Published:Updated:

`வைரஸ்களுக்கு எல்லைகள் கிடையாது!’ - சர்ச்சைக் கருத்தால் சர்வதேச கண்டனத்துக்குள்ளான ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

``வைரஸ்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. உங்களுடைய இனம், நிறம் மற்றும் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பணம் ஆகியவற்றைக் குறித்து வைரஸ்கள் கவலைப்படுவது இல்லை. எனவே, நாம் பேசும்போது கவனமாக மொழியைக் கையாள வேண்டும்"

சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இத்தாலி, இரான், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 176 நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், சீனாவில், கொரோனா வைரஸால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளன. எனினும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்திருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தகைய சூழல் உருவாக சீனாவின் வெளிப்படைத் தன்மை இல்லாமையே காரணம் என குற்றம் சாட்டினார். ``கொரோனா வைரஸானது சீனாவின் ஒரு பகுதியில் பரவத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அவர்களின் செயலுக்கு உலகம் தற்போது பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தப் போதிய நடவடிக்கைகள் எடுக்காதது உட்பட பல விமர்சனங்கள் அவர்மீது இருந்தபோதிலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேபோல ஏற்கெனவே, கொரோனா வைரஸை `சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

`10 நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பு!’ - இரானை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று

உலக சுகாதார நிறுவனமும் ட்ரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் பேசும்போது, ``வைரஸ்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. உங்களுடைய இனம், நிறம் மற்றும் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பணம் ஆகியவற்றைக் குறித்து வைரஸ்கள் கவலைப்படுவது இல்லை. எனவே, நாம் பேசும்போது கவனமாக மொழியைக் கையாள வேண்டும்" என்று ட்ரம்பின் கருத்து குறித்து கேட்டதற்குப் பதிலளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், நகரங்களின் எல்லைகள் மூடப்பட்ட நிலையை மேலும் 2 வாரம் நீட்டித்துள்ளார். வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளை மீறி, மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவர்களை அந்நாட்டு உள்துறை அமைச்சர், கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். அதேபோல், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்த மைக்கேல் பர்னியர் மற்றும் மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் ஆகியோர் உட்பட பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

உலக அளவில் 166-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் பள்ளிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. பல நாடுகளும் பணி நிறுத்தம், பயணத் தடை, நகரத்தடை மற்றும் எல்லைகளை மூடுதல் ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!
அடுத்த கட்டுரைக்கு