Published:Updated:

10,000 பேருக்கு 2.1 மருத்துவர்கள், ஆப்பிரிக்காவில் கொரோனாவின் நிலை என்ன? #DoubtofCommonMan

Corona Screening
Corona Screening

இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பற்றிய செய்திகள் பெரிதாகத் தென்படவில்லை. என்ன செய்கின்றன ஆப்பிரிக்க நாடுகள், அங்கு கொரோனா நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரப்படி கொரோனா அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தீவிரமாக ஆட்கொண்டுள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் கொரோனா தாக்கத்தின் உச்சத்தில் இருந்து வருகின்றன. ஆசிய நாடுகள் யாவும் கொரோனாவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. சீனாவைத் தவிர்த்து மற்ற ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் இன்னும் தீவிரமான தாக்குதலைச் சந்திக்காத போதிலும், அப்படியான நிலையைத் தடுக்க கடுமையாகப் போராடி வருகின்றன. இந்தநேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பற்றிய செய்திகள் பெரிதாகத் தென்படவில்லை.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சத்ய நாராயணன் என்ற வாசகர் ”கரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளை பாதிக்கவில்லையா... அதுகுறித்து செய்தி எதுவும் இல்லையே?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். அந்த கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
#DoubtofCommonMan
#DoubtofCommonMan

நேற்று வரை (9.4.2020) ஆப்பிரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,988. அதில் 1,467 பேர் குணமான நிலையில், 576 இறப்புகளைச் சந்தித்துள்ளது ஆப்பிரிக்கக் கண்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 1,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 18 இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. இரண்டாம் இடத்தில் உள்ள அல்ஜீரியாவில் 1,572 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 205 ஆக உள்ளது. அதற்கடுத்த இடங்களில் 1,560 நோய்த் தொற்றாளர்கள் 103 இறப்புகளுடன் எகிப்து, 1,275 நோய்த் தொற்றாளர்கள் 93 இறப்புகளுடன் மொராக்கோவும் உள்ளன. மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் குறைவுதான்.

Corona Screening
Corona Screening
கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா? 
#DoubtOfCommonman

ஆப்பிரிக்க கண்டத்தில் பிப்ரவரி 14 -ல் (Egypt) முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 25-ல் அல்ஜீரியாவில் முதல் பாதிப்பு பதிவானது. பிப்ரவரி 25 அன்று இத்தாலியிலிருந்து அல்ஜீரியா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை தனி விமானம் மூலம் இத்தாலிக்கு அனுப்பி வைத்தது அல்ஜீரியா. அதன் பின்னர் மார்ச் 2-ல் அல்ஜீரிய மக்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பிறகு வேகமாகப் பரவி வருகிறது.

Representational Image
Representational Image

மார்ச் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகியது. மார்ச் 15-ம் தேதி பள்ளிகளை மூடியதோடு, 50 பேருக்கு மேல் நிகழ்ச்சிகளில் கூடக் கூடாது, பொது போக்குவரத்து யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றெல்லாம் அறிவித்தார் தென்னாப்பிரிக்க பிரதமர் சிரில் ராம்போஸா (Cyril Ramaphosa). அதன் பின்னரும் கொரோனா பாதிப்பு கூடவே, மார்ச் 26-ல் இருந்து ஏப்ரல் 16 வரை 21 நாள்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்தார்.

ஆப்பிரிக்காவில் எபோலோ நோய் தீவிரமாகப் பரவிய பின்னர், இது போன்ற நோய் பரவினால் தீர்வு காணவும், எதிர்கொள்ளவும் `Africa centre for disease control and prevention' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் முதல் பாதிப்பு பதிவாகும் முன்னரே கொரோனாவுக்கான தனிப்பட்ட குழு ஒன்றை இந்த அமைப்பு உருவாக்கியிருந்தது. African Taskforce for Corona virus என்று பிப்ரவரி 5-ம் தேதியே இந்தக் குழு ஒருங்கிணைக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனமும் ஆப்பிரிக்காவின் மேல் தனி கவனம் செலுத்தி வந்தது. ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வழங்குவது, ஆப்பிரிக்க மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனாவை எதிர் கொள்வதற்கான மருத்துவப் பயிற்சிகளை வழங்குவது என உலக சுகாதார நிறுவனமும் ஆப்பிரிக்காவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தது.

Healthcare workers in africa
Healthcare workers in africa

உலகிலேயே குறைவான மருத்துவ வசதிகள் கொண்டவை ஆப்பிரிக்க நாடுகள். கொரோனாவை முதல் நிலையிலேயே கட்டுப்படுத்தவில்லை எனில் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை அங்கு. ஏறத்தாழ 43 சதவிகிதம் ஆப்பிரிக்க மக்கள் மிகுந்த நெரிசலான பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதோடு குறைவான மருத்துவ வசதியும் சேரும்போது நிலைமை மேலும் மோசமாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி 10,000 பேருக்கு 2.1 மருத்துவர்கள்தான் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளனர்.
கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் ?#DoubtOfCommonMan
Africa
Africa

உலக வங்கியும், இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் (International Monetary Fund) அமைப்பும் 39 ஆப்பிரிக்க நாடுகள் கட்ட வேண்டிய கடன் தொகையை நிறுத்திவைத்து `டெட் ரிலீஃப்’ (Debt Relief) அளித்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் ஆப்பிரிக்க நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என இந்த முடிவை உலக வங்கி எடுத்திருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகள் ஒவ்வொன்றும் கொரோனாவை கட்டுப்படுத்த மிகத் தீவிரமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு வருகின்றன. முழுமையான ஊரடங்கு என்பது ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் இன்று அமலில் உள்ளது. அவற்றுள் போட்ஸ்வானா நாட்டில் (Botswana) ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். லெசோத்தோவில் இன்னும் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, எனினும் அங்கு 28 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் ராணுவத்தின் உதவியுடன்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 10,000 பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா பரிசோதனை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டுள்ளார்கள் என கான்டாக்ட் ட்ரேசிங் (Contact Tracing) செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

#DoubtofCommonMan
#DoubtofCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

அடுத்த கட்டுரைக்கு