Published:Updated:

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 2 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்கள்

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 2 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

Published:Updated:
கொள்ளை நோய்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்கள்
அது கி.பி 165 முதல் 180க்கு இடைப்பட்ட காலம். உலகத்தில் தோன்றியது ஒரு பெரும் கொள்ளைநோய்.

ரோமாபுரியை ஆண்டு வந்த அந்தோனைன் பேரரசர்களின் காலத்தில் ரோமாபுரியில் உருவெடுத்ததால், அந்நோய்க்கு ‘அந்தோனைன் ப்ளேக்’ என்று பெயரிடப்பட்டது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, சருமத்தில் கொப்புளம் வந்து ரோமாபுரி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கை வாரிச்சுருட்டிச்சென்ற அந்நோயைக் கடவுளின் பெரும் சாபமாக எண்ணினார்கள் மக்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நம்பிக்கையூட்டும் மினி தொடர் 2 - மீண்டும் மீள்வோம்!

கப்பல்கள் வழி நாடுகளுக்கு!

இத்தகைய பேரிடியை வாங்கிய ரோமாபுரி, அதற்கடுத்த பெரும் கொள்ளை நோய்த் தாக்குதலை மூன்று நூற்றாண்டுகள் கழிந்து மீண்டும் சந்தித்தது. கி.பி 541 முதல் 542 வரை நீடித்த அந்தப் பெரும் கொள்ளைநோய்க்கு ‘ஜஸ்டீனியன் ப்ளேக்’ என்று பெயர் வைத்தது வரலாறு. பைசான்தைன் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டான்டினோபில் நகரத்தில் உருவெடுத்த இந்தக் கொள்ளை நோய், அங்கிருந்து மெடிட்டிரேனியன் கடலின் கரைகளில் உள்ள துறைமுகங்கள் வழி ஒவ்வொரு நாடாக நுழைந்தது. எலிகள் சூழ்ந்த வாணிபக்கப்பல்கள்தான் இந்த நோய் பரவியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. வாணிபக் கப்பல்களை 40 நாள்கள் துறைமுகத்தில் தனிமைப்படுத்தும் வழக்கத்தை(Quarantine) பண்டைய ரோமாபுரி(இன்றைய இத்தாலி) வரலாற்றில் முதன்முறையாக வழக்கத்துக்குக் கொண்டுவந்தது.

மனித வரலாற்றில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட முதல் கொள்ளைநோய் ஆனது இந்த ‘ஜஸ்டீனியன் ப்ளேக்.’ இந்நோய் அதன் உச்சத்தில் இருந்தபோது நாளொன்றுக்கு கான்ஸ்டான்டி னோபில் நகரத்தில் மட்டும் 5,000 பேர் மரணமடைந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6-ம் நூற்றாண்டில் தோன்றிய இந்தக் கொள்ளைநோய் 8-ம் நூற்றாண்டுவரை மீண்டும் மீண்டும் வந்து மக்களைக் கொன்று சென்றது. இந்த அளவுக்குக் கொடூரமாக இக்கொள்ளை நோய் பரவியதற்கு மூன்று காரணங்கள் கூறப்பட்டன. அதிக ஜனநெருக்கடி கொண்ட நகரங்கள், ஊட்டச்சத்துக் குறைவான உணவுமுறை, பொதுச் சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் பேணாமை.

14-ம் நூற்றாண்டின் கறுப்பு மரணங்கள்!

யுரேசியா பகுதியைச் சேர்ந்த கிர்கிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் சீனாவில் இந்நோய் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 2.5 கோடி முதல் 10 கோடி மக்கள் இறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்களால் முடிவு செய்யப்பட்ட கொள்ளைநோய் அது. ஐரோப்பாவில் மட்டும் 5 கோடி பதிவு செய்யப்பட்ட மரணங்கள். இந்த மக்கள் தொகையை ஐரோப்பா மீட்டெடுக்க அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இந்தியாவில், கால் பங்கு முதல் பாதிவரை மக்கள் தொகை அழிந்ததாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

கொள்ளை நோய்கள்
கொள்ளை நோய்கள்

இந்நோய் கப்பல்களில் உள்ள தானியங்களைத் தின்று வாழும் எலிகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் பரவியதாக அறியப்பட்டது. எனவே அதை ‘Pestilence’ என்று கூறினர். ‘Pest’ என்றால் பூச்சி. பூச்சிகளால் தோன்றிய அழிவாக இதைக் கருதினர். நோய் பாதிக்கப்பட்டவர்களின் கை விரல்கள் யாவும் ரத்த ஓட்டமின்றி அழுகிக் கறுப்பாகிவிடும். இதை Acral Necrosis என்போம். இத்தகைய நிலையை எய்தியவர்கள் அனைவரும் மரணமடைந்ததால் இந்தக் கொள்ளை நோய் மரணங் கள், கறுப்பு மரணங்கள் என்று அழைக்கப்பட்டன. இடுகாடுகளில் பிணங்கள் மலைபோல் குவிந்தன என்கிறார்கள் வரலாற்றாசி ரியர்கள்.

உலகின் முதல் மாஸ்க்!

