Election bannerElection banner
Published:Updated:

`வௌவால்களே காரணம்; சீன ஆய்வகம் அல்ல!' - கொரோனா வைரஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த WHO

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2 ( Photo: AP )

பல குற்றசாட்டுகள் எழ அதன் உண்மைத் தன்மையை அறிய சீனாவுக்கே சென்று சர்வதேச நிபுணக்குழு ஆய்வு நடத்தியது. அதில், வௌவாலிடமிருந்துதான் மனிதனுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

உலகை ஓராண்டுக்கும் மேலாகக் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் முதன்முதலில் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது உலகம். கடந்த ஆண்டு சீனாவில் திடீரென கொரோனா பரவத் தொடங்கியபோது இந்த வைரஸ் வௌவால்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கும் அவை மூலமாக மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது. முதன்முதலில் சீனாவில்தான் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டதால், ``இது சீன ஆய்வகத்திலிருந்துதான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. சீனா பிற நாடுகளுக்கு எதிராக நடத்தும் உயிரி போர் இது" என்று ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.

corona virus
corona virus
Pixabay

ஆனால், சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா-வின் நிபுணர் குழு சீனாவுக்கே சென்று ஆய்வுகளை நடத்தியது. அதன் முடிவில் கொரோனா வௌவால்களிடமிருந்தே பரவத் தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் வௌவால்களிடமிருந்து பிற விலங்குகளுக்குப் பரவி அதன்பின்பு மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது. இருப்பினும் எப்படி, எந்த விலங்கு மூலம் மனிதர்களுக்குப் பரவியது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என ஐ.நா குழு தெரிவித்திருக்கிறது.

இப்படியாக கடந்த ஒரு வருடமாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் செயற்கையான ஒன்றல்ல எனவும், அது சீனாவின் ஆய்வகத்திலிருந்து வெளியாகவில்லை எனவும் உறுதி செய்திருக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிக்கை குறித்து பேசிய ஐ. நா தலைவர் அன்டோனியா குடரெஸ், இந்த ஆய்வின் முடிவை உறுதிசெய்ய இன்னும் முழுமையான கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருக்கிறார்.

WHO
WHO

கொரோனா வைரஸின் பாதிப்புகள் ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில் இன்னும் உலகின் பல நாடுகளில் வைரஸின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இரண்டாம் அலைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில்தான் கொரோனாவின் தொடக்கம் குறித்த ஐ.நா-வின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு