Published:Updated:

`எதையும் மறைக்கவில்லை; துல்லியமாகவே கணக்கிடுகிறோம்!’ - கொரோனா இறப்பு எண்ணிக்கை சர்ச்சையில் ரஷ்யா

ரஷ்யா
ரஷ்யா ( AP )

``இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது துல்லியமான முடிவை வழங்குகிறது. இதன் அடிப்படையில் இறப்புக்கான காரணம் வேறுபடலாம்.”

கொரோனா வைரஸானது பெரும்பாலான நாடுகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகாலத்தில் அதிகம் பாதிப்படைந்த நாடுகளான சீனா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தற்போது மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வைரஸ் தொற்று குறித்து அலட்சியமாக இருந்த பல நாடுகளும் இன்று அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 8,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கையும் 3,000-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாக மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா
ரஷ்யா
AP

ரஷ்யாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களில் லியுபோவ் கஷீவா என்பவரும் ஒருவர். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கனா கீமோதெரபி சிகிச்சையும் அவர் எடுத்து வந்துள்ளார். அவர் அதிக நாள்கள் உயிருடன் இருப்பார் என உறவினர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, கடந்த மே 3-ம் தேதி அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. அடுத்த சில நாள்களில் லியுபோவ் இறந்தார். அவரின் இறப்பு சான்றிதழில், புற்றுநோயால் அவர் இறந்தார் என்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரின் உறவினர்கள், ``கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் அவர் இறந்தார். இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என்றால் கீமோதெரபியின் மூலம் அவர் சில நாள்கள் அதிகமாக உயிர் வாழ்ந்திருப்பார்” எனக் கவலையுடன் கூறியுள்ளனர். மாஸ்கோவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாகப் பேசும்போது, ``கொரோனா வைரஸின் அனைத்து அறிகுறிகளை நாங்கள் நன்கு அறிவோம். துரதிர்ஷ்டவசமாக மக்கள் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இறப்புக்கான காரணங்கள் எங்களுக்குத் தெளிவாக உள்ளது” என ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

`ரஷ்யா - வடகொரியா எல்லை மாகாணத்தில் ஊரடங்கு!’ - சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

மாஸ்கோ, ரஷ்யாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அனைத்தும் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்த இறப்புகள் மாரடைப்பு மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் நிகழ்ந்துள்ளன என்றும் அதிகாரிகள் கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான இறப்பு எண்ணிக்கைகளை, ரஷ்யா மற்ற நாடுகளைவிடவும் மிகத் துல்லியமாக எண்ணுகிறது என மாஸ்கோவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலான நாடுகளைப்போல் இல்லாமல், பாதிக்கப்பட்ட நபரின் மரணம் வைரஸால் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய பிரேதப் பரிசோதனை செய்வதாகவும் கூறியுள்ளது. மேலும், இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ரஷ்யா
ரஷ்யா
AP

இதுதொடர்பாக மாஸ்கோ நிர்வாகச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது துல்லியமான முடிவை வழங்குகிறது. இதன் அடிப்படையில் இறப்புக்கான காரணம் வேறுபடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மாஸ்கோ மருத்துவமனையில் இதயப் பிரிவின் தலைவர் அலெக்ஸி எர்லிக், ``எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வைரஸால் யாரும் இறப்பதில்லை. வைரஸால் ஏற்படும் சிக்கல்களால்தான் மக்கள் இறக்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் இத்தகைய மரணங்கள் கணக்கிடப்படாது எனச் சிலர் நம்புகின்றனர். ஆனால், அவர்கள் கணக்கில் இதையும் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் இருந்து வைரஸ் தொற்றால் இறந்த பலரது உறவினர்களும் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழை வைத்து குழம்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அடங்குவர் என்பதும் கவனிக்கத்தக்கது. சில ரஷ்யர்கள் இதனால் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை டு ரஷ்யா! - மோடி, புதின் ஒப்பந்தத்தால் குறைந்த 3,000 நாட்டிக்கல் மைல்
அடுத்த கட்டுரைக்கு