Published:Updated:

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 3 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 3 - மீண்டும் மீள்வோம்!

கொள்ளை நோய்களை வென்ற வரலாறு

Published:Updated:
கொள்ளை நோய்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளை நோய்
அது 1918-ம் ஆண்டின் ஜனவரி மாதம். முதல் உலகப்போரால் தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை ஒவ்வொரு நாடும் கணக்கிட்டுக்கொண்டிருந்த நேரம்.

உலகை உலுக்கிப்போட்ட அந்தப் புதிய வைரஸ் உருவெடுத்தது அப்போதுதான். அது முதன்முதலில் எங்கே உருவெடுத்தது என்று இன்றுவரை அறியமுடியவில்லை. காரணம்... முதல் உலகப்போரி ன்போது நாடுகளுக்கு இடையே செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. எனவே போரில் பங்குபெற்ற நாடுகளில் எங்கு, எப்போது முதலில் அந்த வைரஸ் தோன்றியது என்பதை அறியமுடியவில்லை. இருப்பினும் போரில் பங்குபெறாத ஐரோப்பிய கண்டத்தின் ஸ்பெயின் நாடு, தன் மக்களிடையே புதிய கொள்ளைநோய் ஒன்று பரவி வருவதையும் அதனால் மக்கள் கொத்துக்கொத்தாக இறப்பதையும் உலகத்துக்குத் தெரிவித்தது. இவ்வாறு ஸ்பெயின் முதலில் அறிவித்தமையால் அந்தக் கொள்ளைநோய்க்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று பெயர் வந்தது.

நம்பிக்கையூட்டும் மினி தொடர் 3 - மீண்டும் மீள்வோம்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு!

அதுவரை குளிர்காலங்களில் சாதாரணமாகச் சளி, இருமல், காய்ச்சல் என்று வந்து சென்றுவிடும் நோய்த்தொற்று, அந்த முறை மிகவும் கொடூரமான உயிர்க்கொல்லியாக மாறியிருந்தது. வைரஸின் பெயர், H1N1 இன்ஃப்ளூயென்ஸா ஏ. இந்நோய் அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைத் தாக்கி சுமார் ஐந்து கோடி மக்களைக் கொன்றொழித்ததாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.

ஃப்ளூ வைரஸ்
ஃப்ளூ வைரஸ்

ஸ்பானிஷ் ஃப்ளூ கொள்ளைநோயின் குறிப்பிடத்தக்க விஷயம், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான மக்களை இது கொன்றது. இவர்களுடன் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வயதினரையும் அந்தக் கொள்ளைநோய் விட்டுவைக்கவில்லை. 1918 - 1919 காலகட்டத்தில் இந்த வைரஸ் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் கபளீகரம் செய்தது என்றுதான் கூற வேண்டும். காரணம் அப்போது இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதனால் வரும் நிமோனியாவுக்கான ஆன்டிபயாடிக்குகள் கண்டறியப்படவில்லை.

இந்தியாவில் இரண்டு கோடி மக்கள்!

இந்தியாவில் 1918 ஜூன் மாதம் மும்பை மூலம் தனது படையெடுப்பை ஆரம்பித்தது ஃப்ளூ வைரஸ். எந்த முன்தயாரிப்பும் செய்திருக்காத நம் தேசத்தைச் சூறையாடி சுமார் இரண்டு கோடி மக்களைக் கொன்றது அந்தப் பெரும் கொள்ளைநோய். அந்த வைரஸ் உலகின் 50% மக்கள்தொகையைத் தாக்கிய பின், 1920-ம் வருடம் டிசம்பர் மாதம் தனது உயிர்க்கொல்லிப் பசி அடங்கி, தானாக உலகை விட்டு வெளியேறியது.

ஃப்ளூ வைரஸ்
ஃப்ளூ வைரஸ்

ஆராய்ச்சிகளும் தடுப்பூசியும்!

முழுவீச்சில் ஃப்ளூ வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள். 1933-ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலாக இன்ஃப்ளூயென்ஸா ஏ வைரஸை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி அறிந்தது மனித இனம். 1940-ல் ஜோனஸ் சாக் மற்றும் தாமஸ் ஃப்ரான்சிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து இன்ஃப்ளூயென்ஸா ஏ வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியைக் கண்டறிந்தனர். 1945 முதல் வெகுஜன புழக்கத்துக்குத் தடுப்பூசிகள் வந்தன.

‘இந்த ஃப்ளூ வைரஸ்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் தன்மை பெற்று, தங்களது உருவ அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன(Antigenic drift), அல்லது வேறோர் இனத்தில் இருக்கும் தன்னையொத்த வைரஸ்களுடன் இணைந்து புதிய வைரஸ்களை உருவாக்கிக்கொள்கின்றன(Antigenic shift)’ என்று கண்டறியப்பட்டது. மேற்சொன்ன உருமாறும் தன்மைகளைக் கொண்டிருப்பதால் கட்டாயம் சில தசாப்தங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது ஃப்ளூ வைரஸ்கள் நம்மீது படையெடுக்கும் என்று கணிக்கப்பட்டது. எனவே உலகம் முழுவதும் ஃப்ளூ வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியையும் கண்காணிப்பையும் முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

1948-ல் உலக சுகாதார நிறுவனம் ‘உலக இன்ஃப்ளூயென்ஸா மையம்’ என்ற ஓர் அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் ஃப்ளூ வைரஸின் வருடாந்தர தாக்கம் எப்படி இருக்கிறது, எந்த வகையில் வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்கிறது, அவற்றைக் கண்டறியும் பரிசோதனையை எப்படிச் செய்வது என்று தொடர்ந்து கண்காணித்து வந்தது.

ஜோஹான் ஹல்டின்... ரியல் ஹீரோ!

ஃப்ளூ வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஒரு மகத்தான மனிதரின் கதையைக் கூறாமல் விடமுடியாது. அவர்தான் Dr.ஜோஹான் ஹல்டின்(Johan Hultin). 1951-ம் வருடம் 25 வயதானது அந்த இளைஞருக்கு. நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர். ‘வருடா வருடம் ஃப்ளூ சீசன் வருகிறது. ஆனால் அவற்றால் உண்டாகும் மரண விகிதம் மிகக் குறைவு. இருப்பினும் 1918-ம் ஆண்டு ஏற்பட்ட அந்தப் பேரழிவுக்குக் காரணம் என்ன? அந்த வைரஸை நாம் மீண்டும் கண்டறிந்து 1918 ஃப்ளூ வைரஸின் தன்மைகளை அறிய முடிந்தால் அதுபோன்ற இன்னொரு வைரஸ் உருவாகும்போது தடுப்பூசி தயாரிக்க உதவுமே?’ என்ற அந்தத் தேடலில், ஹல்டின் எடுத்த முயற்சிகள் மிக முக்கியமானவை.

ஜோஹான் ஹல்டின்
ஜோஹான் ஹல்டின்

1951-ம் ஆண்டு, தனது ஆய்வுக்காக ஹல்டின் நேராகச் சென்றது, அலாஸ்கா பனிமலைப் பிரதேசத்துக்கு. அங்கு ப்ரீவிக் மிசன் என்ற கிராமத்தில் 1918 ஃப்ளூ கொள்ளைநோயால் ஒரு கிராமமே இறந்துபோயிருந்தது. அந்த கிராம மக்களை அந்தப் பனிமலைப்பிரதேசத்தி்ல் பனிக்குள்ளேயே புதைத்திருந்தனர். பனிக்குள் இருந்தமையால், அந்த உடல்களுள் பல அழுகிப்போகாமல் உறைபனியில் அப்படியே இருந்தன.

ஹல்டின் தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த உடல்களைத் தோண்டியெடுக்க ஆரம்பித்தார். முதலில் அவருக்குக் கிடைத்தது நீல நிற உடை அணிந்த ஒரு சிறுமியின் உடல். அவள் கேசம் முதல் அதில் அணிந்திருந்த சிவப்பு ரிப்பன்கள்வரை அப்படியே இருந்தன. அந்தச் சிறுமியின் நுரையீரலில் சிறு மாதிரியும், இன்னும் நான்கு உடல்களிலிருந்து நுரையீரல் மாதிரிகளையும் சேகரித்தார் ஹல்டின். அவற்றை ஐஸ்பெட்டியில் எடுத்துவந்து தனது ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் ஹல்டினால் அந்த 1918 ஃப்ளூ வைரஸை தனியே கண்டறிய முடியவில்லை. அதோடு அவர் அந்த ஆராய்ச்சியைக் கைவிட்டுவிட்டார். இதற்கிடையில், 20-ம் நூற்றாண்டு இரண்டுமுறை ஃப்ளூ வைரஸால் பாதிக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு அமெரிக்காவில் தோன்றிய ஃப்ளூ கொள்ளைநோயால் பத்து லட்சம் மக்கள் இறந்தனர். 1968-ம் ஆண்டு ஏற்பட்ட ஃப்ளூ கொள்ளைநோயால் பத்து லட்சம் மக்கள் இறந்தனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் இறந்தனர். இதன் விளைவாக ஆண்டுதோறும் கட்டாயம் ஃப்ளூ தடுப்பூசி போடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஃப்ளூ வைரஸ் ஆராய்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஃப்ளூ வைரஸின் அமைப்பு மற்றும் அதன் வீரியத்தைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்துவந்தன.

இந்நிலையில், 46 ஆண்டுகளுக்குப் பின்னர் 1997-ம் ஆண்டு மீண்டும் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. ஓர் ஆராய்ச்சியாளர் குழு, 1918-ம் ஆண்டு ஏற்பட்ட ஃப்ளூ வைரஸ் கொள்ளைநோய் குறித்தும் அந்த வைரஸின் மரபணு அமைப்பு குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதைப் படித்த, அப்போது தனது 70களில் இருந்த ஹல்டினுக்கு மீண்டும் தேடல் ஆரம்பித்தது. ‘நாம் ஏன் மீண்டும் ஒரு முறை முயலக்கூடாது’ என்று, மீண்டும் அதே அலாஸ்கா பனிமலைப்பிரதேச கிராமத்துக்குச் சென்றார். மீண்டும் தோண்டினார்.

ஐந்தாவது நாளில், இனுயிட் இனத்தைச் சேர்ந்த, 20 வயதில் மரணமடைந்த ஒரு பெண்ணின் உடல் கிடைத்தது. அவளுடைய நுரையீரலைப் பிரித்தெடுத்தார். ஃப்ளூ வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்யும் நம்பகமான ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்தார். ஆம்... அவர் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது நடந்தேவிட்டது. அந்தப் பெண்ணின் நுரையீரல் மாதிரியில் கொடூரமான கொள்ளைநோயை உருவாக்கிய அந்த 1918 ஃப்ளூ வைரஸுடைய மரபணு இருந்தது. பிறகு அந்த ஆராய்ச்சியின் பலனாக ஃப்ளூ வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று, அதற்கு எதிரான மருந்துகளான அமான்டடின்(Amantadine), ரிமான்டடின்(Rimantadine), ஒசல்டாமிவிர்(Oseltamivir), சனாமிவிர்(Zanamivir) போன்றவை கண்டறியப்பட்டன. கோவிட்-19க்கும் நிச்சயம் இதுபோன்றதொரு முடிவுரை விரைவில் எழுதப்படும்.

அசுத்தமான நீர் மூலம் பரவி பேதி மூலம் அதீத நீரிழப்பை ஏற்படுத்திக் கொன்ற, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தக் கொள்ளைநோய் பற்றி... அடுத்த இதழில்!

- நம்பிக்கை தொடரும்

பன்றிக் காய்ச்சல் கொள்ளைநோயாக உருவெடுக்காமல் தடுத்தோம்!

டந்த நூற்றாண்டில் கற்ற வலிமிகுந்த பாடங்களின் விளைவால், இந்த 21-ம் நூற்றாண்டில் நாம் சந்தித்த பன்றிக்காய்ச்சல்(Swine flu) எனும் H1N1 ஃப்ளூ கொள்ளைநோயைச் சிறப்பாக சமாளித்து மனித இழப்புகளைப் பெருமளவில் குறைத்தோம். ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்தப் புதிய வைரஸானது, பறவை, பன்றி மற்றும் மனிதர்களில் காணப்படும் மூன்று வகையான இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் கலப்பினம் என்று அறியப்பட்டது. இதை மூன்று இனக்கூடல்(Triple assortment) என்று கூறுகிறோம். அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உடனே கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் மக்களுக்குப் பெருமளவில் வழங்கப்பட்டது. இதனால் மரண விகிதம் 0.02% என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது.

பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல்

1918-ம் ஆண்டு இதே H1N1 கொள்ளைநோயாக உருவெடுத்தபோது ஐந்து கோடி மக்களை இழந்தது உலகம். ஆனால் 2009-ம் ஆண்டு நவீன மருத்துவத்தின் முன்னேற்றத்தால், உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி 18,036 என்ற அளவில் குறைந்தது உயிரிழப்பு எண்ணிக்கை. முறையான சுய பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளி பேணல், தடுப்பூசி, வைரஸ் கொல்லி மருந்துகள் போன்றவை கொண்டு, 2009-ல் பன்றிக்காய்ச் சலை பெரும் கொள்ளைநோயாக உருவெடுக்கவிடாமல் தடுத்திட முடிந்தது. கொரோனாவையும் தடுப்போம்.