ப்ளேக் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கிருமித் தொற்றால் தங்களுக்கு நோய் பரவாமல் இருக்க, பறவையின் கூர்மையான அலகை ஒத்த முகக்கவசங்களை அணிந்து சிகிச்சை அளித்தனர். அந்த அலகு போன்ற கவசத்தில் வாசனை தரும் பூக்கள் மற்றும் மூலிகைகள் சேர்க்கப்பட்டன. இதுவே மருத்துவர்கள் இப்போது உபயோகிக்கும் முகக்கவசங்களுக்கு முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நோய்கள்
கொள்ளை நோய்கள்

இந்நோய் பரவிய காலகட்டத்தில், யூதர்கள்தான் கிணற்று நீரில் விஷத்தைக் கலந்து இதைப் பரப்புகிறார்கள் என்ற சந்தேகத்தால், யூதர்கள் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர். மேலும், பிச்சைக்காரர்கள், பயணிகள், புனித யாத்திரை மேற்கொள்ள வந்தவர்கள், தொழுநோயாளர்கள் எனப் பலரும், நோய் பரப்புகிறார்கள் என்ற தவறான குற்றச்சாட்டின் விளைவாகக் கொல்லப்பட்டனர்.

காரணமும் மருந்தும் கண்டறியப்பட... 20 நூற்றாண்டுகள்!

19-ம் நூற்றாண்டின் இறுதியில், கறுப்பு மரணங்களுக்குக் காரணமான கிருமி யெர்சீனியா பெஸ்டிஸ்(Yersinia pestis) என்றும் இந்தக் கிருமிகளால் தாக்குண்ட பூச்சிகளான சினாப்சியெல்லா சியாபிஸ்(Xenopsylla cheopis)தான் இந்த நோயைப் பரப்புபவை என்றும் கண்டறியப்பட்டன. இவற்றைக் கண்டறிய நமக்கு 20 நூற்றாண்டுகள் ஆயின. நோய்க்கான காரணம் கண்டறியப்பட்ட பிறகு, ப்ளேக் மிகப்பெரும் கொள்ளை நோயாக உருவெடுக்கவில்லை. சமீபத்தில் பெரும் உயிர்ப்பலி வாங்கிய ப்ளேக் கொள்ளை நோய், 1855 - 1859 காலகட்டத்தில் தாக்கியது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொள்ளைநோய், இந்தியாவில் சுமார் ஒரு கோடி மக்களைக் கொன்றழித்தது.

20-ம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்ட மருத்துவத்துறையின் பயனால் ப்ளேக் நோய்க்காரணியான யெர்சீனியா பெஸ்டிஸைக் கொல்லக்கூடிய ஆன்டிபயாடிக்குகள் கண்டறியப்பட்டன. மேலும் 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியின் விளைவாகப் பூச்சிக்கொல்லிகள் உபயோகப்படுத்தப்பட, பயிர்களை, தானியங்களை நாடி வந்த சினாப்சி யெல்லா சியாபிஸ் பூச்சிகளும் கொல்லப்பட்டன.

ப்ளேக் பிரத்யேகத் தடுப்பூசி கண்டறியப்பட்டது. 1895-ம் ஆண்டு அலெக்சாண்டே யெர்சின் எனும் மருத்துவர் இந்தத் தடுப்பூசியைக் கண்டறிந்தார்; பல உயிர்கள் காக்கப்பட்டன. இப்போது ப்ளேக் நோய் மிகவும் அரிதான நோயாகிவிட்டதால், இந்தத் தடுப்பூசியின் தேவையே இல்லாத அளவுக்கு மனித இனம் அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெற்றிருக்கிறது.

மருத்துவ வளர்ச்சி குறைவாக இருந்த கடந்த காலங்களிலேயே ப்ளேக் போன்றதொரு கொள்ளைநோயைத் தடுத்துக் காட்டியிருக் கிறார்கள் நம் அறிவியலாளர்கள். இன்று, கோவிட்-19 கண்டறியப்பட்ட சில மாதங்களிலேயே, அந்த வைரஸின் தொடக்கப்புள்ளி, ஜீன் அமைப்பு, தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் என்று மிக மிக விரைவாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன உலகில் எந்த நோய்த்தொற்று சவாலையும், மனித அறிவையும் ஆற்றலையும்கொண்டு எதிர்நோக்க முடியும். எத்தனை கொள்ளை நோய்கள் சூழ்ந்தாலும் வென்று வாகை சூடும் திறன் நமக்குண்டு. மனித இனத்தின் நவீன எதிரியாகக் கணிக்கப்படும் ஃப்ளூ வைரஸின் தொடர் படையெடுப்புகளையும்கூட அப்படித்தான் நாம் வென்றோம். அது பற்றி அடுத்த இதழில்!

- நம்பிக்கை தொடரும்

ப்ளேக்
ப்ளேக்

ப்ளேக் திரும்புமா?

ப்ளேக் நோயை உருவாக்கும் யெர்சீனியா பெஸ்டிஸ் கிருமிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆன்டிபயாடிக்குகளுக்கு அந்தக் கிருமி கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புத் திறன்(Antibiotic resistance) பெற்றுவருவதாகக் கூறப்படுவதும், கடைசியாக 2017 அக்டோபர் மாதத்தில்கூட ஆப்பிரிக்கக் கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு 170 பேர் மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. எந்தச் சிகிச்சையும் இல்லாத முந்தைய காலத்தில், தாக்கிய 100 பேரில் 30 - 90 பேரைக் கொன்ற ப்ளேக் நோய் இப்போது அரிதான நோயாகி, தாக்கிய 100 பேரில் 10 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்குத் திறன் குறைந்திருக்கிறது. இருப்பினும், 6 முதல் 8-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் கொள்ளை நோய், பிறகு மீண்டும் 14-ம் நூற்றாண்டில் கறுப்பு மரணங்களை ஏற்படுத்தியதுபோல, உலகம் எப்போது வேண்டுமானாலும் இன்னொரு ப்ளேக் கொள்ளை நோயை எதிர்நோக்க நேரலாம் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.