Published:Updated:

உடல் முழுக்க அதீத ரோம வளர்ச்சி; வைரலான புகைப்படம்; 4 மாதக் குழந்தைக்கு நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதிக்கப்பட்ட குழந்தை
பாதிக்கப்பட்ட குழந்தை ( Photo: TikTok/blshelby )

``யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அவன் என் மகன். என் உயிர். என் மகன் குறித்து எப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று பதில் சொல்லியிருக்கிறார் குழந்தையின் தாய் ஷெல்பி.

மிக அரியவகை மரபணுப் பிரச்சனை காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு மாதமேயான குழந்தை ஒன்று வினோதமான உடல் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

உயிரை அச்சுறுத்தும் மரபணுக் கோளாறுக்காக அக்குழந்தைக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மருந்துகள் ஏற்படுத்திய பக்க விளைவின் காரணமாக குழந்தையின் உடல் முழுவதும் அசாதாரணமான ரோம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேட்டோ ஹெர்னாண்டஸ் என்கிற அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதம் இருக்கையில் அதற்கு கன்ஜெனிடல் ஹைபர்இன்சுலினிசம் (CONGENITAL HYPERINSULINISM) என்கிற நோய் ஏற்பட்டது. இந்நோயால் பாதிக்கப்படுபவரின் உடலில் உள்ள கணையம் மிக அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்யும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Image by Christian Abella from Pixabay

இதன் காரணமாக உடலின் ரத்த சர்க்கரை அளவு மிகவும் கீழிறங்கி அபாயக் கட்டத்திற்குச் சென்றுவிடும். 50,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரத்தில் வசிக்கும் இக்குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தைக்கு வந்திருக்கும் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்காக மருத்துவ சிகிச்சையைக் கொடுத்திருக்கின்றனர். மருந்துகளைக் கொடுத்து வந்ததும் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் மருந்துகளின் பக்க விளைவாக மேற்சொன்னதுபோல குழந்தையின் அங்கம் முழுவதும் நீண்ட கருப்பு நிற ரோம வளர்ச்சி உண்டானதும் குழந்தையின் பெற்றோர் அதிர்ந்திருக்கின்றனர்.

``குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் கன்ஜெனிடல் ஹைபர்இன்சுலினிசம் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர குழந்தைக்கு `டையாஸ்ஆக்சைடு’ (Diazoxide) மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த மருந்துகள் ஏற்படுத்திய பக்க விளைவுகளே குழந்தையின் உடல் முழுக்க ரோம வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது" என குழந்தையின் தாய் ஷெல்பி துயரத்துடன் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இக்குழந்தையின் புகைப்படங்கள் `டிக்டாக்’ செயலியில் பகிரப்பட்டு, ஆன்லைனில் ட்ரோல்களுக்கு உள்ளானது.

பாதிக்கப்பட்ட குழந்தை
பாதிக்கப்பட்ட குழந்தை
Photo: TikTok/blshelby

குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் தன்மை புரியாது சிலர் குழந்தையின் ஹார்மோன்களின் அளவைப் பரிசோதிக்குமாறு ஆலோசனை வழங்கினர். இன்னும் சிலரோ குழந்தைக்கு `வாக்சிங்’ செய்யுங்கள் என்று கமென்ட்களை அள்ளித் தெளித்திருந்தனர்.

``யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அவன் என் மகன். என் உயிர். என் மகன் குறித்து எப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று பதில் சொல்லி, கேலி செய்தவர்களை எல்லாம் தன் அன்பெனும் சாட்டையால் அடித்துப் பதில் சொல்லியிருக்கிறார் குழந்தையின் தாய் ஷெல்பி.

மீண்டு வாடா குட்டிப் பையா!

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு