமும் பாகுபாடு காட்டாது. நம்மில் யாராலும் இந்த வைரஸை எதிர்த்து வெல்ல முடியாது. நான் எச்சரிக்கை விடுக்கும் நிபுணராக மட்டும் இருக்கவில்லை. இந்த வைரஸ் மிகவும் தீவிரமானது. எளிதில் பரவக்கூடியது. இதனை சமூகம் உணரும் வகையில் நிஜமாகவே நடந்த சில சம்பவங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். கடந்த வாரங்களை ஒப்பிடுகளையில் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த பல வாரங்களுக்கு முன்பு ஐந்து சதவிகிதமாக மட்டுமே பாதிப்பு இருந்தது. இந்த இளைஞரின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அவரின் குடும்பத்தினர் உணரும் இழப்பை என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா:`முதன்முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்!’ - அரசியலும் விமர்சனங்களும்...
அடுத்த கட்டுரைக்கு