Published:Updated:

கொரோனாவுக்காக ட்ரம்ப் எடுத்துக்கொண்ட `ஆன்டிபாடி காக்டெயில்...' எல்லோருக்கும் பயனளிக்குமா?

US President Donald Trump
US President Donald Trump ( AP Photo/Evan Vucci )

ட்ரம்ப்புக்கு செலுத்தப்பட்டிருப்பது Monoclonal antibody எனப்படும் ஆய்வகத்தில் உயிரி தொழில்நுட்ப முறையால் உருவாக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கோவிட்-19 நெகட்டிவ் என்ற முடிவு வந்துவிட்டது. ``அப்பாடா! இனி பரபரப்பைக் கிளப்பமாட்டார்" என்று நினைத்தால், புத்தம் புது தகவலோடு களமிறங்கியிருக்கிறார். அவருக்குத் தொற்று பாதித்திருந்தபோது ரீஜெனிரான் என்ற மருந்து நிறுவனத்தின் `டபுள் ஆன்டிபாடி காக்டெயில்', REGN-COV2 என்ற மருந்து அளிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக விரைவில் குணமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ``நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு இந்த மருந்து அளித்ததன் காரணமாகச் சீக்கிரமாகக் குணமடைந்துவிட்டேன். எனக்குக் கிடைத்த இந்தச் சிகிச்சை அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதனால் இந்த மருந்துக்கு `அவசர பயன்பாடு' என்ற விதியின் கீழ் அனுமதியளிக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, மருந்துகளுக்கு அனுமதி கிடைப்பதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்கூட ஆகும். என்னுடைய அழுத்தத்தின் காரணமாக சில வாரங்களில்... ஏன், அதற்கும் முன்பாகக்கூட அனுமதி கிடைக்கப்பெறும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கு இந்த மருந்து இலவசமாக வழங்கப்படும்" என்று பேசியுள்ளார்.

அதிபரின் இந்தக் கருத்துகளுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தொழிலதிபர் பில்கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், ``தற்போது பரிசோதனையில் இருக்கும் மருந்துகள் அனைத்தைக் காட்டிலும் இது மிகவும் நம்பிக்கையளிக்கும் மருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், பரிசோதனையில் இருக்கும் ஒரு மருந்தைக் குணப்படுத்தும் மருந்து என ட்ரம்ப் கூறுவது சரியல்ல. ஏனென்றால் இந்த மருந்து எல்லோருக்கும் வேலை செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.

ஆன்டிபாடி காக்டெயில் என்றால் என்ன, பில்கேட்ஸ் கூறியுள்ளது போல அது எல்லாருக்கும் பயனளிக்காதா என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.

US President Donald Trump removes his face mask to speak from the Blue Room Balcony of the White House to a crowd of supporters
US President Donald Trump removes his face mask to speak from the Blue Room Balcony of the White House to a crowd of supporters
AP Photo/Alex Brandon

``பொதுவாக கொரோனா வைரஸ் உடலைத் தாக்கியவுடன் அதற்கு எதிராக உடலில் ஆன்டிபாடி உருவாகும். ஆனால், பிளாஸ்மா சிகிச்சையில், இப்படி நோய் குணமானவர்களின் உடலிலிருந்து ரத்தத்தை எடுத்து அதிலிருக்கும் பிளாஸ்மாவை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்துவார்கள். ஒருவர் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு முன்பு பிளாஸ்மாவைச் செலுத்தும்போது, அது வைரஸை அழித்து அதன் தீவிரத்தையும் குறைக்கும்.

இப்போது, ட்ரம்ப்புக்கு செலுத்தப்பட்டிருப்பது Monoclonal antibody எனப்படும் ஆய்வகத்தில் உயிரி தொழில்நுட்ப முறையால் உருவாக்கப்பட்டது. ட்ரம்ப்புக்கு இரண்டு வகையான ஆன்டிபாடி சேர்த்து செலுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதை `காக்டெயில்' என்று அழைக்கின்றனர். கொரோனா வைரஸின் அமைப்பில் முள் போன்ற புரதம் (Spike Protein) காணப்படும். இதுதான் செல்களைத் துளைத்து உள்ளே செல்வதற்கு உதவுகிறது. அதைத் தாக்குவதற்காக ஓர் ஆன்டிபாடியும், கொரோனா வைரஸ் உடலுக்குள் பெருகாமல் இருப்பதற்கான மற்றோர் ஆன்டிபாடியும் சேர்த்துச் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆன்டிபாடிக்களும் புதிதாக உருவாக்கப்பட்டவை.

