ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேட்டோவில் இணையப் போவதில்லை என உக்ரைன் அதிபர் அறிவித்த பிறகும் போரின் தாக்கம் குறைந்த பாடில்லை. கிண்டர்கார்டன் பள்ளி, மருத்துவமனை எனச் சமீபத்தில் ரஷ்யா தாக்கிய வீடியோக்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின. தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக உக்ரைன் மக்கள் பலர் பீதியில் உள்ளனர்.
இந்தப் போர் சூழலைக் கருத்தில் கொண்டு உக்ரைன் நாட்டின் பொதுச் சுகாதார ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தும் நோய்க்கிருமிகளை அழிக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அந்நாட்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்களிடையே நோயைப் பரப்பும் 'எந்தவொரு சாத்தியங்களையும்' தடுக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யத் துருப்புகளின் நகர்வும் குண்டுவீச்சு அபாயங்களும் அதிகரித்து வரும் நிலையில் ஆய்வகங்களில் வைக்கப்பட்டிருக்கும் நோய்க் கிருமிகள் கசிந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதனை முன்னிறுத்தி இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு முன்னும் பின்னும் சுகாதாரம் சார்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் பங்கீடு எந்த அளவிற்கு இருந்தது என்று பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்று கேட்ட போது, உக்ரைனின் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் பொதுச் சுகாதார ஆய்வகங்களுடன் ஒத்துழைத்து வருவதாகவும், தற்செயலாகத் தோன்றும் நோய்க் கிருமிகளை அழிக்கும் முனைப்போடு பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
- சுபஸ்ரீ
பயிற்சிப் பத்திரிகையாளர்