அஷ்வின் கருப்பன்
அஷ்வின் கருப்பன்

இந்த ஆன்டிபாடி, நோயைக் குணப்படுத்தும் என்பதைவிட வைரஸின் தீவிரத்தைக் குறைக்கும். இது நோய்த்தொற்றைத் தடுக்காது. நோய்த்தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாகாமல் தடுக்கும். இதுதான் அந்த மருந்தின் வேலை. வைரஸின் அளவைக் குறைப்பதால் உள்ளுறுப்புகள் சேதமடைவது குறையும். கோவிட்-19 சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் ரெம்டெஸ்விர் மருந்தின் வேலையும் கிட்டத்தட்ட இதுதான்.

தாக்கத்தைக் குறைப்பதற்காகத்தான் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது என்பதால் அனைவருக்கும் இந்த மருந்தைக் கொடுக்க முடியாது. அதனால்தான் தடுப்பு மருந்து உற்பத்தியில் மருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. இதுபோன்ற ஆன்டிபாடி மருந்துகளில் கவனம் செலுத்துவதில்லை.

US President Donald Trump speaks during a campaign rally at Orlando Sanford International Airport
US President Donald Trump speaks during a campaign rally at Orlando Sanford International Airport
AP Photo/Evan Vucci

இந்த மருந்தின் ஒரு டோஸ் என்பது 4 கிராம். ட்ரம்ப்புக்கு இரண்டு டோஸ் அதாவது 8 கிராம் அளவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு டோஸ்தான் கொடுக்க வேண்டும். மாத்திரையாகவும் நரம்பில் செலுத்தக்கூடிய மருந்தாகவும் இது இருக்கும். பரிசோதனையில் உள்ளதால் எந்த நோயாளிக்கு என்ன அளவு மருந்து கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும், கொடுக்கக் கூடாது என்பது வரையறுக்கப்படவில்லை.

இந்த மருந்தின் திறன், தன்மையை பரிசோதனை செய்ததற்கான தரவுகள், ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போதும் இது பரிசோதனை அளவில்தான் உள்ளது. அமெரிக்க அதிபருக்கே கொடுத்துவிட்டதால் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. ட்ரம்ப்புக்கு அளித்த சிகிச்சை வெற்றியடைந்தபடியால் அதைப் பொதுமக்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும் என அந்த மருந்து நிறுவனம் எஃப்.டி.ஏ-வுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் தங்களிடம் 50,000 மருந்துகள் (Doses) தயாராக இருப்பதாகவும், அனுமதி அளிக்கும்பட்சத்தில் கூடுதலாக உற்பத்தி செய்யவும் முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க மக்களுக்கு இந்த மருந்தை இலவசமாகக் கொடுப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தாலும் பிற நாடுகளுக்கு அப்படிக் கிடைக்கப் போவதில்லை. அமெரிக்காவில் இலவசமாகக் கொடுக்கப்படுவதால், அதனால் ஏற்படும் பளுவைக் குறைப்பதற்கு பிற நாடுகளுக்குக் கொடுக்கப்படும்போது விலை அதிகமாக்கப்படும்.

US President Donald Trump speaks at campaign rally at the Orlando Sanford International Airport
US President Donald Trump speaks at campaign rally at the Orlando Sanford International Airport
AP Photo/John Raoux
`எனக்கு கொரோனா வந்தது கடவுளின் ஆசீர்வாதம்!' - விளக்கும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் என்பதால் அவருக்கு எப்படி அந்த மருந்தைக் கொடுத்தார்கள் என்ற விவரத்தை வெளியிடவில்லை. அந்த மருந்துக்கு உடலில் என்ன விளைவு ஏற்பட்டது, எப்படி உடல் நிலை தேறியது என்பது போன்ற விவரங்களையும் ரகசியமாக வைத்திருக்கின்றனர். ரீஜெனிரான் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பின்புலத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்க அரசியலில் இருக்கும் பெரும்புள்ளிகளின் ஆதரவு உள்ளது. அதன் தாக்கமும் இந்த விவகாரத்தில் இருக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் அதிபருக்கே இந்த மருந்தைக் கொடுக்கிறார்கள் என்றால் விரிவான ஆய்வுசெய்து, நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்பதால்தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு மருந்து பல கோடி மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் பல கட்டங்களாக, பல்வேறு பகுதிகளில் பரிசோதனையில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். மருத்துவ உலகில் அப்போதுதான் ஒரு மருந்தை ஏற்றுக்கொள்வார்கள். தரவுகளை வெளியிட்டு அவற்றை எல்லோரும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் இந்த மருந்தைப் பயன்படுத்த முடியும்" என்கிறார்.

ஆரம்பத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு ஆதரவாக ட்ரம்ப் பேசியதும், ஆனால் இந்த மருந்து சிகிச்சையில் பெரும் பயனளிக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்ததும் நினைவிருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு